Feeds:
Posts
Comments

Archive for the ‘தொடர்கள்’ Category

குறை ஒன்றும் இல்லை -1

நேற்று சக்தி அம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். சிட்னியில் புதிதாய் வந்திருக்கும் கோவில். அங்கு நூறு வருடங்களுக்கும் மேலாக ஒரு கிறிஸ்த்துவ ஆலயம் இருந்திருக்கிறது. அது செயல் படாமல் இருந்து அதை யாரோ விற்றபோது, இறைவனின் மகிமையை உரைத்த அந்தப் புண்ணிய தலத்தை ஒரு புண்ணியவான் வாங்கி , இந்துக்களுக்கு ஆலயமாய் விளங்கட்டும் என்று கொடுத்திருக்கிறார். (இப்ப அங்க இந்துக்கள் நிறைய வசிப்பதால்)

மூலஸ்தானத்தில் சக்தி அம்மன் பெரிதாக நின்றபடி இருப்பார். அவருக்குக் கீழே சிவ லிங்கம் வடிவில் சிவனும், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சிறிய அம்மன் தலை மட்டுமாய் இருக்கும் வடிவம் என்று எல்லாம் அழகாக வைக்கப் பட்டிருக்கிறது. நுழைவு வாசலில் அழகழகாய் விநாயகர், அவர் பக்கம் நடராஜர் மற்றும் உமா , வெங்கடாசலபதி மற்றும் பத்மாவதி தாயார் மற்றும் பக்த ஆஞ்சநேயர் என்று எல்லோரும் இருக்கின்றனர்.

கோவில் புதிது என்பதாலும், பார்ப்பதற்கு வீடு போல் இருப்பதனாலும் இன்னமும் நிறைய பேருக்கு வந்திருப்பது தெரிய வில்லை . பின்ன கிருஷ்ணர் கோவிலுக்கே ஆடிகொரு தரம் போகும் உங்களுக்கு எப்படி இந்தக் கோவில் இருப்பது தெரிஞ்சது ஜானு என்பீர்கள். கிருஷ்ணர் தான் காண்பிச்சு விட்டார். இல்லாட்டி எனக்கெப்படி தெரியும்.

ஏதோ என் மேல் அவருக்கு ஒரு கரிசனம். ஒரு அப்பாக்கு பல குழந்தைகள். ஒரு குழந்தை பெரிய டாக்டர் . இன்னொரு குழந்தை பெரிய சைண்டிஸ்ட். இன்னொரு குழந்தை பெரிய லாயர் . இப்படி ஒவ்வொரு குழந்தையும் பெரிய பெரிய நிபுணர்களாக இருக்கும் போது, ஒரு குழந்தை கொஞ்சம், இல்லை என்னை போல நிறையவே மூளை வளர்ச்சி கம்மியாய் பிறந்து விட்டதாம். அவர் என்ன செய்வார் ? மற்ற குழந்தைகளை விட அதன் மேல் தனி அக்கறை எடுத்துக் கொள்வார் இல்லியா?

இந்தக் குழந்தை அசடாச்சே ! இத நாமளே பத்திரமாய் பார்த்துக்கணும். மத்தவங்களே இதுக்கு சொல்லிக் கொடுப்பாங்க அப்படின்னு நெனச்சால் அவங்களுக்கு இதுக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்க ரொம்பப் பொறுமை வேணும். இது பாட்டுக்கு மூளை வளராத காரணத்தால் கெக்க பிக்கனு எதாவது பேசும், உளறும், சிரிக்கும் இல்லாட்டி ஓன்னு அழ ஆரம்பிக்கும் . மத்தவங்களுக்கு ரொம்ப சிரமம் வேறு . அதனால அவங்க குழந்தைய ஏதாவது தப்பா நெனச்சிட்டா ? அப்படி இப்படின்னு யோசிச்சு ரொம்ப விசேஷ கவனம் எடுத்துப்பார். அந்தக் குழந்தைக்கு தானே எல்லாம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பார். கொஞ்சம் கொஞ்சமாய் அவர் முயற்சியால் அந்தக் குழந்தை மெல்ல மெல்ல அம்மான்னு சொல்லும்.

உடனே அதைக் கேட்டதும் , அதுவரை சோகமாய் உட்கார்ந்திருந்த அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமும் உற்சாகமும் வந்துடும். அவளும் அவ பங்கிற்கு விடாமல் சொல்லிக் கொடுப்பா. இந்தக் குழந்தை அப்பானு சொல்லும். உடனே அப்பாவுக்கு பூரிச்சு போயிடும். மத்தக் குழந்தை எல்லாம் பெரிய வித்துவானை இருந்து பல விருதுகள் வாங்கி இருக்கிறப்ப கிடைக்காத அந்த ஆனந்தம் இந்தக் குழந்தை வெறும் அப்பா, அம்மான்னு சொல்றதிலேயே இவங்களுக்குக் கிடைச்சிடும்.

ஊரையே கூட்டி சொல்வா. என் குழந்தை அப்பான்னு சொல்லிச்சே .. கேட்டியா ? அம்மான்னு சொல்லறதே, ஓடி வந்து அந்த அழகை பாரேன்னு ! அப்பாக்கு நிறைய வேலைகள் இருக்கும் . பெரிய குடும்பத்தை கட்டிக் காக்கணும் இல்லியா. ஒரு குழந்தையை டாக்டருக்கும் என்ஜினியருக்கும் படிக்க வைக்கவே நமக்கெல்லாம் ஆயுசு முடிஞ்சுடுது .. வீடு வாங்க ஒரு லோன் (கடன்) , படிக்க வைக்க ஒரு லோன், பைக் வாங்க ஒரு லோன் , கல்யாணம் பண்ண ஒரு லோன் என்று வாங்குகிற கடனை அடைக்கவே நம்ம அப்பாக்களோட (வேலைக்கு போகிற அம்மாக்களையும் சேர்த்து) ஆயுசு முடிஞ்சடறது ..

ஜகதிற்கே பிதா. அவரை பற்றி கொஞ்சம் யோசிச்சுப் பார்ப்போம். ஒவ்வொரு குழந்தையும் பார்த்து பார்த்து பாது காக்கணும் . இந்த லோகத்தில், ஐன்ஸ்டீன் போன்ற பெரிய சைண்டிஸ்டுகளும் தங்களோட மூளையில் நான்கு சதவிகிதம் அளவிற்கு கூட உபயோகப் படுத்திக் கொள்வதில்லையாம். அப்போ என்னை போன்ற பெரிய புத்திசாலிகளின் மூளை வளர்ச்சி பற்றி சொல்லவும் வேணுமா? அதனால ஜகத் பிதா வான கிருஷ்ணப்பர் ரொம்ப பிசி. அம்மா குழந்தையை நல்லா / நன்றாக பார்த்துக்கறதை பார்த்ததும் அவ பொறுப்பில் நிம்மதியா விட்டுட்டு தன் வேலையை அவர் பார்க்க தொடங்கிடறார்.

*************
பெரும் ஞானத்தோடு ஒரு பிள்ளை ,
வெறும் ஊனத்தொடு ஒரு பிள்ளை
எப்படித் தானிருந்தாலும்
பெற்றவர்க்கு இரண்டும் கண்ணே!
ஞானமது எங்கும் வளரும்
ஊனத்தை யார் மதிப்பார் ?
யாருக்கும் தந்திடாமல்
பெற்றதினால் காதலோடு
பொத்திப் பொத்தி தானே வளர்ப்பார்!
என்னையும் அதுபோலே ஏற்றாயே
என் கண்ணா, என் அப்பா !
நான் மறை வேதம் கற்று,
சாஸ்திரம் முழுதும் அறிந்து,
உன் புகழ் பாடப் பலரும்
புவனத்தில் நிறைந்து இருக்க
என்னிடம் ஏன் உனக்கு
இத்தனைப் பெருங் கருணை ?
அன்னையை கூட்டி வந்து
ஆசானாய் அமர்த்தி விட்டாய் ..
இதோ உந்தன் அப்பா என்று
அன்னை காட்டும் அழகே அழகு!
அவள் பூக்கரத்தைப் பிடித்துக் கொண்டே
தத்தி தத்தி நடை போட்டு
என்றோ ஒரு நாளேனும்
வந்தடைவேன் உன்னிடமே !
அதுவரைக்கும் என்னுள்ளே
இருந்தென்னை காப்பதற்கு
எப்படி நான் கைம்மாறு
இங்கு செய்வேன் பரந்தாமா?
கோபாலா, கோவிந்தா !
ஸ்ரீனிவாசா , ஸ்ரீ ரங்க நாதா !
ஹரி கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே !

**************

ரொம்ப நாளாய் கிருஷ்ணரை பற்றி எல்லோருக்கும் எனக்கு தெரிந்த மற்றும் முடிந்த விதத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ரொம்பப் பெரிய அவா. ஆனா எங்கே, எப்போது , எப்படித் தொடங்கனும்னு புரியலை. கிருஷ்ண பக்தி கொடுக்க கொடுக்க ரொம்பவும் பெருகும் இல்லையா! சும்மா அப்படியே எனக்கு மட்டும்னு வச்சிட்டு இருந்தா, ஸ்விஸ் பாங்கில் இருக்கும் அரசியல் வாதிகளின் கள்ளப் பணம் போல யாருக்கும் பயன் இல்லாமல் போகும் வாய்ப்பு உண்டு இல்லியா? ஆனால் அதுக்கு எல்லாம் நமக்கு தகுதி இருக்கா .. அப்படி இப்படி என்று ஏதேதோ குழப்பங்கள்.

ஆனால் அன்றாடம் அமிர்தத்திற்கும் மேலான ஒரு சுவையை கிருஷ்ணரால பெறுவதும் உண்மை. அதை சொல்லனும்னு மனசு துடிக்கறதும் உண்மை.ரொம்பவும் ருசியாய் பால் கோவாவை கிளரியாச்சு. அதை நானே சாப்பிட்டு எல்லோறிடமும் நான் நல்லா ஒரு ஸ்வீட்டை பண்ணினேன் .. ரொம்ப நல்லா இருந்தது..அது எவ்வளவு ருசி தெரியுமான்னு சும்மா அலட்டிகரதில் மட்டும் என்ன பலன்?

சமையல் காரிக்கு அவர் சமைச்சதை மத்தவங்க சாப்பிடும் போது தானே உண்மையான திருப்தி கிடைக்கும். கிரிஷ்ணர்னாலே வசீகரத்திலேயே பெரிய வசீகரம், வசீகரான்னு பொருள் . அந்தப் பேருக்கு அது தான் பொருள்.

எல்லோரையும் வசீகரித்து தன் பால் இழுக்கும் காந்தம் போன்றவர் என்பதே க்ருஷ்ணா எனும் பெயருக்கான பொருள். மத்த தெல்லாம் பொன்னை போல மின்னும் ஒரு வஸ்து. மின்னு வதெல்லாம் பொன்னாகாதுன்னு இப்ப பிறந்த குழந்தைகளுக்குக் கூட நல்லா தெரிகிறது.

திருமாலின் புகழப் பாட பாட நா மட்டும் இல்லாம நாமும் இனிப்போம் இல்லியா! அந்த வசீகரனுக்கும் அவனது கல்யாண குணங்களையும் லீலைகளையும் நித்யமும் எண்ணிப் பார்க்கும் இந்தத் திகட்டாத சுவைக்கு நான் ரொம்பவே அடிமையாகிப் போயிட்டேன். உண்மையில் அவருக்கு கைம்மாறும் நான் செய்யறதில்லை. கைங்கர்யமும் செய்யறதில்லை. என்னை தான் திருப்திப் படுத்திக்கறேன்.

அப்படி திருப்தி அடயரத்தை மற்ற எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் அந்த பெருஞ்சுவை பெற வைக்கனும்னு சின்ன ஆசை. அதையும் அவரே நிறைவேற்றி வைத்து விட்டார்.

துருவிற்கு முதல் வயது பூர்த்தியானதை ஒட்டி, ஆயுஷ் ஹோமம் செய்தோம். அப்போது வந்த ப்ரோகிதர் இந்த சக்தி அம்மன் கோவில் அர்ச்சகர். நாங்களும் நேத்து அங்கு சென்று சின்னதாய் கீர்த்தனை பாடிட்டு வந்தோம். சக்தி அம்மன் மாதவனோட சகோதரி இல்லியா ! அதான் பூரிச்சு போய் ரொம்பவும் அசீர்வாதம் பண்ணினா. “அத்தை மடி மெத்தையடி “அப்படின்னு சொல்றதன் பொருள் விளங்கியது. தாய் வீட்டிற்கு போய் வந்தது போல் இருந்தது.
“அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா”;
ஆடும் வரை ஆடி விட்டு ஹரி கதை சொல்லம்மா ” என்று அன்னை அன்போடு ஆசீர்வாதம் பண்ணியதால் அடிக்கடி அங்கு வந்து ஹரி கதை மற்றும் கீர்த்தனங்கள் பண்ணுவதற்கு ஒரு வாய்ப்பு கேட்டேன். அர்ச்சகரும் கண்ணனாகவே எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஆசீர்வாதம் தந்தார்.

கிருஷ்ணர் எனக்கு மட்டுமே இல்லை அவருக்கு மட்டுமே என்று சொல்லும்படி எல்லாம் இல்லை. நம்ம எல்லோருக்கும் அவர் தான் அப்பா. பத்மாவதி தாயார் தான் அம்மா. பர லோகப் பிதாவே / ஜெஹோவா அப்படின்னு ஜீசஸ் சொல்றதும் , அல்லா என்று இஸ்லாமியர்கள் சொல்வதும் இவரைத் தான். நம்மை படைச்ச இறைவனுக்கு ஆயிரக்கணக்காய் நாமங்கள். ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு சுலபமாய் , பிடிப்பு வந்திருக்கும் பெயரில் கூப்பிட்டுக் கொள்கிறோம்.

சரியான படிப்பு இல்லாததால் நாம் பகவானை புரிஞ்சு கொள்ரதில்லை. அவர் பேரை சொல்லிட்டு, அவர் பெயரால் யுத்தங்கள் நடத்தறோம். இவ்ளோ பெரிய லோகத்தை படைச்சாரே அவருக்கு கொடியவர்களை அழிக்க ஒரு நொடி ஆகுமா ? நாம எதுக்கு , அந்த வேலையே பண்ணனும்.

ஜிஹாத், புனிதப் போர் அது இதுன்னு ஏதேதோ பேரை உருவாக்கிக் கிட்டு நம்மளுடைய வஞ்சகத்தை தான் நாம பெருக்கிக் கொள்ளறோம் .நம்மைத் திருப்திப் படுத்திக் கொள்ள பகவானை உபயோகப் படுத்திக் கொள்கிறோமே ஒழிய, பகவானைத் திருப்திப் படுத்த முனைந்து அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ , அவர் விரும்பும்படி நடந்து கொள்ளவோ முயற்சிக்கறது இல்லை.

படைத்தவனுக்கே அழிக்கவும் தெரியும். எல்லாம் அவரே பார்த்துப்பார். நாம இருக்கிற இந்த லோகத்தை நன்றியோடு ஒழுங்கா பார்த்துக் கொண்டு, சக மனிதர்களை நேசமாய், அன்பாய், மரியாதையாய் நடத்தி அதோடு நில்லாமல் வெகு சிரத்தையா எப்படி அவரை நேருக்கு நேராய் பார்த்து நித்தமும் அவர் கூடவே நிறைவாய் வாழறதுன்னு மாத்திரம் கத்துக்க முயற்சி பண்ணால் போதும்.

ஸ்ரீ பகவானு உவாச்ச :
“யதா யதா ஹிதர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத் தாந மாதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் ”

பொருள்:
ஸ்ரீ பகவான் சொல்கிறார்:
பரத குமாரனே, எவ்வெப்போழுது தர்மத்திற்கு தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலை தூக்குகிறதோ அவ்வப் பொழுது என்னை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ பாவான்னு உவாச்ச
” பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாப நார்தாய சம்பவாமி யுகே யுகே ”

பொருள்:
ஸ்ரீ பகவான் சொல்கிறார்:
சாதுக்களை காப்பதற்கும் , துஷ்டர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் நானே ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்.

நாம நம்ம வேலையே ஒழுங்கா பார்த்துக் கொண்டால் போதும். இவன் துஷ்டன் , அவன் துஷ்டன் .. இவனை நான் வதம் செய்தால் எனக்கு சொர்க்கத்தில் சுக வாசம் கிடைக்கும்.. இன்பமாக வாழுவேன் என்றெல்லாம் பகவானின் பெயரை வைத்துக் கொண்டு , நம்ம இச்சையைத் தீர்த்துக் கொள்ள இப்படி எந்த சண்டையிலும் ஈடு பட வேண்டியதில்லை.

ஏன்னா நாம மனுஷா. நமக்கு, நமக்கு பிடிச்சதை (அது சரியே இல்லைனாலும்) யாராவது செய்தால் அது தான் உசத்தி, அவர் தான் நண்பர். நமக்கு பிடிக்காததை (அது எத்தனை உயர்வா இருந்தாலும் கூட) , நம்ம மனசு ஏற்காததை யாரேனும் செஞ்சா போதும்… அவர் நமக்கு நொடியில் துஷ்டராயிடுவார். அவர் மேல ஆத்திரம் , துவேஷம் எல்லாம் கூப்பிடாமல் வந்துடும். அப்பறம் ஆளாளுக்கு அடுத்தவர்களை வதம் பண்ண இப்படிக் கிளம்பிட்டால் , எல்லோரும் துஷ்டராகி ஒருத்தரும் இந்த லோகத்தில் மிஞ்ச மாட்டோம்.

ஏன்னா லோகமே கொண்டாடற காந்தியையும் பிடிக்காதவர்கள் இருக்கா .. லோகத்தையே காப்பத்தனும்னு துடிச்ச ஜீசசையே பிடிவாதமா கொன்னா! அப்படி இருக்கறப்ப நம்ம கதி !
அதான் பகவானே சொல்றார் .. அப்பா நீ உன் வேலையே பாரு.. நான் என் வேலையைப் பார்த்துக்கறேன்..
ஒரு ஒரு துஷ்டனையும் அழிக்க ஒரு ஒரு அவதாரம் எல்லாம் எடுத்துட்டு இருக்க முடியாது. அதோட எத்தனை பெரிய துஷ்டனுக்கும் நாம திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கணும் இல்லியா.. அதனால தர்மம் ஓரளவுக்கு தாக்குப் பிடிக்கும் வரை நானும் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கணும்னு முடிவு செஞ்சிருக்கேன்.. தர்மம் முற்றிலும் சீர் குலையும் போது நானே வந்து சீர் படுத்தறேன்..

என்னை கூட நீ சிரிஷ்டிக்க வேணாம்… நானே அதையும் பார்த்துப்பேன்.. உன் வேலைகளை ஒழுங்கா பண்ணவே பாவம் உனக்கு நேரம் இருக்கரதில்லைன்னு இந்த சுலோகங்களின் வாயிலாக ரொம்பவும் சுருக்கமாய் அதே சமயம் எல்லோருக்கும் புரியும்படி அழகாகச் சொல்றார்.

( ஏன்னா பல மனுஷர்கள் இப்ப எல்லாம் வெறும் போலிச் சாமியார் வேஷம் மாத்திரம் போடறதில்லை .. நானே பகவான்னு அவரோட அவதாரத்தையும் போலியாய், சுயநலத்தின் விளிம்பிற்கே சென்று போலிச் சாமி வேஷத்தையும் போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் எனபது போல , நல்லது நடக்க வேண்டும் என்றால் தாங்கள் அதற்கு என்ன செய்ய வேணும்னு நினைக்காமல் , இவர்கள் எது சொன்னாலும் அதை நம்பி முடிவில் மோசம் போகிறார்கள் 😦 )

பகவான் தனி .. மனுஷா தனி .. மனுஷா பிறக்க , அம்மா, அப்பான்னு இன்னும் ரெண்டு மனுஷா வேணும் . பகவானுக்கே அவரே போதும் ! (ராமர் தசரதர் நடத்திய யாகத்தின் பலனாய் , பெரும் ஆசீர்வாதமாய் கவுசலைக்கு பிறந்தவர், கண்ணன் கம்சனை அழிக்க, தேவகியை பெருமைப் படுத்த, அவள் குழந்தையாய் தானாய் அவதரித்தவர் ) இதை எல்லாம் முறைப் படி தெரிஞ்சிக்க நமக்கு உன்னதமான குரு வேணும். அந்தக் குரு பகவானை உள்ளபடி அறிந்தவராய் இருக்கணும். அப்படி அறிந்தவரிடம் இருந்து நாமளும் பகவானின் கல்யாண குணங்களை அறிந்து கொண்டோம்னா நமக்கு சிந்தனை வேறு எங்குமே செல்லாது.

நம்மை சுற்றி பலரும் நமக்கு பகவானை காண்பிக்க கருவியாய் இருப்பார்கள். ஐந்து வயது பக்தப் பிரகலாதர்கள் முதல் நூறு வயசை கடந்தும் பகவான் கைங்கர்யம் பண்ண மகான் ஸ்ரீ ராமானுஜர் வரை பல வடிவில் பல ரூபத்தில் குருமார்களை காணலாம்.

செடி, கொடி, யானை , மாடுன்னு பல ரூபத்தில் கூட குருமார்கள் இருக்கிறார்கள். எல்லோரிடத்தில் இருந்தும் நாம ஞானத்தை வளர்த்துக்கலாம். ஏன்னா எல்லாவற்றிலும் கண்ணனே நிறைந்து இருக்கார். ஆனால் நம்ம ஞானம் உண்மையான குருவை , நமக்கென காத்திருக்கும் அந்த உன்னத ஆசானை நாம சந்திக்கும் போது நிறைவு பெரும். அவர் பகவானை காண்பிக்கரதோட மட்டும் இல்லாமல் அவரிடமே நம்மை கொண்டு போய் சேர்த்திடுவார். அவரோடு நம்மை வாழவும் வைப்பார். ஓடக்காரராய் வந்து சரியான நேரத்தில் இந்த சம்சார சாகரத்தில் தத்தளிக்கும் நம்மை பத்திரமாய் கரை சேர்ப்பார். அதுவரைக்கும் நாமளே ஓய்ந்தாலும், அவர் ஓய மாட்டார்.

அப்படி ஒரு குரு கிடைக்கும் வரைக்கும் கண்ணனே நம் குரு .. அவரே பார்த்துப்பார் நம்மை வழி நடத்துவார் என்கிற நம்பிக்கை வைக்கணும் .. ஆடம்பரம் இல்லாமல் பகட்டு இல்லாமல் பகவானுக்கு சேவை செய்யும் உன்னத மகான்களைத் தேடி அவர்கள் பகவானைப் பற்றி சொல்றதை எல்லாம் கேட்டுப் பயன் பெறணும்.

நீங்களும் நிறைய பிரசங்கம் , பகவத் கதா காலக்ஷேபம் , ப்ரவச்சன் , கீர்த்தனம் நடக்கும் இடங்களுக்குச் சென்று அவற்றில் பங்கு பெற்று பகவானுடைய பேரின்பச் சுவையை பெற வேண்டும்னு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

-குறை ஒன்றும் இல்லை

Advertisements

Read Full Post »

நந்த வனத்தில் ஒரு தாதா -3

தொடர்ச்சி … நந்த வனத்தில் ஒரு தாதா -2

Read Full Post »

நந்த வனத்தில் ஒரு தாதா -2

தொடர்ச்சி … நந்த வனத்தில் ஒரு தாதா -1

ஏற்கனவே ஆள் நடமாட்டம் அந்தத் தெருவில் சுத்தமாய் இல்லை. மேலும் அந்த வீடு இருப்பது வேறு தெருக் கோடியில்.இருந்தாலும் மலையாண்டி குறிப்பிட்ட நேரம் வரும் வரை பொறுமை காத்தான். சற்று இருட்டுவது அவனது தொழிலுக்கும் நல்லது தானே என்று நினைத்தால் அப்படி இல்லை என்று சொல்லுவான் அவன் . சென்னையில் ரொம்ப இருட்டினால், பளிச் என்று வெளிச்சம் தரத் தெரு விளக்குகள் இருப்பதினால், அவனது தொழிலில் இப்போது இரவு , பகல் என்று எந்த நேரமாயிருந்தாலும் ஒன்று தான் என்று ஆகிவிட்டது மலையாண்டிக்கு. ஆனால் இந்த இரவு நேரங்களில் தொலை காட்சியில் நிறைய முன்னணி சினிமா நடிகைகள் நடிக்கும் தொலைக் காட்சித் தொடர்கள் ஒளி பரப்பத் தொடங்கியதில் இருந்து அவனது தொழிலுக்கு நல்ல நேரம் தொடங்கியது என்று தான் சொல் வேண்டும்.

அவன் மக்கள் எல்லோரும் தொலை காட்சித் தொடரில் தங்களை மறந்து ஒன்றி இருக்கும் நேரத்தினையே பெரும்பாலும் தேர்ந்தெடுப்பான். ஒரு நாள் இப்படித் தான். நாய்கள் ஜாக்கிரதை போர்டினை சரியாகக் கவனியாமல் இரவு நேரத்தில் ஒரு பெரிய பணக்கார வீட்டின் பின் பக்கத்து வழியாக உள்ளே சென்று விட்டான் அவன். அதிர்ஷ்ட வசமாக அந்த நேரத்தில் தொலைக் காட்சியில் ஒரு முன்னணி நடிகை வில்லனை தன பேச்சினாலேயே வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருந்தாள்.

மாமியாரும் , மருமகளும் இன்றைய நாட்களில் அத்தனை காண முடியாத அதிசயமாய், ஒற்றுமையாய் ஒரு மித்த கருத்தோடு அந்த நடிகையை மெச்சிக் கொண்டிருந்தார்கள். ” சபாஷ் அப்படிச் சொல்லு அபி , இனி அவன் தன் முகத்தை எங்கு போய் வைத்துக் கொள்வான் , அதச்சொல்லு, அப்படிச் சொல்லு.. அந்த பாயிண்டை பிடி ..ஆஹா அபின்னா அபி தான் எப்படி அந்த அயோக்கியனை தன் வாதத்தாலேயே பின்னி எடுக்கிறாள் பாரேன் ..” என்று போட்டி போட்டுக் கொண்டு இருவரும் அந்த நடிகையின் நடிப்புத் திறனை ஏதோ நடப்பதெல்லாம் உண்மை என்கிற பாவத்தில் ஒன்றிப் போய் மெச்சிக் கொண்டிருந்தது அவனது காதில் விழுந்தது.

அந்த நடிகை போல யாரேனும் தன்னிடம் இத்தனை அதிகமாய் பேசினால், ஒரு அறையிலேயே அவளைக் காலி பண்ணி விடுவோம் என்று எண்ணிக் கொண்டே, கூடத்திற்கு முன்பாக இருந்த படிக்கெட்டில் ஓசைப் படாமல் அவன் மாடி நோக்கிச் செல்லும் போதுதான் அந்தப் பெரிய நாய் அவனப் பார்த்து முறைத்த வண்ணம் அருகில் வந்தது. அது ஒரு ஆளுயர ராஜ பாளையம் நாய். தினமும் அவனைக் காட்டிலும் நல்ல சாப்பாடு கிடைப்பதினால் , வெகு தாட்டியாக புஷ்டியாக இருந்தது அது. அதன் ஒவ்வொரு பல்லும் கத்தியைக் கட்டிலும் கூர்மையாய் இருக்க அதை பார்த்த மட்டில் அவனுக்கு குடல் நடுங்கியது. முன் பக்கம் ஓட வேண்டுமா அல்லது பின் பக்கம் ஓட வேண்டுமா என்று யோசிக்கக் கூட முடியாமல் அவன் நடுங்கிக் கொண்டிருந்த போதுதான் அந்த அதிசயமும் நடந்தது.

“சீசர் ..இங்கு வா ..உனக்கு ரொம்பப் பிடிக்கும் பாடல் காட்சி வருகிறது …. அபியின் தோழிகளோடு அவள் பாடும் ” விழிப்புணர்வு வேண்டும் தோழா , வாழ்க்கையில் வாழ்வதென்பது உண்ணுவதும், உறங்கு வதும் இல்லை ..நேரம் பொன்னைக் காட்டிலும் உயர்வானது தோழா ..அது போனால் திரும்ப வராது ” என்று பாடும் அந்தப் பாடல் காட்சி சற்று நேரத்தில் வந்து விடும் ..கமான் , க்விக் ..டோன்’ட் மிஸ் இட் ” என்று ஒரு கம்பீரமான ஆண் மகனின் குரல் கேட்க, அந்த நாயும் வாலை ஆட்டிக் கொண்டே ஒட்டிப் போனதை பார்க்க மலையாண்டிக்கு ஆச்சரியத்தில் புல்லரித்தது.

வீட்டு ஆண்மகன் களையும் மட்டுமின்றி, நாய் , பூனை என்று சகல ஜீவராசிகளையும் தனது நடிப்புத் திறனால் கட்டிப் போட்டிருக்கும் அந்த நடிகையின் நடிப்பாற்றலை மனதார வாழ்த்திக் கொண்டு மாடி ஏறி வெகு சிரமம் இன்றி தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டான் மலையாண்டி. இதெல்லாம் போனதாவது அவர்களுக்குத் தெரியுமா என்றெண்ணிக் கொண்டே வீட்டின் முன் பக்கமாகவே ஜாம் ஜாமென்று அவன் செல்ல , அந்த நாயின் கழுத்தை கட்டிக் கொண்டு, தடி தடியாய் இரண்டு இல்லத் தரசர்களும் ஏதோ ஒரு காட்சியை பார்த்துக் கொண்டு நாயுடன் சேர்ந்தது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்துக் கொண்டே “அபிக்கு தலை வலியாய் இருக்கும் ” என்று எண்ணிக் கொண்டு சிரித்தபடி அவன் பெரிய மூட்டையோடு சுதந்திரமாக வெளியேறினான்.

இன்றைக்கும் அதே நடிகையின் தொடர் தான் ஒளிபரப்பாகிறது. அதனால் தான் இந்த நாளையே அவன் தேர்ந்த்தெடுத்தது. சரியாக அந்தத் தொடர் தொடங்கும் நேரத்தில் மெதுவாக அந்த முல்லை கொடியைப் பற்றிக் கொண்டு மாடியேறிக் குதித்தான் மலையாண்டி. முல்லைக் கொடி உண்மையில் வெகு உறுதியாகவே இருந்தது. மாடி ஏறிக் குதித்தவன் , அங்கு கரியதாய் பெரியதாய் சற்று தொலைவில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவத்தை சற்றும் எதிர் பார்க்காததால் ஒரு கணம் அதிர்ந்து போய் நின்றான்.

சற்று உன்னிப்பாய் கவனித்த போது தான் புரிந்தது . அது ஒரு தேர்ந்த கருங்கல்லில் வடித்த ஆளுயரச் சிலை என்பது. கோவில் சிலையினை ஒத்து இருந்த அந்தச் சிலை, ஒரு எளிமையான மேடையின் மேல் நின்று கொண்டிருந்ததது. அந்தச் சிலைக்கு கீழே ஆணும் பெண்ணுமாய் அழகிய மற்றும் இரண்டு சிறிய சிலைகள். இவற்றை வெயிலிலும் , மழையிலும் இருந்து காக்கும் வண்ணம் மூங்கில் , பனை மற்றும் தென்னை ஓலை கொண்டு எளிமையாக அதே வண்ணம் அழகானதாய் கிட்டத் தட்ட மாடி முழுக்க ஓலை இடப் பட்டிருந்தது. அந்த சிலை களுக்கு அருகில் இரண்டு குத்து விளக்குகள் அந்த நேரத்திலும் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தன. அவற்றின் எதிரில் சின்னதாய் ஒரு துளசி மாடம். அதில் அகல் விளக்கு ஒன்றும் பாந்தமாய் எரிந்து கொண்டிருந்ததது.

கால்கள் அவனையும் அறியாமல் அந்தச் சிலைக்கு அருகில் சென்றது.
ஆளுயரத்தில் கரியதாய் இருந்தாலும் அந்தச் சிலை ஒன்றும் மிரட்டும் வண்ணம் இல்லை. மாறாக அந்த சிலையின் கண்களில் இருந்து கருணை பொங்கி வழிந்தது. அது மலையாண்டியை என்னமோ செய்தது. மனத் தாங்கலோடு , ” நான் என்ன செய்வேன் .. என் பொண்டாட்டிக்கு ஒரு தாலி வாங்கத் தானே வந்திருக்கேன் .. இந்த வீடும் இதை சுற்றி இருக்கும் இத்தனை பெரிய இந்த இடமும் கோடிக் கணக்கிற்கு மேல் தேறும் சாமி .. நான் வெறும் சில ஆயிரம் மதிப்பு பெரும் பொருளை மாத்திரமே திருட வந்திருக்கேன் .. நீதான் சாமி எனக்கு உதவி பண்ண வேண்டும் ” என்று அந்தச் சிலை இடமே தனது வேண்டுதலையும் முன் வைத்தான் மலையாண்டி.

மலையாண்டிக்கு, தன்னுடைய படிப்பறிவில்லாத பாஷையில் சிலை , அது , இது என்று அந்தக் கருணா மூர்த்தியை அழைக்கவும் வெட்கமாயிருந்தத்து. எனவே ” மன்னிச்சுக்க சாமி .. உன்ன போய் சிலை , அது, இதுன்னு நினைக்கிறேனே.. எங்க அப்பாவ நான் கண்ணுல கூட பார்த்தது இல்ல.. அவரு கூட உன்னாட்டம் இத்தன அன்போட என்ன பார்த்திருப்பாரோ என்னமோ .. நீதான் இன்னைக்கு கூடவே இருந்து என்ன பார்த்துக்கணும் .. ” என்று தனக்குத் தோன்றிய ஒரு சிறிய வேண்டுதலையும் முன் வைத்தான். அவன் முன்பு அழகிய சிலை உருவில் இருந்த பகவானும் அவனைப் பார்த்து அப்படியோயே ஆகட்டும் என்று அருள் பாலிப்பது போல் உணர்ந்த மலையாண்டி , சற்றுத் தைரியமாய் சுவாமிக்கு இன்னமும் முன்பு சென்று அவரைக் கண் குளிரப் பார்த்தான்.

பெரிய பெரிய கோவில்களிலும், பெரிய செல்வந்தர்களின் இல்லங்களிலும் இருப்பது போன்று ஆடம்பரமான நகைகளோ , அலங்காரமோ ஏதுமின்றி , அந்த சுவாமி ,ஸ்ரீ பக்த ரக்ஷக பாண்டு ரங்கன் என்று எழுதப்பட்டிருந்த மேடையின் மேல் அம்சமாய் எழுந்தருளி இருந்தார். கழுத்தில் அழகான துளசி மாலை. இடுப்பில் அழகிய வெள்ளை வேஷ்டி, தலையினில் வெள்ளை துண்டில் அம்சமாய் தலைப் பாகை அணிந்து , புன் சிரிப்போடு அவனப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பாண்டு ரங்கன். நெற்றியில் பளீரென்று இருந்த நாமமே அவருக்குப் போதுமான ஆபரணமாய்த் தோன்றியது மலையாண்டிக்கு. அவனுக்கு இந்த சாமி , கீமி இதில் எல்லாம் நம்பிக்கையே இல்லை என்று தான் அவனே இன்று வரை எண்ணிக் கொண்டிருந்த வேளையில் , அந்தப் பாண்டு ரங்கனை இத்தனை காதலோடு தான் இப்படி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதை எண்ணி அவனுக்கே பெரும் மலைப்பாய் இருந்தது.

“சாமி உன்னோட அழகையே நான் இப்படி மலைச்சு மலைச்சுப் போய் பார்த்துட்டு இருந்தா , அந்த அபியோட சீரியல் முடிஞ்சே போய்டும் . அப்பறம் மக்களுக்கு அடுத்த சீரியல் ஆராம்பிக்கற வரைக்கும் கொஞ்சம் முழிப்புனர்ச்சி வந்துடுச்சுன்னா .. அது என்தொழிலுக்கு ரொம்ப டேஞ்சர் .. அதனால இப்ப நான் போய் வந்த வேலையே கொஞ்சம் கவனிக்கிறேன்.. ஆனால் என்னமோ உன்ன பார்த்த உடனே உம்மேலே எனக்கு ஸ்பெசலா ஒரு லவ்வு வேற வந்துடுச்சு ..அப்பறம் ஒரு நாள் உனக்காவே இங்க வரேன்..உன்ன போயி இப்படி மாடி மேல தனியா வுட்டுட்டு இருக்காங்களே .. ..இன்னொரு நாள் , என்னோட சகாக்களோட இங்க வந்து இப்படி அம்போன்னு தனியா இருக்கிற உன்னிய என் வூட்டுக்கு கூட்டிட்டு போறேன் .. என் பொஞ்சாதி உன்ன இன்னும் நல்லா கவனிச்சுப்பா ” , என்று பாண்டு ரங்கனிடம் தன்னையும் அறியாமல் பெருகிய காதலோடு பேசிவிட்டு , அவரை விட்டு பிரிய மனமே வராமல், ஆனால் வந்த வேலையே முடித்தாக வேண்டுமே என்கிற எண்ணத்தில் கீழே இறங்கினான்.

கொல்லைப் புறத்தில் இருந்த அந்த வீட்டின் பின் பக்கக் கதவை மெதுவாக ஆட்டிப் பார்த்தான் மலையாண்டி. அதிர்ஷ்ட வசமாய் அது பூட்டப் படாமல் இருந்தது. எல்லாம் பாண்டு ரங்கனின் ஸ்பெஷல் கருணை என்று எண்ணிக் கொண்டு உள்ளே நுழைந்தவனுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

– தொடரும்

நந்த வனத்தில் ஒரு தாதா -3

Read Full Post »

ஹலோ பிரெண்ட்ஸ்,

என்னடா திடீர்னு இப்படி எழுத்தித் தள்ளு கிறேனேன்னு யாரும் மலைச்சுப் போகாதீங்க.. போனவாரத்தில் இருந்து பிரேம் ரெண்டு வாரம் லீவ் போட்டிருக்கிறார் .. அதான் ஹிஹி … அப்பறம் அடுத்த மாசமும் கொஞ்சம் லீவ் எடுத்துக்கிறார்.. சோ ப்ளாக் வேலை பார்க்கறேன் ஹெல்ப் பண்ணுங்கனு கேட்டேன்..அவர்தான் ரொம்ப சமர்த்து இல்லியா.. துருவை நல்லா கவனிச்சுக்கறார் .. 🙂 Can’t expect more!

அதான் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கிட்டு, ஒரு சின்ன ரொமான்டிக் தொடரை எழுதலாம்னு தோணிச்சு .. முதல்ல AAKK கதையா ஒழுங்கா முடிக்கப் பாருங்க ஜானுன்னு சொல்வீங்க.. ஹிஹி ..அதற்கு கொஞ்சம் டைம் எடுத்துக்கணும் ..ஏன்னா நானே ஒரு தரம் அந்தக் கதைய படிச்சால் தான் கோர்வையா எழுத முடியும்னு நினைக்கிறேன் 🙂

சோ அந்தக் கேப்பில் இப்ப ஒரு சின்ன ரொமாண்டிக் தொடர் …

நந்த வனத்தில் ஒரு தாதா -1 !

சென்னையில் காலை எல்லோருக்கும் போலவே மலையாண்டிக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாய் தான் விடிந்தது. ஆனால் தனது நேரம் மட்டும் தான் கொஞ்சமும் சரி இல்லை என்று அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான் அவன். கடந்த இரண்டு நாட்களாக அவனுக்கு ஒரே கஷ்ட காலம். அடித்த நான்கு பிக் பாக்கெட்டிலும் ஏதோ துண்டு துண்டாய் கார்டுகள் தான் இருந்தனவே தவிர , நூறு ரூபாய்க்கு மேல் காசு எதிலுமே தேறவில்லை .

இப்போதைய விலை வாசியில் வெறும் நூறு ரூபாய் கொண்டு ஒரு பீடிக் கட்டு கூட வாங்க முடியாது. அப்படி இருக்கும்போது பூங்கோதைக்கு தாலி எங்கிருந்து வாங்குவது என்று தனது கஷ்டத்தை நொந்து கொண்டான் அவன். கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகியும் கோதைக்கு அவனால் இன்னமும் தங்கத்தில் ஒரு சின்ன தாலி கொம்பைக் கூட வாங்கித் தர முடியவில்லை. அவள் எப்போதும் அதை சொல்லிச் சொல்லியே அவனை குத்துக் காட்டிக் கொண்டிருந்தாள். மத்தபடி வீட்டுச் செலவுக்கு அவன் பணம் கொடுப்பதும் இல்லை , அவளும் அதை எல்லாம் எதிர் பார்ப்பதும் இல்லை. மலையாண்டி ஒரு பிக் பாகெட் . அவனிடம் தாலியை எதிர் பார்ப்பதே பெரிய விஷயம், மற்றதெற்கெல்லாம் காசு ஒன்றும் தேறாது என்று கோதைக்கு நன்றாகத் தெரியும்.

கல்யாணத்திற்கு முன்பு , டவுன் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு அப்பாவிப் பெண்ணின் தாலியை அவன் நைசாகக் கட் செய்து எடுத்துக் கொண்டு வர, கோதை அதை எப்படியோ கண்டு பிடித்து விட்டாள். எப்படிக் கண்டு பிடித்தாள் என்று கேட்டதற்கு, “அதென்ன பெரிய விஷயம்.. வேலை வெட்டி இல்லாத வெறும் பிக் பாக்கெட்தான அவன் தாலி நிச்சயம் வாங்க முடியாது என்று பச்சை குழந்தை கூட சொல்லி விடுமே” என்று சொல்லி அவள் குதித்ததை நினைத்தால் இப்போதும் அவனுக்குச் சிரிப்பாக வரும். அது தன்னிலையை உணர்ந்த விரக்திச் சிரிப்பு .

அவனது திருட்டுத் தொழிலை பற்றி நன்றாகத் தெரிந்தே இருந்ததால் , கல்யாணத்தின் போது மலயாண்டியிடம் சில கண்டிஷன்களை கோதை போட்டிருந்தாள். “எதாச்சும் திருடு மச்சான்.. ஆனா சுமங்கலி பொண்ணோட தாலிய மட்டும் திருடாதே ..அது பெரிய பாவம்னு கேள்விப் பட்டிருக்கேன் ! அப்பறம் யாரையும் அடிக்கறது, குத்தறது, கொல்லரதுன்னு கொடூரமான வேலை மட்டும் என்னைக்கும் பார்க்கவே கூடாது “, என்று அவள் சொன்னதை அவனும் முழு மனசோடு ஏற்றுக் கொண்டு இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருந்தான்.

திருடிய தாலியை அவன் ரோட்டில் கண்டெடுத்ததாய் சொல்லி அந்த ஏரியா போலீஸ் ஏட்டிடம் திருப்பிக் கொடுக்க, அதனால் அவரிடம் கொஞ்சம் நல்ல பேரையும் அப்போது அவன் சம்பாதித்துக் கொண்டான் என்பதே கோதையால் இதுவரை அவனுக்குக் கிடைத்த ஒரே நல்ல விஷயம் என்று அவன் இப்போது போலவே அவ்வப் பொது நினைத்துக் கொள்வது வழக்கம். மத்தபடி அவளை கல்யாணம் செய்து கொண்டதில் இருந்து அவனது தொழில் ரொம்ப டல்லடித்துப் போனது என்றே அவன் நம்பிக் கொண்டிருந்தான்.

அதன் விளைவாக, சின்ன சின்னதாய் பிக் பாக்கெட், பெரிய பணக்கார மனிதர்கள் யாரேனும் ஏமாந்து இருந்தால் அவர்கள் வீட்டில் இரவோடு இரவாக புகுந்து சில கொள்ளைகள் என்று அவனுடைய தாதா உலகம் தற்போது ரொம்பவும் சின்னதாய், சில்லறைத் தனமாய் இயங்கிக் கொண்டிருப்பதாய் பட்டது அவனுக்கு. சமீப காலமாய் பணக்கார மனிதர்கள் எல்லோரும் அவர்கள் வீடு மற்றும் அபார்ட்மென்டிர் கெல்லாம் காமெரா உதவியோடு அலாரம் வைத்து வைத்துக் கொண்டு விட்டதால் , வீடுகளுக்கு கன்னம் வைத்து திருடும் தொழில் ரொம்ப நசிந்து விட்டதாக அவனது வட்டாரத்தில் பலரும் வருத்தப் பட்டுக் கொள்கிறார்கள் . அவனுக்கும் அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.

அவனது பேட்டையில் அவனே பெரிய தாதா என்பதால் , கோதை அவனைத் திருமணம் செய்து கொள்ள சம்மத்தித்து இருந்தாள். ஆனால் திருமணம் ஆனதில் இருந்து ஒரே குத்திக் காட்டல் தான். ” நீ உருவத்தில் மாத்திரம் தான் மலை மாறி பெருசா இருக்குற மலையாண்டி .. மத்தபடி ஒரு தாலி வாங்கறதுக்கும் உனக்கு துப்பில்லை .. உன் முகரைக்கு தாதானு பேரு என்ன வேண்டி கிடக்கு.. பேசாம சோதானு மாத்திக்க சரியா இருக்கும் ” , என்று சகட்டு மேனிக்கு அவள் அர்ச்சனை செய்வது அவனுக்கு சமீபத்தில் ரொம்பவே எரிச்சல் தந்து கொண்டிருக்கும் மற்றொரு விஷயம்.

அவனும் என்ன செய்வான். சமீபத்தில் தங்கம் நாளுக்கு ஒரு விலையாய் ஏறி கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே ..! இந்தக் கோதை மாத்திரம் ஏன் இப்படிக் கண் மூடித் தனமாய் இருக்கிறாள் என்று அவன் நொந்து கொண்டான். இன்னமும் இரண்டு நாளில் அவனது திருமண நாள் வருகிறது. எனவே எப்படியும் அன்று அவளுக்கு தாலி வாங்கித் தந்து விடவேண்டும் என்று அவன் முடிவே செய்து விட்டான்.

எனவே அதை செயலாற்றும் விதமாக, பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நீலாங்கரை பக்கமாய் சில வீடுகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் அவன். அவற்றை எல்லாம் வீடு என்று சொன்னால், அந்து வீடுகள் கூட கோபம் கொண்டு அவனை அடிக்க வந்து விடும் போலிருந்தது மலையாண்டிக்கு . ஒவ்வொன்றும் பெரிய பெரிய பங்களா வாயிருந்ததது .. பல வீடுகளின் வாசலில் பெரிய இரும்பு கேட். அது போதாதென்று நாய்கள் ஜாக்கிரதை போர்ட் . அதுவும் போதாமல் சில பங்களாக்களின் முன்னால் கூர்க்கா வேறு . ஒரு சில தெருக்களில் இருந்த வீடுகளுக்கு மொத்தமாய் கூர்க்காக்கள் வலம் வந்து கொண்டிருந்தததை பார்க்க பார்க்க மலையாண்டிக்கு ஒரே மலைப்பாய் இருந்தது. தன உடல் வாகிற்கு தனக்கும் இப்படி ஒரு வேலை தந்தால் எத்தனை நன்றாய் இருக்கும் என்று எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டே தனது தேடலைத் தொடர்ந்தான்.

அப்படியே சில தெருக்களை கடந்து நீலாங்கரையில் சற்று ஒதுக்குப் புறமாய் அமைந்த ஒரு தெருவுக்குள் நுழைந்ததும் அதிர்ஷ்டம் அவனை பார்த்துக் கண் சிமிட்டுவது போல் இருந்தது மாயாண்டிக்கு. அந்த தெரு சற்று நீண்டு வளைந்து இருந்தது. அதன் மொத்தத்திற்கும் ஒரே ஒரு கூர்க்கா தான் ரோந்து .அதோடு இல்லாமல் தெருவின் கோடியில் வளைவைத் தாண்டி ஒரு சிறிய பங்களா ஒன்றும் இருந்தது.

அந்தப் பங்களாவை , அந்தப் பகுதியில் இருக்கும் மத்த பங்களாக்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் வீடென்றே சொல்லி விடலாம் என்று நினைத்துக் கொண்டான் அவன். காம்பவுண்டு சுவர் கூட ரொம்பப் பெரியதாய் இல்லை. சுலபமாய் எகிறிக் குதிக்கும் வகையில் இருந்தது. அருகில் சென்று மெல்ல நோட்டம் விட்டான் மலையாண்டி ..

வீட்டு முகப்பில் நந்தவனம் என்று அழகாய் பூ வேலைப்பாடுகள் கொண்ட பெயர்ப் பலகை அவனை புன் சிரிப்புடன் வர வேற்பது போல உணர்ந்தான் அவன் . ரொம்ப ஏகாந்தமாய் இருந்தது அந்த வீடு. சுற்றிலும் சின்னச் சின்னதாய் பூச் செடிகள் . அதற்கு காவல் போல் சின்னச் சின்ன கனி மரங்கள். அதனருகே அளவாய் ஒரு காய் கறித் தோட்டம் . எல்லாவற்றையும் விட அவனைக் குறிப்பாய் கவர்ந்தது மாடி நோக்கி அடர்வாய் படர்ந்திருந்த அந்த வாசம் பரப்பும் அழகிய முல்லைக் கொடி தான் . சீட்டி அடிக்க வேண்டும் போன்று ஏற்பட்ட அவாவை ரொம்பக் கஷ்ட்டப் படுத்தி அடக்கிக் கொண்டான் மலையாண்டி.

ஏதோ பூங்கோதைக்கு முல்லைப்பூ என்றால் ரொம்பப் பிடிக்கும் ,அதான் மலையாண்டிக்கு அந்தப் பூங்கொடியை பார்த்ததும் அவனுக்குத் தன் காதல் மனைவி பூங்கோதையின் நினைப்பு வந்து விட்டாதாய் யாரும் நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து தான் போவீர்கள். அந்த முல்லை கொடியை பற்றிக் கொண்டே சுலபமாய் மாடி ஏறிக் குதித்து விடலாம் என்று மலையாண்டி நினைத்ததால் வந்த மகிழ்ச்சியே அது. அத்தனை அடர்த்தியாய் உறுதியாய் இருந்தது அது..!

ஆனால் உள்ளே காத்திருப்பது பற்றி அவனுக்கென்ன தெரியும் அப்போது .. தெரிந்திருந்தால் ?

-தொடரும்

நந்த வனத்தில் ஒரு தாதா -2 !

Read Full Post »

%d bloggers like this: