Feeds:
Posts
Comments

Archive for the ‘பெண்ணியம்’ Category

அந்நிய தேசத்தில் வசிக்கும் ஒரு இல்லத்தரசியின் சராசரி அன்றாட வேலைகள்

௦.நான்கு அல்லது ஐந்து மணிவாக்கில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ,எளிய முறையில் ஒரு பூஜை செய்வது (இதை எதுக்கு விடணுங்கறேன் )
1. காலையில் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அனுப்ப தயார் செய்வது .
2 . வீட்டினருக்கு காலை சிற்றுண்டி தயார் செய்வது (அதை கண்ணனுக்கு படைத்து பின்பு எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது )
3 .கணவர் மற்றும் பிள்ளைகளை இரயில் வண்டி நிறுத்தம் மற்றும் பள்ளிக் கூடங்களில் முறையே விடுதல் மற்றும் அழைத்து வருதல்
4. வீட்டை (முன் தினம் குழந்தைகள் செய்த அமளி துமளியை) சீராக்கி நேர்த்தி செய்வது
5 . எல்லோரின் படுக்கை அறையையும் சீராக்குவது
6. குளியலறை மற்றும் கழிவறைகளை சுமாராகவேனும் இருக்கும்படி சுத்தம் செய்வது
7. (முடிந்தால் மீண்டும் ஒரு தரம் குளித்து ) , டைனிங் டேபிள் மற்றும் சமையலறையை சுத்தம் செய்வது
8 . மதிய உணவு தயார் செய்வது .. இடையில் பால், காய் கறிகள், பழ வகைகள் முதலானவை தீர்ந்து விட்டிருந்தால் வாங்கி வருதல்
9 . மதிய உணவை கண்ணனுக்கு படைத்து எல்லோருக்குமென எடுத்து வைப்பது
10 . வீட்டில் என்னை போன்றோ ஏதேனும் கை குழந்தைகளை வைத்திருந்தால் அவர்களுக்கு சோறு தண்ணி ஊட்டுவது பல வேலைகளுக்குச் சமம் ..எனவே அவர்கள் தொடர்பாக வேலைகளை செய்வது
11 . இதற்குள் மூன்று மணிக்கே பெரிய இது போல குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து விட்டு விடுவதால், அவர்களைசென்று கூட்டி வருதல்
12 . மீண்டும் அவர்களை பால் குடி என்று ஒரு பாட்டு பாடி குடிக்க வைத்தல், மதியம் பள்ளியில் ஏதும் சாப்பிடாமல் விளையாடி விட்டு வந்து வீட்டில் நம் பிராணனை எடுக்கும் பிரணவ் போன்ற குழந்தைகளை சாப்பிட வைத்தல் .
13 . அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தபடி அவர்களோடு கொஞ்சம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் சொல்லும் விளையாட்டை சேர்ந்து விளையாடுதல்
14 . இரவு டின்னருக்கு ரெடி செய்தல் மற்றும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல்
15 . குழந்தைகளை ஸ்விம்மிங், இசை தொடர்பான ஸ்பெஷல் கிளாசிற்கெல்லாம் கூட்டிச் செல்லல்
16. இரவு உணவு சமைத்து , கண்ணனுக்கு படைத்து அதை எல்லோருமாய் அருந்துதல்
17 . இடையில் குழந்தைகளுக்கு நமது பராம்பரியத்தை கட்டிக் காக்கும் வண்ணம் சில சுலோகங்களையும் கீர்த்தனங்களையும் கற்றுத் தர மல்லுக் கட்டுதல்

அடப் போங்கப்பா நானே லிஸ்ட் இப்படி போயிட்டே இருக்கும்னு நினைக்கலை .. இதுல துருவ் போன்ற குழந்தைகள், பாவம் நம்ம அம்மாவுக்கு இந்த வேலைகளை செய்வதற்கே நேரம் இல்லை ..அதனால எதுக்கு அப்ப அப்ப வரும் தொலை பேசி அழைப்புகளை எல்லாம் கவனித்துக்கொள்வது என்று பெருந்தன்மையோடு வீட்டின் ப்ளக்கை எல்லாம் அதன் பாயிண்டில் இருந்து பிடுங்கி எரிந்து விடுவதை கவனித்து சரி செய்வது .. வாரந்திர பூஜைக்கு வேலைகளை செய்வது .. அலமாரிகளை ஏறக் கட்டுவது ..துணிகள் துவைப்பது, பாத்திரங்கள் கழுவி துடைத்து அதனதன் இடத்தில் வைப்பது ..துணிகளை காய வைத்து மடித்து எடுத்து வைப்பது போன்ற பெரிய வேலைகளில் எனக்கு பிரேம் நிறைய உதவி செய்வதால் , இந்தப் பதிவும் என்னை ஒட்டியே எழுதி இருப்பதால், கொஞ்சம் லிஸ்டில் இருந்து தள்ளி இப்படி போட்டு இருக்கிறேன்.. பலர் வீடுகளில் இவற்றையும் பெரும்பாலும் பெண்களே செய்கிறார்கள்..

ஏதோ எனது அதிர்ஷ்டம், எங்கள் வீட்டில் இந்த வேலைகளில் அவர் எனக்கு உதவியே இதுவரை செய்து கொண்டிருக்கிறார் ..நானே பெரும்பாலும் செய்வது சமைப்பது , பாத்திரங்களை சுத்தம் செய்து அதனதன் இடங்களில் வைப்பது போன்றவை தான் (துணி காயப் போடுவது , வீட்டை வாக்யூம் கிளீனர் உதவி கொண்டு சுத்தம் செய்வது பெரும்பாலும் ப்ரேமே செய்வார்) !

இதில் வேலைக்கு போக வில்லை என்றால் ஏதோ வீட்டில் வெட்டியாய் அமர்ந்து கொண்டு ஏதோ கதை பேசிக் கொண்டிருப்பது (அல்லது இப்படி ப்ளாக் நடத்துவது ) போல் யாரேனும் சொல்லக் கேட்டால் , ரத்தமே இல்லாத எனக்கும் ரத்தம் கொதிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் சொல்லுங்களேன்?

தம் தம் மனைவிமார்கள் வேலைக்கு போவதால் , தங்கள் வீடு இருக்கும் கதியை அன்றாடம் பார்த்துக் கொண்டிருப்பதால் , இவர்களுக்கெல்லாம் எங்களை போன்ற படித்து பொறுப்பாய் தங்கள் திறமைகளை, இப்படி இல்லத்தையும் குடும்பத்தையும் நிர்வாகிக்க உபயோகப் படுத்திக் கொள்ளும் பெண்கள் மீது ஏதேனும் வெண் பொறாமை இருக்குமோ என்றே சந்தேகம்.. 🙂 வருகிறது …!

ஏன் படித்து விட்டு வீட்டில் திறமைகளை வீணாக்கிக் கொண்டு இப்படி சும்மா இருக்கிறேன் நான் என்று இது போன்றவர்கள் கரிசனத்தோடு கேள்வி கேட்பது போல் கேட்கும்போது, பிரேமும் அவர் பங்கிற்கு “சோ சோ “என்று சொல்லி அவர்கள் சென்றதும் அவர்கள் பங்கையும் சேர்த்து என்னிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது எங்கள் வீட்டில் அவ்வப்போது நடக்கும் அன்றாட அலுவல்களில் சேர்த்தி .. 🙂

எனவே இல்லத் தரசிகளை வெறும் பாவ்லாவோடு நில்லாமல் உண்மையான புரிதலோடு வெகுவான மரியாதையோடு பார்க்கக் கற்றுக் கொள்வது நலம் ..!

இது இல்லத்தரசிகளுக்கு சேர்த்தே சொல்வது ..!

ஏதோ வெளியில் சென்று வேலை செய்ய முடியாதவர்கள் தாழ்வுணர்ச்சியில் குருகுவதும், எனக்கு இன்னமும் இத்தனை படித்தும் , இத்தனை வாலண்டியர் வேலைகள் செய்தும், இத்தனை இன்டர்வியூக்கள் பண்ணியும் சுமாராய் கூட ஒரு வேலை கிடைக்க வில்லை என்று புலம்புவதும் எனக்கு பரிதாபத்தை விட எரிச்சலையே அதிகம் கிளப்புகிறது .

இதில் தங்கள் குழந்தைகளை கூட ஒழுங்காய் நேர்த்தியாய் வளர்பப்தில்லை .. இவர்கள் வீட்டில் சும்மா இருந்தாலும் , பள்ளி முடிந்ததும் குழந்தைகள் நேராக வீட்டிற்குக் கூடச் செல்வதில்லை .. இவர்கள் குழந்தைகளை “ஆப்டர் ஹார் டே கேர்” எனும் குழந்தைகள் காப்பகத்தினர் வந்து தானே நேராக கூட்டிச் செல்லும்படி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள் 😦 .. குழந்தைகள் வீட்டிற்கு வந்தால் இவர்கள் கணிபொறி முன் அமர்ந்து வேலை தேட முடியாதாம் … (கிருஷ்ணா கிருஷ்ணா .. என்ன செய்வது நான் ..இப்படி பதிவிடுவதை விட.. )

இவர்கள் வீடுகளுக்கெல்லாம் செல்ல நேரும்போது சில நேரங்களில் அது இருக்கும் கோலத்தில் நமக்கே அவர்களை நினைத்து ஒரு வித பரிதாபமும், தர்ம சங்கடமும் வந்து விடுகிறது .. தங்கள் வீட்டை கூட ஒழுங்காய் நிர்வகிக்கத் தெரியாத இவர்களை நம்பி யார் வேலை கொடுக்கப் போகிறார்களோ என்று அவர்களுக்கு எதிர் காலத்தில் வேலை தரப் போகும் அந்தப் புண்ணியவான்கள் (??? பாவப் பட்டவர்கள்) மீது பரிதாபமே சுரக்கிறது ..

அப்பறம் இங்கு குறிப்பிட்டிருக்கும் லிஸ்டெல்லாம், வெறும் அன்றாட வேலைகள் மட்டுமே வாராந்திர , மாதாந்திர மற்றும் வருடாந்திர வேலைகள் எல்லாம் இதில் சேர்க்க வில்லை (சின்க், பாத்ரூம், டாய்லெட்டுகளை முறையாகச் சுத்தம் செய்வது, வீட்டு டைல் கிளீனிங் செய்வது , ஒட்டறை அடிப்பது , ஸ்ப்ரிங் க்ளீனிங் செய்வது, தோட்ட வேலைகள், எக்செட்ரா எக்செட்ரா .. கிருஷ்ணா .. மை ஹெட் ஸ்பின்ஸ் )

முக்கியம் : இதில் ஏதேனும் விட்டுப் போயிருந்தால் நீங்களும் சேர்க்கலாம் .. 😦

Advertisements

Read Full Post »

இந்த உரை கவிதையை எழுதி கிட்டத் தட்ட ஆறு வருடங்கள் ஓடி விட்டது. இந்தக் கவிதையில் சில மாற்றங்களை மாத்திரம் செய்து இங்கு பதிவிடுகிறேன்.. எனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை .. என் சகோதரிகள் இருவருக்கும் பெண் குழந்தைகள் மாத்திரமே ..எங்கள் வீட்டிலும் நாங்கள் மூவரும் பெண் குழந்தைகளே ..( ஹி ஹி .. எங்க அம்மா எங்களை இன்னமும் குழந்தைகள் என்று தான் சொல்கிறார்கள் 🙂 ..)

பிரேமிற்கும் பெண் குழந்தை தான் வேண்டும் ..என்று ஆசை .. 😀

இந்தக் கவிதையை நான் கன்சீவ் ஆன மூன்றாவது மாதத்தில் தொடங்கி சிட்னியில் இருந்த ஆறு மாதம் வரை அவ்வப் பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் எழுதியது .. கல்யாணமான புதிதில் நிறைய பெண்ணியல் குறித்த கவிதைகள் எழுதி இருப்பேன் ..

ஆணின் அடக்கு முறையால் பெண்கள் தவிப்பது போல.., வீட்டுக் கைதியாய் பெண்கள் வாடுவது போல அவை எல்லாம் இருக்கும் .. படித்த என்னுடைய சில நண்பர்கள் பிரேம் தான் என்னை ஏதோ கஷ்டப் படுத்துவதாய் நினைத்து தீவிர விசாரணையில் இறங்கி என்னை தொடர்பு கொள்ள ..நான் அவரிடம் தொலை பேசியை கொடுத்து விட்டு ஓடி விடுவேன்.. 😉

அவருடன் பேசிய பிறகு என் நண்பர்களுக்கு எல்லாம் பிரேமை ரொம்பப் பிடித்து விட்டு என்னை ஓரம் கட்டும் அநியாயம் நடக்க ஆரம்பித்தது.

என் நெருங்கிய நண்பன் என்னிடம் கேட்டது ..”அதெப்படி … நீயே அனுபவித்தது போல எழுதற ஷ்யாம் .. நான் கூட ஆரம்பத்தில் கொஞ்சம் பயந்துட்டேன் ..உன்னை கூட ஒருத்தர் கொடுமை படுத்தராரே என்று ”

நான் : அதென்ன உன்னை கூட ஒருத்தர் கொடுமை படுத்தராரே ..?

நண்பன் : ஹி ஹி ..

அனுபவங்கள் என்பது நாமே அனுபவிப்பது இல்லை ..நம்மால் அனுபவிக்கப் படுவது என்று தான் நான் கருதுகிறேன் .. நெருப்பில் கை வைக்காமலே அது சுடும் என்று சொல்வது போலத் தான் அது..

சரி மொக்கை போதும்..விஷயத்திற்கு செல்வோம்..

இதோ பிரணவ் குட்டி வயிற்றில் இருந்த போது எழுதின கவிதை ..( கவிதைனு ஒத்துக்கோங்கப்பா .. அதனால் ஒன்றும் பெரிய loss ஆகி விடாது .. 😀 )

என் சின்னஞ்சிறு கண்மணிக்கு

என் சின்னஞ்சிறு
கண்மணிக்கு
அம்மா எழுதுவது ..
இன்றோடு நீ உதித்து
பதினோரு வாரம்..
என் வயிற்றில் நீ
இனியதொரு பாரம் ..!

தாயும் பிள்ளையும்
என்றாலும்
வாயும் வயிறும்
வேறாம்..!
சொல்பவர்கள்
சொல்லட்டும்
அவர்களுக் கென்ன
தெரியும் ..
உன் பசிக்கு
என்றே உண்டு
உன் உறக்கம்
மட்டும் உறங்கி
உனக்காகவே வாழும்
நம் ஓருடல் ஈருயிர் வாழ்வு ..!

முதன் முதலில்
உன்னை
மின் ஓவியமாய்
பார்த்தேன் நேற்று ..
பார்த்ததும் நெஞ்சுக்குள்
ஆசையின் ஊற்று ..
என் வயிற்றுக்
கத கதப்பில்
கருவறைக்குள்
சுகமாக நீந்திக்
கொண்டிருந்தாய் நீ ..
வார்த்தைகள் அற்ற
பரவசத்தினில் நான்..!

இரண்டே
அங்குலம் தான்
இருப்பாய் என்றார்கள் ..
ஆனால் அதற்குள்ளே
எத்தனை ஆக்ரமிப்பு
எனக்குள்ளே நீ..!!

கனவுகளில் கண்ட
உன் முகத்தை
கணிப்பொறி காட்டிய
கணம் அழியாத
புகை படமாய்
கைகளில் ஒன்றாக ..
என் நினைவுகளில்
ஆயிரங்களாக ..!

அவ்வப் பொழுது
தலை சுற்றல் ..
எப்பொழுதும் வருவது
வாந்தி மயக்கம் ..
உடல் களைத்திட்டாலும்
உள்ளம் மகிழ்கிறதே..
என்னில் நீ
இருக்கிறாயோ
அல்லது உன்னில்
நானிருக்கிறேனோ
என்று என்னை நான்
கேட்கின்றபோது
நம்மில் நாமிருக்கிறோம்
என்று செல்லமாய்
கூறி வயிற்றுக்குள்
எட்டி உதைக்கிறாய் நீ..
உன்னிடம்
உதை படுவதும்
சுகமாய் தான்
இருக்கிறது எனக்கு..!

நூலகம் நுழைந்து நான்
தேடுவதெல்லாம் ,
“காட்டுக்குள்ளே திருவிழா”
“வன தேவதையும்..
விறகு வெட்டியும் ” .. தான்
“பாட்டி வடை சுட்ட
படக் கதை”- யும்
தவறுவதில்லை..
கூடவே பிடிபடாத
கணக்குப் பாடத்தை
சிரத்தையுடன்
செய்கின்றேன்..
அம்மாவின் ஐக்யூ தான்
குட்டி பாப்பாவிற்கும்
வந்து விடுமென்று
சொன்னதினால்
வந்த பயம்..!!

காத்திருப்பு
என்றுமே சுகமாய்
இருந்ததில்லை ..
ஆனால் இப்பொழுது
இருக்கிறதே
வெகு பரவசமாய்..
இன்னமும் ஏழு
மாதங்கள்
இருக்கிறதாம்..
முழு நிலவாய்
உன்னை மண்ணில்
நான் காண்பதற்கு ..!
என் கருவறையின்
கத கதப்பில்
இதயத்தின்
தாலாட்டில்
சுகமாகத் திரியும்
உன்னை நிரந்தரமாய்
சிறையில் தள்ள
காத்திருகின்றேன் நான் ..!

பயந்து விடாதே ..
இது அன்பெனும்
கம்பிகள் கொண்ட
நம் குடும்பமெனும்
பாச(அ)றை ..!
இதற்குள் என்றைக்கும்
பிணைக் கைதிகளாய்
நானும் உன் அப்பாவும் ..
விரைவில் நீயும் …!
இருப்பாய் தானே..?
நீ இருப்பாய்
என்கின்ற
நம்பிக்கை தான்
எங்கள் வாழ்வாதாரம்..!!

நீ பெண்ணாக
இருப்பாய் என்று
உன் அப்பா ‘சகி’
என்று பெயரிட்டார்..
ஒவ்வொரு நாளும்
நீ அழகாய் வளர்ந்திட
என்னுடன்
இணைபிரியாத ஓர்
ஒப்பந்தம் இட்டார்..
ஆனால் நீயோ
ஆண் குழந்தையாம்..
மருத்துவர்
சொல்லிவிட்டார்..
இப்பொழுது
பிரணவ் என்று
மாற்றி உன்னை
அழைக்கிறோம் ..
உயிரில் இருந்து
உயிராக வந்தவன்
என்பதால்
மட்டும் இல்லை..
பெண்மையை
உயிராய் மதிப்பாய்
என்பதனாலும் தான்..

உன்னை பெண்ணாக
பாவித்து சில நாட்கள்
வாழ்ந்ததினால்
பெண்ணின் உணர்வுகளும்
உனக்கு புரிந்திடவே
செய்யும் என்று நம்புகிறேன் ..
அன்னையின் கருவுக்குள்ளே
வேதங்களே கற்றிடுமாம்
சிறு குழந்தை ..
நீ பெண்ணியலா
கல்லாமல் இருந்திடுவாய்..

என் விருப்பு நான் மறந்து
உன் வளர்வில்
மனம் நிறைகின்றேன்..
எனக்கென்ற கனவுகள்
இருந்தது ஒரு காலம்..
நிஜமென நீ இருக்கையில்
கனவுகளும் நீயாய் போனாய் ..!

ஒவ்வொரு மாதமும்
வளர்வது
நீ மட்டுமல்ல ..
உன்னுடன் நானும் ..
உன் அப்பாவும் தான்..!
கூடவே சில சிரமங்களும்..
நிஜங்களையும்
நீ அறிந்திடவே
நான் இதனை கூறுகின்றேன்..
உன் வாழ்கை
தேன் கிண்ணமாய்
தித்திப்புடன் மட்டுமே
என்றென்றும் இருக்கும்
ஓயாமல் உழைக்கும்
தேனீக்களாய் நானும்
அப்பாவும் இருக்கும்வரை..!

பிரதி பலனாய்
நான் கொஞ்சம்
எதிர் பார்க்கவும்
செய்கிறேன் கண்ணா,
நீ ஆண் என்று
அறிந்ததில் இருந்து ..!
முட் கிரீடத்தை
சூட்டி விடுவேன்
என்று
நினைத்து விடாதே !
ஒவ்வொரு
பெற்றோருக்கும்
ஒரு சில கனவுகள்
இருந்தே தீரும்..
சிலர் சொல்கிறோம்..
சிலர் மறைக்கிறோம்..!

தலைப் பிரசவம்..
பிழைத்தால்
எனக்கிது மறு ஜன்மம்..
இல்லாவிடின் மறு ஜனனம் ..
என் உயிர் ஊட்டி
உன் உடல் வளர்க்கிறேன் ..
என் பிரதி பலிப்பாய்
இருந்திடுவாய்
என்பதால் அல்ல..
உனக்கொரு முகவரியுடன்
தனித்துவமாய் இருப்பாய் என்று !

எப்போதும் நினைவுகொள் ..
ஆணிற்குப் பெண்
என்றைக்கும் சமமில்லை..
தாயாகும் பெண்ணிற்கு
வேறொன்றும் ஈடில்லை ..
உடன்படு..அதனால் கடன்படு ..
உயிர்பட்ட கடனை
எல்லா உயிர்களிடத்தில்
சமத்துவ அன்பு காட்டி
வட்டியுடன் தீர்…!

நியூட்டன் , எடிசன்
ஐன்ஸ்டீன் அறிவுடன்
இருந்திடாமல் போனாலும்
புத்தர், காந்தி
தெரசா பணிவுடன்
என்றென்றும் வாழ்ந்திடு ..
போலித் தனம் தவிர்…
மொழி வெறி, இன வெறி
நிற வெறி , மத வெறி
ஏதும் இல்லாத புதியதொரு
உலகம் சமைத்திடு ..
அதில் சமாதானப்
பூக்களை
நாளும் வளர்த்திடு
பின்பு எனக்கு கொள்ளியிடு…..!

இப்படிக்கு
உன்னிடம் இருந்து
நிறைய்ய்ய எதிர்பார்க்கும்
உன் சுயநலக்கார
அம்மா

பின் குறிப்பு : எனக்குப் பேத்திகள் பிறக்கும் போது பெண்ணியல் எனும் இந்த சொல் வழக் கொடிந்த வார்த்தைகள் ஆக வேண்டும் என்பது என் ஆசை.

டியர் பிரணவ்,
எனக்கும் மத்த அம்மாக்கள் மாதிரி எதையும் எதிர் பார்க்காமல் அன்பை மாத்திரம் பொழிய ஆசை தான் ..But நான் அப்படி இல்லைடா ..அப்படி இருக்கிறேன் நான் என்று சொன்னால் அது போலியாய் சொல்வது ..

So Sorry ..நீ வயிற்றில் இருக்கும் போது கூட பெண் குழந்தையாய் நீ இல்லாமல் போனாயே என்று சின்னதாய் வருந்தியதற்கு ..பட் பிரணவ் …எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா….?


If I say I love you upto sky , Then it is not a proper measurement of my love…I love you as much as I love your daddy .. and I love him as much as I love Krsna .. 😀 !!

இன்னமும் ஒன்பது நாளில் உங்களுக்குப் பிறந்த நாள் வருகிறது .. சோ நிறைய உங்களை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்..நீங்க என்னில் ஏற்படுத்திய மாறுதல்களை யாருமே ஏற்படுத்தியது இல்லை ப்ரெஷி செல்லம் ..

I am happy and fortunate to be your mom ..!!

Read Full Post »

பெண்ணியத்தில் என் வரிகள் -இங்கிலீஷ்காரன்

பெண்களுக்கு ஆண்களினால் நிகழ்த்தப்படும் கொடுமைகள் அதற்கு எதிராக ஆண்களின் குரல்கள்… இப்படி என்னுடைய ஒரு பதிவின் அளவுக்கு உள்ள தலைப்புக்கு ஒரு பதிவு எழுத என்னையும் பொறுப்பான பதிவராக மதித்து அழைத்த ஜானு அக்கா அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள் முதலில். ஒ.கே இதை பொறுமையா படிக்க போற உங்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள் (போதுங்களா?!)…சரி விஷயத்துக்கு வருவோம். இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர் வேற.. அதனால கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.

நம்ம நாட்டில் மட்டும் தான் பெண்கள் கொடுமைப் படுத்த படுகிறார்கள் என்று இல்லீங்க.

உலகம் முழுவதும் இந்த கொடிய செய்கை நிறைந்திருக்கிறது என்பதற்கு சில சான்றுகள் முதலில்.

1) ஆஸ்ட்ரியா என்ற நாட்டில் ப்ரிஸ்ல் என்ற ஆள் தந்து மகளான எலிசபெத் என்பவரை 24 வருடம் இருட்டிய அறையில் அடைத்து வைத்து தனது மகளுடனே உறவு கொண்டு பிறகு தனது மகள் மூலமே ஏழு குழந்தைகளுக்கும் தகப்பன்?! ஆகியிருக்கிறான்.இத்தனைக்கும் இந்த ஆள் நன்கு படித்த ஒரு எலெக்ட்ரிகல் இன்ஜினியர். எலிசபெத் தப்பிக்க முடிந்தது அவரது மூத்த மகளின் உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ப்ரிஸ்ல் அனுமதித்ததன் மூலமே. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? முழுக்க முழுக்க மரபணுக் கோளாறு தான் என்கிறது மருத்துவ குழு. இருப்பினும் இநத்தகைய காமக் கொடூரனை என்ன செய்ய முடியும்?

2) நவம்பர் 11 2001 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த சம்பவம் இது. சிறு குழந்தைகளுடன் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் எய்ட்ஸ் நோயிலிருந்து குணமாகி விடலாம் என்ற மூட நம்பிக்கையின் காரணமாக 22 முதல் 66 வயது ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்பது மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

3) அதே வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி ஒரு மாதக் குழந்தையை அதன் தாய் மாமன்களே கொடூரமாக கற்பழித்து இருக்கிறார்கள்.அதை விடக் கொடுமை இந்த கயவர்களால் எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்ட பெண் குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார்கள் என்பது தான். இதற்கு என்ன தான் தீர்வு?

வெளிநாட்டுக்கு எல்லாம் ஏனுங்க போகணும் நம்ம உள்ளூர் சமாச்சரதையே பாருங்க.. அட அதாங்க மங்களூர் மேட்டரு… பப்புகளில் பெண்கள் தாக்கப் பட்ட நிகழ்வு… இதற்கு யாருங்க காரணம்? பெண்கள் தங்களுக்கு கொடுக்கப் பட்ட சுதந்திரத்தை முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்குமா? வெறும் பப்புகளிலும், பார்களிலும் தான் பெண் சுதந்திரம் அடைக்கப் பட்டிருக்கிறதா?

இதெல்லாம் விட பெரு நகரங்களில் பெண்கள் சந்திக்கும் தினசரி போராட்டங்கள் சொல்லி மாளாது. வேலைக்கு செல்லும் போது பேருந்தில் ரோமியோக்கள் செய்யும் சில்மிஷங்கள், அலுவலகத்தில் வழியும் சக பணியாளர்கள், சாலையில் நடக்கும் போது சமாளிக்க வேண்டிய ரோடு சைடு ரோமியோக்கள் என காலை முதல் மாலை வரை ஒரு பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேற்கொள்ளும் இன்னல்கள் தான் எத்தனை. மறக்கமுடியுமா பெங்களுருவில் நைட் ஷிப்டுக்கு செல்லும் போது சார் டிரைவரால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பிரதிபாவை?

அத்தனை பெண்களும் ஆண்களுக்கு சரி நிகராக பாருக்கு சென்றால் தான் அவர்களுக்கு உரிமை கிடைத்து விடப் போகிறதா? ஆண் இது போன்ற விஷயங்களில் ஈடு படுகின்றான் எனில் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க அவனுக்கு இயற்கையிலேயே அவனது உடலில் பலம் இருக்கிறது. ஆனால் பெண்களுக்கோ இயற்கையிலேயே ஆண்களை விட மனோபலம் தான் அதிகமே தவிர உடல் பலம் இல்லை. அதே போல ‘ஸ்ரீராம் எதோவின்’ தாக்குதல்களும் ஏற்புடையதல்ல. ஒரு மனிதன் தானாக திருந்தினால் ஒழிய அவனை/அவளை வற்புறுத்தி திருத்த முடியாது.

இன்னொரு விஷயம் வெள்ளிகிழமைகளில் அலுவலகத்துக்கு பெண்கள் அணிந்து வரும் ஆடை. கேஷுவல்ஸ் டிரஸ் என்று பாலிசி கொண்டு வந்தாலும் கொண்டுவந்தார்கள், பெண்கள் முக்கால் பேண்டை அணிந்து வரத் தவறுவது இல்லை. இரட்டை அர்த்த வாசகம் பொறிக்கப் பட்ட டி.ஷர்ட், அங்கங்களை வெட்டவெளிச்சமாகக் காடும் இறுக்கமான உடைகள்..இவை தேவையா இளம் யுவதிகளே? நீங்கள் ஜீன்ஸ் பேன்ட், டி -ஷர்ட் அணிந்து வாருங்கள். அடுத்தவர் கண்ணை உறுத்தாதவாறு அணிந்து வாருங்கள். எங்கள் அலுவலக பெண்களையே ரயிலில் வரும் பொறம்போக்குகள் தரைக் குறைவான விமர்சனங்கள் செய்வதை கண்டும் காணாதது போல பேடித் தனத்தை நான் செய்திருக்கிறேன்.

ஆனால் அவர்களிடம் “ஏன்டா இப்படி பேசுறீங்க?” என்று கேட்க எனக்கு உரிமை இல்லை. ஏனெனில் பெண்கள் அணிந்து வந்த உடை அவ்வளவு மோசமாக இருந்தது. இதெல்லாம் சில கசப்பான உண்மைகள் தான். எனவே பெண்ணுக்கு இழைக்கப் படும் கொடுமைகளை குறைப்பதற்கு பெண்களும் தங்களை சில மாற்றங்களுக்கு பழக்கப் படுத்திக் கொள்ள தயாராக வேண்டும்.

உங்களுக்கு பெரும்பாலும் தெரிந்த இத்தகைய சான்றுகளே போதும் என்று நினைக்கிறேன். பல சம்பவங்களை கிளர வேண்டாமே.

டிஸ்கி கேள்வி : ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையுமா? இந்த கேள்வியை வைத்துக் கொண்டு தான் பல புத்திசாலி வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள். (நான் எல்லாத்தையும் சொல்லலீங்கோ. இதனால நீங்க மறுபடியும் கோஷம் போட்டுறாதீங்க.நாடும் தாங்காது, கலைஞரும் தாங்க மாட்டார்.)

பதில் :நுழையும்… ஊசியை இறுகப் பற்றிக் கொள்ள ஒரு விசை இருந்தால்.

இந்த சமாசாரங்களைப் பற்றிய எனது சிந்தனை:

சரி ஒரு ஆண்மகனாக இந்த சமூகத்தில் நான் பிறந்து வளர்ந்து ஒரு மனிதனாக இருப்பதால் இந்த விஷயத்தில் எனது கருத்துக்கள் சில.

பெரும்பாலும் பெண்களுக்கு அநீதி இழைக்கக் கூடிய ஆண்களின் மனோபாவம் பின் வரும் மூன்று வகையில் பிரிக்கலாம்.

1) தான் ஆண் என்ற அகங்காரம் கொண்ட ஆண்மகன் பெண்கள் வெறும் புணர்வதற்கு படைக்கப் பட்டவள் என்று நினைப்பவன். தனக்கு உடல் பசி எடுக்கும் நேரத்தில் இவன் வரம்பு மீற துணிபவன். இவர்களை அவர்களின் உடல் கூறுகளை வைத்தே கண்டு கொள்ளலாம்.

2) சாதரணமாக தோற்றம் கொண்டிருக்கும் சில ஆண்கள் அப்பாவி போல் இருப்பார்கள். ஆனால் சில்மிஷ மன்னர்களாய் இருப்பார்கள். சகஜமாக பேசுவது போல ஆரம்பித்து சந்தில் சிந்து பாட காத்திருக்கும் வகை இவர்கள். இவர்களை அவர்களின் பேச்சை வைத்தே கண்டு கொள்ளலாம்.

3) மூன்றாவது பிரிவு வகையில் உள்ள இவர்களுக்கு பெண்களைக் கண்டாலே பிடிக்காது. பெரும்பாலும் உடல் உளைச்சலை விட மன உளைச்சலை தருபவர்கள் இவர்கள்.

அதே போல கெட்ட வார்த்தைகளில் திட்டுவதிலும் கூட பெண் பாலை முன்னிலைப் படுத்தியே வார்த்தைகள் அதிகம் இருக்கின்றன. இது ஒன்றே போதும் இன்னும் தமிழகத்தில் பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பு இல்லை இது ஆண் ஆதிக்க சமுதாயம் தான் என்று.

இப்போது நான் கூறுவது தலைப்பை சார்ந்து இல்லை என்றாலும் இவ்விஷயத்தில் இதனையும் கூற வேண்டி இருக்கிறது. ஆண்களால் மட்டும் கொடுமைகள் நிகழ்வதில்லை. ஒரு பெண்ணே கூட இன்னொரு பொண்ணுக்கு கொடுமை செய்யலாம் என்பதற்கு மாமியார், மருமகள், நாத்தனார் குடுமிப் புடி சண்டைகள், குழாய் அடி சண்டைகள் மற்றும் இன்ன பிற சான்றுகள் பல இருக்கின்றன.

ஆனால் இதையும் தாண்டி பெண்களை சக மனுஷி என்ற கோணத்தில் பார்க்கும் ஆண்கள் இருக்கவே செய்கின்றார்கள். அவர்களால் தான் பெண் சமுதாயம் இந்த அளவுக்கேனும் முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பதை எந்த பெண்ணும் மறுக்க முடியாது.

ஆணும் சரி பெண்ணும் சரி இவ்வையகத்தில் படைக்கப்பட்ட மானுடப் பிறவிகள். இதில் இருவருமே ஒருவருக்கு ஒருவர் துன்புறுத்தாமல் வாழ்ந்தால் தான் இந்த விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் என்ன ஒரு துரதிர்ஷ்டம் பாருங்கள் இது தான் நடக்காது.

எதோ எனக்கு தெரிஞ்சத எல்லாம் சொல்லிட்டேன். இனிமே பெண்களையும் சக மனிதனாய் பார்ப்பது ஒவ்வொரு ஆணின் நடத்தையில் தான் உள்ளது.அதில் பெண்களும் பங்கும் சிறிது உள்ளது.

இன்னும் நிறைய சொல்லனுமுன்னு நினைக்கிறேன் நேரம் வரும் போது சொல்லுறேன்…

@@@@@@@@@@@@@@@@@@@@@@

இங்கிலிஷ்காரன் என்ற பெயரில் இங்கே பதிவு போட்டு இருப்பது வேறு யாரும் இல்லை ..நம்ம தமிழ் நாட்டு .. ஸ்ரீ ராம் ..இங்கு ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆகணும். நான் ப்ளாக் ஆரம்பித்த போது தமிழில் இவ்வளவு நிறைய ப்ளாகுகள் இருக்கு என்றே உண்மையில் தெரியாது. வோர்ட் ப்ரெஸ்ஸை ஒரு அலசு அலசி ப்ளாகில் வரும் பான்டை(fonts) தமிழ் படுத்த முயன்ற போது தான் டாஷ் போர்டில் ஸ்ரீ ராமின் ஒரு பதிவை பார்க்க நேர்ந்தது.

அதை படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடப் போனால் ..அங்கே குந்தவையின் பெயரை பார்த்தேன் ..எனக்கு உடனே ரொம்ப சுவாரஸ்யமா ஆயிடுச்சு ..ஏன்னா நான் ஸ்ரீ ராம் ..குந்தவை இவர்கள் பெயரில் ஒரு நாவலை ( சரி சரி ..ஒரு மொக்கையை )எழுதிட்டு வரேன் . அப்படியே குந்தவையின் ப்ளாகை போய் பார்த்தேன் ..அப்படியே புவனேஷ் ..கல்யாண கமலா அம்மா ப்ளாக் என்று வலை சரங்களைபற்றிய என் உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் விரியத் தொடங்கியது. எனவே ஸ்ரீ ராமிற்கு முதலில் ஒரு தேங்க்ஸ்..இது என்னடா அநியாயமா இருக்கே ..ஸ்ரீ ராமை பற்றி ஒரு அறிமுகம் தராமல் ஏதேதோ பேசறேன்னு நினைப்பவர்களுக்கு ..அந்த அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாதுப்பா..வயசில் மாத்திரம் தான் நான் சீனியர்..ப்ளாக் நடத்துரத்தில் எல்லாம் இவங்க தான் சீனியர்..

அனுதினமும் அணு ஒப்பந்தம்… என்கிற ஒரு பதிவை ரொம்ப ரொம்ப அழகா எழுதறார். இவரை பற்றி நான் அதிகம் சொல்றதை விட நீங்களே போய் தெரிஞ்சுகறது தான் சரி.

இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள , இங்கு சொடுக்கவும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

Read Full Post »

%d bloggers like this: