Feeds:
Posts
Comments

Archive for the ‘சிறுகதைகள்’ Category

பிரணவ் கிட்ட சொன்ன “பாட்டி வடை சுட்ட கதை “

ஒரு ஊருல ஒரு பாட்டி வடை சுட்டுக் கிட்டு இருந்தாங்களாம் ..ஒரு வடை இல்லை ரெண்டு வடை இல்லை.. நிறைய வடை ..எல்லாம் செம டேஸ்ட்டி வடை ..வகை வகையா ..இருந்தது அவங்க சுட்ட வடைகளனைத்தும் ..

கார வடை ..மெது வடை.. ஆம வடை..மசாலா வடை..வாழப்பூ வடை.. வாழக்காய் வடை ..முட்டை கோஸ் வடை .. பருப்பு வடைன்னு எல்லா வடையும் ஒரே நேரத்துல ஆசையா பேரன் பேத்திகள் சாப்பிடனும்னு செஞ்சாங்களாம் அந்த பாட்டி.

வடையோட மணம் அப்படியே காத்துல பரவிச்சாம். அது பக்கத்து மரத்துல வசிச்சுட்டு இருந்த ஒரு சோம்பேறிக் காக்காவையும் சுண்டு இழுத்துச்சாம் ..

வாயூரிய காக்கா அந்த பாட்டி கிட்ட போயி , ” பாட்டி ..இவ்ளோ விதம் விதமா வடை ..நான் பார்த்ததே இல்லை.. எதாவது ஒன்னே ஒன்னையாவது எனக்குத் தரியா ” , என்று கேட்டுச்சாம்..

பாட்டிக்கு வயசு தான் பெருசே தவிர மனசு ரொம்ப சின்னது ..சீ போ ஒன்னும் இல்லைன்னு விரட்டி அடிச்சாங்களாம்..

சும்மா போகுமா இந்த காக்கா.. மெல்ல மெல்ல கள்ளம் அதன் மனசுல புக , அது திருட்டு காக்காவாய் மாறி வடையை திருடிட்டு ஓடிடுச்சாம்..

மரத்து மேல ஏறி உக்கார்ந்து கிட்ட காக்கா, அதை சாப்பிட ஆரம்பிக்கும்போது ஒரு குள்ள நரி அங்க வந்துச்சாம்.

அது காக்காவை பார்த்து “ஹேய் காக்கா ..நீ ரொம்ப அழகு .. உன் குரலோ ரொம்ப இனிமை ..உன் பாட்டை கேக்காம எனக்கு டெய்லி தூக்கமே வருவது இல்லை.. எனக்காக ஒரே ஒரு பாட்டை பாடேன் ப்ளீஸ் ” என்று கெஞ்சி கேட்டுச்சாம்.

காக்கா கொஞ்சம் புத்தி சாலி ..அது அவ்ளோ சீக்கிரம் ஏமாறலை ..எனக்கே அல்வாவானு மனசுக்குள் நெனச்ச காக்கா , வாயில் இருந்த வடையை எடுத்து , காலுக்கு அடியில் வச்சிக்கிட்டு கா.. கானு கத்திச்சாம்..

நரி மாத்திரம் கேனையா என்ன..? மனசுக்குள் காக்காவின் சாமார்த்தியத்தை எண்ணி மெச்சிக் கிட்டாலும், நரி காக்காவை விட தந்திரம் வாய்ந்தது தானே ..அது காக்கா பாடறதை விடாம கேட்டு ரசிக்கிற மாறி நடிச்சதாம்..

உண்மையா பாராட்டுவது போல , ஆஹா ஓஹோ என்று பாராட்டிக் கிட்டே இருந்துச்சாம்.. குள்ள நரியின் புகழ்ச்சியில் இந்த காக்கா கொஞ்சம் கொஞ்சமாய் புத்த்தியை இழக்க ஆரம்பிச்சதாம்.

மேலும் , மேலும் பாராட்டின நரியின் வார்த்தைகள் கேட்டு இந்த காக்கா உற்சாக மாய் “நிஜமா நாம ரொம்ப நல்லாத்தான் பாடறோமோ ” என்று நினைத்து அது பாட்டுக்கு பாடிட்டே கிடக்க இப்ப நரி தந்திரமாய் சொல்லுச்சாம் ..” ஏய் காக்கா ..நீ பாடறதே சூப்பராய் இருக்குதே ..நீ பாடிட்டே டான்ஸ் ஆடினால் எப்படி இருக்கும் ..எனக்காக ஒரு டான்ஸ் ஆடேன் ப்ளீஸ் ..அதையும் பார்த்துட்டு போயிடறேன்னு ” 🙂

புகழ் போதையில பரவசமான காக்காய் , இப்ப எச்சரிக்கை குணம் குறைந்து ஒரு குதியாட்டம் போட காலடியில் இருந்த வடை கீழே விழுந்திடுச்சாம் 😦

நரி வடையை எடுத்துகிட்டு , நாளைக்கு வந்து மீதி ஆட்டத்தை பார்க்கிறேன் காக்கா ..ஸீ யு ..சூன் -னு சொல்லி ஓடியே போயிடுச்சாம்.. 😉

நீதி 1: பாட்டி கிட்ட காக்கா மரியாதைய கேட்கறச்ச பாட்டி வடை கொடுத்து இருக்கலாம்.. பாட்டிக்கு நல்ல பேராவது வந்து இருக்கும் .. ஏமாளி பட்டம் கிடைச்சு இருக்காது ..

நீதி 2: வடையை வாங்கிட்டு போன திருட்டு காக்காய் ..முதலில் வடையை சாப்டுட்டு மத்த வேலை பார்த்து இருக்கலாம்.. .. எவ்வளவு பெரிய புத்திசாலியாய் இருந்தாலும் , . எவ்ளோ எச்சரிக்கையாய் இருந்தாலும் பத்தாது .. புகழ் போதையில் மாட்டி கிட்டா அவ்வளவு தான் ..அதிகமாய் யாராவது நம்மை புகழ்ந்தால் நாமும் அதிகமாய் விழிப்புணர்வு வோடு இருப்பது நல்லது ..

நீதி 3: நரி போல அசராமல் காரியத்திலேயே கண்ணாய் இருந்தால் , .ஏதாவது ஒரு வழி பொறக்கும். வெற்றி நிச்சயம்!


விபத்து : வடை திருடிட்டு வேகமா ஓடிப் போன நரி பாட்டி , சர்கஸ் கம்பனி வச்சி நடத்தும் பாட்டியோட பேரன் கிட்ட மாடிக்கிச்சாம்.. இப்ப கூண்டுக்குள்ள அடைஞ்சி கிடக்கு .. என்று கேள்வி.. தப்பு செஞ்சால் தண்டனை ஏதாவது ஒரு ரூபத்தில் வந்தே தீரும் ..

கொசுறு நீதி : வாய்மை எப்படியாவது வெல்லும்.

சின்ன வயசுல பாட்டி வடை சுட்ட கதை ரொம்ப பாமஸ்.. யார் முதலில் எழுதி வைத்தார்களோ தெரியாது .. இந்த பஞ்ச தந்திரக் கதைகள் காலத்துக்கும் அழியாதவை ..இங்கே அதை ரீ -மிக்ஸ் மாத்திரம் நான் பண்றேன்.. ஏன்னா இப்ப இருக்கிற குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகள்.. கேள்வி மேல கேள்வி கேட்கிறாங்க..அவங்க கேள்விக்கு விடை சொல்றதுக்குள்ள முழி பிதிங்கிடுது ..என் குழந்தை கிட்ட கதை சொல்லும்போது நான் ரொம்ப யோசிச்சு பொறுமையா சொல்லணும் … சமீபத்தில் அப்படி சொன்ன கதை தன் இதுவும்..

இந்தக் கதை கூட பிரணவோட கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்களால தான் உருவானது ..
வடை தானே காக்கா கேட்டுச்சு ..அந்த பாட்டி சுத்த மோசம்.. காக்கை வடயை காலடியில் வச்சிகிச்சாம்..என்றால் ..ஏன் நரி டான்ஸ் ஆட சொல்லலைனு 🙂 ஒரு கேள்வி ..

பரவாயில்லை பையன் என்னை இல்லை .. அப்பாவ மாறியும் இல்லை ..ரொம்ப விவரமாய் தான் இருக்கான் என்று மனதிற்குள் நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டேன்..

அந்த சர்கஸ் விஷயம் மாத்திரம் தான் என்னோட டச் .. சோ ஏதாவது நல்லா வந்து இருந்ததுன்னா அதற்கும் காரணம் ப்ரணவ் மட்டுமே ..

எச்சரிக்கை : இதை பதிவுன்னு எல்லோரும் ஏத்துகிட்டு ஒழுங்கா பின்னூட்டம் இடுங்கள்.. இல்லாட்டி இதே போல் நிறைய மொக்கை போடுவேன் .. ;)இல்லாட்டியும் இதே போல் தான் மொக்கை போடுவேன்.. 😀

அச்சச்சோ இத மறந்துட்டேனே :- இந்தக் கதையை நான் ப்ரனவிற்கு சொன்னப்ப , அவனோட பாட்டி கூடவே இருந்தாங்க.. அவங்களுக்கு செம சந்தோசம்.. நான் முழி பிதுங்கினாலும் சமாளிச்சு கிட்டு அவனுக்கு பதில் சொல்ல, எங்க அம்மா என்னை பார்த்து இப்ப தெரியுதா ..உன்னை எல்லாம் வளர்க்க நானும் அப்பாவும் எவ்ளோ கஷ்டப் பட்டு இருப்போம்னு .. நீ அப்ப கேள்வி கேட்ட இப்ப உன் பையன் உன்னை மடக்கறான்னு சொல்லி ஒரே கலாட்டா.. பாட்டிங்களுக்கு தான் பேரங்க மேல எவ்ளோ பாசம்..

Advertisements

Read Full Post »

பஞ்சவர்ணக் கிளியும் ,அண்டங் காக்கையும்

ஒரு ஊர்ல ஒரு பஞ்ச வர்ணக் கிளி இருந்துச்சாம். அதுக்கு பக்கத்து வீட்டுல
கன்னங் கரேல்னு ஒரு அண்டங் காக்கா வாழ்ந்துட்டு வந்துச்சாம். பஞ்ச வர்ணக் கிளி பார்க்கவே ரொம்ப ரொம்ப அழகாம். அதனோட அழகு மேல அதுக்கு ரொம்ப பெருமை. வெறும் பெருமை மட்டும் பட்டுகிட்டு சும்மா கிடந்து இருக்கலாம் அந்தக் கிளி. ஆனா அதுக்கு இந்தக் கன்னங் கரேல்னு இருந்த அண்டங் காக்காவை தன்னோட ஒப்பிட்டுப் பார்த்து தன் அழகு மேல ஒரே கர்வம் வேற வந்துச்சாம்.

ஒரு நாள் இரண்டும் ஒன்னா இரை தேடக் கிளம்பிச்சாம் . வழக்கமாய் போற காட்டுக்கு அருகே, ஒரு பூங்கா வனத்துல சின்னக் குழந்தைங்க நிறைய பேர் பூப்பந்தாட்டம் ஆடி கிட்டும் சருக்கா மெத்தையில் சறுக்கிக் கிட்டும் மகிழ்ச்சி பொங்க விளையாடி கிட்டு இருந்தாங்களாம். அப்ப அந்தப் பக்கம் வந்த இந்த கிளியை பார்த்ததும் குழந்தைங்க குதூகலம் அடைஞ்சி, அவங்க சாப்பிட கொண்டு வந்த கடலையையும் , சுண்டலையும் கொஞ்சம் எடுத்து அதுக்குத் தூக்கிப் போட்டாங்களாம். கிளியோட சேர்ந்து ஆசையா சாப்பிட வந்த காக்காவை “ஷூ ஷூ ” னு சொல்லி விரட்டி அடிச்ச பசங்க, பஞ்ச வர்ணக் கிளிக்கு மாத்திரம் , இன்னும் துண்டு செய்த பழங்களையும் கொடுத்து ராஜ உபச்சாரம் பண்ணாங்களாம்.

மரத்து மேல உட்கார்ந்து பரிதாபமாய் பார்த்துட்டு இருந்த அண்டங் காக்காவை , கர்வமாய் பார்த்து சிரிச்சுதாம் பஞ்ச வர்ணக் கிளி . நல்லா சாப்டுட்டு மரத்து மேல போய் உட்கார்ந்து கிட்டு, ” ஐயோ பாவம் நீ..உனக்கு எதுக்கு இப்படியும் ஒரு பொழப்பு ..இந்த ஜன்மத்துல தான் நீ என்னை மாதிரி இல்லை..அட் லீஸ்ட் .. அடுத்த ஜன்மத்துலயாச்சும் என்னை மாறி ஒரு பஞ்ச வர்ணக் கிளியா பொறக்கனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்க… உன்னை பார்த்தால் யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது பாரு.. ” என்று சொல்லி காக்காவை ஏளனம் பண்ணுச்சாம்.

மேலும் விடாம, “அதோ நான் சாப்டதில் கொஞ்சம் மிச்சம் இருக்கு பாரு.. எல்லோரும் போனப்பறம் நீயும் கொஞ்சம் சாப்டு”, என்று ரொம்ப கர்வமாய் சொல்லுச்சாம்..

அண்டங் காக்கைக்கு இதை எல்லாம் கேட்டு ரொம்ப வருத்தமாய் போச்சாம்.. இறைவா என்னை மாத்திரம் ஏன் இப்படி பொறக்க வச்ச.. எல்லோரும் வேணாம்னு ஒதுக்கற மிச்சங்களையும் எச்சில்களையும் சாப்டுட்டே இப்படி என்ன ஒரு வாழ்க்கை.. எனக்கு.. குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு சொல்வாங்களே .. அந்தக் குழந்தைகளுக்குக் கூட என்னை பிடிக்கலையே.. என்னை ஏன் இப்படி படைச்ச .. என்று புலம்பிக் கொண்டே ஒன்னும் சாப்பிடாமல் வெறும் வயித்தோட, கிளியோட வருத்தத்தோட வீட்டுக்குக் கிளம்பிடுச்சாம் காக்கா.

சாப்பிடமால் வந்த காக்காவை பார்த்து , ” நீ ஏற்கனவே கருப்பு..இதுல இப்படி சாப்பிடாமல் குச்சி குச்சியா ஆனால் , அப்பறம் உன்னை பார்க்க சகிக்குமா ..” என்று மேலும் தன் வண்ண இறக்கையை ஆட்டி கர்வமாய்ப் பேசி வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சிச்சாம் இந்தப் பஞ்ச வர்ணக் கிளி.

சில நாட்கள் இப்படியே ஓடுச்சாம்.. அன்னைக்கும் இரை தேட இரண்டும் வழக்கம் போல ஒன்னாக் கிளம்புச்சாம் ..அதே பூங்காவிற்குத் தான் போகனும்னு கிளி அடம் பிடிக்க, . அதுக்கு காக்கா ” அங்க ..வேணாம் பா .. இன்னைக்கு நாம வழக்கமாய் போகும் பக்கத்துக் காட்டுக்கே போலாம். அங்க நிறைய புத்தம் புது பழங்கள் இருக்கும் . ருசியான பருப்பு வகைகள் கிடைக்கும்.. ஆசையாய் திண்ணலாம்னு “, சொல்லுச்சாம்.

அத கேட்டு கிளிக்கு ஒரே கோவம் வந்துச்சாம். அது காக்காவை பார்த்து “என் மேல உனக்கு ரொம்ப பொறாமை .. என்னை மத்தவங்க புகழரதை பார்த்து உனக்கு ரொம்ப வயித்து எரிச்சல் ..அதான் இப்படி நீ புலம்பற ..நீ வேணா போ ..நான் வர மாட்டேன் ” என்று சொல்லுச்சாம்.. அதுக்கு காக்கா ” வேணாம் ..அடிக்கடி ஒரே இடத்துக்கு நீ போறது உனக்கு நல்லது இல்லை.. நீ வேற ரொம்ப அழகா இருக்க ..அதனால உன் நல்லதுக்கு தான் சொல்றேன்னு “, எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்துச்சாம்..

கிளிக்கு கோபம் அதிகமாய் ஆகி .. ” சீ வாயை மூடு.. எனக்கு நல்லது எதுன்னு எனக்கு தெரியும் ..நீ உன் வேலையே பார்த்துட்டு போ..எவ்வளவு பொறாமை என் மேல உனக்கு ..” என்று சொல்லிட்டு , சமீபத்துல அடிக்கடி போகும் பூங்கா வனதிற்கே பறந்து போச்சாம்..கிளி.

காக்காவும் வேற வழி இல்லாமல் தனியாகவே காட்டுக்கு போய் கொஞ்சம் பழங்களை சாப்டுச்சாம் ..ஆனா அதுக்கு மனசு கேக்காம , மறுபடியும் தன்னோட பிரெண்டை தேடிட்டு அந்த பூங்காவனதுக்கே வந்துடுச்சாம்.

கிளி குழந்தைங்க போடும் பழத் துண்டுகளை எம்பி எம்பி சாப்டுட்டு உற்ச்சாகமாய் சிறகை விரிச்சு குதிச்சுக் கிட்டே இருந்துச்சாம். அப்ப அங்கு ஒரு பெரிய மீசைக்கார ஆள் ஒருத்தர் பெரிய தட்டில் பலவகை பருப்புகளையும் தானியங்களையும் வச்சிக்கிட்டு கிளிக்கு அருகில் வந்தாராம் . அதை பார்த்த காக்காவிற்கு இதில் ஏதோ சூது இருக்குமோ என்று சந்தேகம் வந்து கிளியை பார்த்து உரக்கக் கத்தி கூபிடுச்சாம்..

“கிளி..சாப்டது போதும்..சீக்கிரம் மேலே வா ..” என்று திடீர்னு கத்திய காக்காவை பார்த்த கிளி , ” ஒழிஞ்சது சனியன்னு நிம்மதியா இருந்தேன்..மறுபடியும் வந்துட்டியா..யாராச்சும் எனக்கு நல்லது செஞ்சாலே உனக்கு பொறுக்காதே ..கடவுளுக்கு உன்னை பிடிக்கவே பிடிக்கலை..அதான் உன்னை உன் மனசு போலவே கருப்பாய் படைச் சிட்டார் “, என்று கத்தி அந்த தட்டை நோக்கி ஆவலுடன், வேகமாய் பறந்து போச்சாம் கிளி.

படார்..நு ஒரு சத்தம். அதுவரை பருப்புகளை சுவாரஸ்யமா கொறிச்சுகிட்டு இருந்த கிளி, அப்பத்தான் யாரோ தன் மேல எதையோ வச்சி மூடரத்தை உணர்ந்து திகைச்சு போய் நிமிர்ந்து பார்த்துச்சாம் ..வேற யார்..எல்லாம் அந்த பெரிய மீசைக்கார ஆள் தான்..கிளியை தன்னோட கூண்டில் அடைச்சு மூடிகிட்டு இருந்தார்..

தன்னோட பிரெண்டை பார்த்து கண்ணீர் விட்ட காக்கா, கடவுளுக்கு மனசார நன்றி சொல்லுச்சாம்.. கடவுளே ..அடுத்த ஜன்மத்துலயும் என்னை காக்காவாகவே படச்சுடு.. அப்ப தான் எப்பவும் போல நான் இப்படி சுதந்திரமா இருப்பேன்.. இந்த அழகால வேற ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு எனக்கு இப்ப நல்லாவே தெரிஞ்சுடுச்சு ..” என்று சொல்லி தன் வீட்டுக்கு நன்றியுடன் பறந்து போச்சாம் காக்கா ..

குறிப்பு 1: இது குட்டீஸ் களுக்கான கதை.. ஆனால் பெரியவங்களும் படிச்சு கமெண்ட்ஸ் சொல்லணும் ..

குறிப்பு 2 : பிரணவ் நீங்க அண்டங் காக்காவை பார்த்தால் கூட பொறி கடலையை அள்ளி வீசறீங்க .. அதையும் ரசிக்கும் உங்க மனோபாவம் வளரும்போதும் மாறிடாமல் இருக்கணும் என்கிற பிரார்த்தனைகளுடன்,

அதீத அன்புடன்,
அம்மா

Read Full Post »

நான் …பெண்..காத்தாடி ..

இன்றல்ல நேற்றல்ல ..என்றைக்குமே எனக்கு காத்தாடி என்றால் கொள்ளை பிரியம். காத்தாடியை பார்த்தாலே மனதிற்குள் ஒரு துள்ளல் எழும். பெயருக்கு ஏற்றபடி காற்றில் ஆடி ஆடி, காத்தாடி மேலே பறக்கும் அழகே தனி தான். மெல்லிய நூலால் கட்டப் பட்ட காத்தாடி உயரே பறக்க பறக்க , அவிழ்த்து விட்ட வால் போல, கவலைகள் ஏதுமின்றி, அது அங்கும் இங்கும் பறந்து கொட்டமடிப்பது பார்க்கவே வெகு ஜோராக இருக்கும்.

அன்றைக்கு கடை தெருவிற்கு போய் விட்டு வந்தபோது எனது பக்கத்த வீட்டு நண்பன் கண்ணைப் பறிக்கும் ஒரு வண்ணக் காத்தாடியை வீட்டு மொட்டி மாடியில் நின்று கொண்டு ஒய்யாரமாய் விட்டுக் கொண்டிருந்தான். ஜிவ் வென்று உயரே பரந்த காத்தாடியை பார்க்கும்போது கைகள் துரு துருத்து. மனது அதனுடன் சேர்ந்து ரெக்கை விரித்துப் பறந்தது. இதுவரை என்றுமே காத்தாடி விட்டது இல்லை நான். யாரும் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. உதவியதும் இல்லை.

நான் “ஆ’ வென்று திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த என் நண்பன் , ” நீ வேடிக்கை பார்ப்பதற்கு தான் லாயக்கு ” என்பது போன்ற அலட்டலுடன் அதை மேலும் மேலும் உயரமாய் பறக்க விட்டான். அவன் காத்தாடியும் அவனைப் போன்றே ஆணாக இருக்குமோ..? எதை பற்றியும் கவலை இல்லாமல் திமிறிக்கொண்டு மேலே மேலே பறந்து கொண்டிருந்தது. பறந்த காத்தாடியுடன் சேர்ந்து என் மனதும் அலை பாயத் தொடங்கியது. இன்றைக்கு எப்படியும் இவன் முன்னால் காத்தாடி ஒன்றை பறக்க விட்டே தீர வேண்டும் என்று மனதிற்குள் சபதமிட்டேன் நான்.

கோடிக் கடையில் பத்து ரூபாய் கொடுத்து நானும் ஒரு காத்தாடியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழையாமல் , நேராக அவனிருக்கும் மொட்டை மாடிக்கு சென்றேன் . அவனுக்கு நான் ஒன்றும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் என்னில் கொழுந்து விட்டு எரிந்தது.

கடைக்காரன் கொடுத்த மாஞ்சாக் கயிற்றில் காத்தாடியை ஒரு வழியாக கட்டி மேல் நோக்கி அதை செலுத்தினேன். ம்ஹூம்..கொஞ்சமும் அசைய வில்லை காத்தாடி..அது கீழே செங்குத்தாய் இறங்குவதிலேயே பிடிவாதமாய் இருந்தது. இம்மியும் மேலே பறப்பதாய் இல்லை.

மேலும் சில தடவைகள் முயற்சித்துப் பார்க்கையில் தெரிந்து கொண்டேன் மனதை அடக்குவதே வெகு சுலபம் என்று. காத்தாடி டிமிக்கி தான் கொடுத்துக் கொண்டிருந்தது.

எத்தனை முயன்றாலும்
பறக்காத காத்தாடி ..
நூலோடு நானும்
நூலாகிப் போனேன்..

மாற்றான் காத்தாடி தான் மேகத்தில் பறக்கும் போலிருக்கிறது. என் காத்தாடி மறந்தும் , மருந்துக்கும் மேலே பறப்பதாக இல்லை. என் தளராத முயற்சி அருகில் இருந்த என் நண்பனின் ஏளனம் கலந்த வெற்றிக் களிப்பில் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போய்க் கொண்டிருந்தது.

என் நண்பனை ஓரக் கண்ணால் பார்த்தவாறே , அவன் செய்வது போல நூலை பிடித்து இப்படி அப்படி என்று ஆட்டினேன். என்ன செய்தாலும் மேலே பறக்காமல் தரையில் தவழ்ந்து குழைந்து சண்டித் தனம் செய்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் பறந்தது ..என் பொறுமை … அம்மா வேறு சீக்கிரம் வரச் சொல்லி அனுப்பியது நினைவுக்கு வந்து என்னை அலை கழித்தது.

ஏனோ எல்லாவற்றின் மீதும் கோபம் பொத்துக் கொண்டு வர , என் வீம்பை கொஞ்சம் தளர்த்தி, என் நண்பனை பார்த்து கொஞ்சம் உதவேன் என்பது போல ஒரு “கெஞ்சல்” பார்வையை வீசினேன். அவனோ ” உனக்கெல்லாம் எதுக்கு இது..பேசாமல் நான் விடுவதை பார்த்துட்டு போவியா..?” என்று கொக்கரித்தான்.

காத்தாடி பெண்களின்
கண்களுக்குத்தான்..
கைகளுக்கல்ல ..

என்று சொன்ன நண்பன் இப்போது விரோதியாய் தெரிந்தான். காத்தாடி வாங்குவதும் ஒரு கலை தெரியுமா..நல்ல மாஞ்சாக் கயிற்றை வீட்டிலேயே செய்வதும் ஒரு கலை..அதெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது.. உன் காத்தாடி என்ன செய்தாலும் என் காத்தாடி போல பறக்கவே பறக்காது …போய் உங்க அம்மா வாங்கி வரச் சொன்ன அப்பளத்தை கொடுத்துட்டு வா ..கீழே எல்லோரும் உன்னை தேடிட்டு இருக்காங்க ..என்று கூறி கட கடவென சிரித்தான் என் நண்பன் . ஆண் திமிர்..!

கோபம் கோபமாய் வந்தது எனக்கு. ஆனால் கோபம் என்றைக்கு பெரிதாக சாதித்தது. கிழித்துப் போட்டேன் காத்தாடியை.. நான் கிழித்தது அவன் காத்தாடியை என்பதால் , இப்போது அவன் கையில் என் காத்தாடி என்னை பார்த்து கண்ணடித்து சிரித்தது.

” இதோ பார்..அதோ பார் ..எப்படி பறக்குது பார் “, என்று என்னை பார்த்து போங்கு காட்டினான் அவன். இப்பொழுது முன்பை காட்டிலும் ஏளனமாய் அவன் குரல் ஒலித்தது போலிருந்தது. . என் காத்தாடியை எனக்கே காட்டி இன்னமும் உயர உயர பறக்க விட்டுக் கொண்டிருந்தான் அவன்.

இருந்தாலும் சிலிர்ப்பாய் மனதிற்குள் மகிழ்ச்சி பரவியது. பரவிய மகிழ்ச்சி உந்திக்கொண்டு தானாக வெளிப்பட, குதூகலம் நிறைந்த குரலில் சொன்னேன்..” பறப்பது என் காத்தாடியாக்கும்..அது தான் அத்தனை உயரமாய் பறக்கிறது.. ”

மேலும் சும்மா இராமல், ” 12th ரிசல்ட் அடுத்த வாரம் வெளி வருது ..அப்ப தெரியும் யாரோட பட்டம் ரொம்ப உயரமாய் பறக்கும் என்று.. வெவ்வே ..”, என்று ஒழுங்கு காட்டி விட்டு சிட்டாக வீட்டிற்குள் பறந்தேன்.

நுழையும்போதே அம்மா கத்தினார் …” போனா சீக்கிரம் வர தெரியாது..அப்பளம் வாங்கி வர எவ்வளவு நேரம்… ? இன்னமும் பதினைந்தே நிமிஷத்தில், உன்னை பெண் பார்க்க மாபிள்ளை வீட்டுக் காரர்கள் வருகிறார்களாம்..மச மசன்னு நிற்காம, சீக்கிரம் போய் ரெடியாகு…”

திகைப்புடன் நான்….! என் மனக் கண்ணில், சற்றுமுன் என்னால் கிழி பட்ட நண்பனின் காத்தாடி , அவனின் அதே ஏளனம் கலந்த சிரிப்புடன் என்னை பார்த்து கண்ணைச் சிமிட்டி சிரிப்பது போல இருந்தது. மெல்லிய வருத்தம் பரவ ஜன்னலின் ஊடே வெறித்துப் பார்த்தேன்.. அவனிடம் கொடுத்திருந்த என் காத்தாடி , இப்போது மின் கம்பத்தில் சிக்குண்டு வாலருபட்டு துடியாய் துடித்துக் கொண்டிருந்தது..

நான் .. பெண் ..
காத்தாடி..
என்றுமே இயங்குவதில்லை..
இயக்கப் படுகிறேன்..

என்பது புரிய வெகு நேரமாகவில்லை..

டிஸ்கி-1: ஐந்து வருடத்திற்கு முன்பு காத்தாடி விட்ட என் நண்பன் பேமென்ட் சீட்டில் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டான். அவனை விட இருபது சதவிகிதம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நான் … இப்பொழுது என் நான்கு வயது பெண்ணிற்கு காத்தாடி விடக்( இயக்கக்) கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் ..

டிஸ்கி-2 : இது ஆங்கிலத்தில் நான் எழுதிய (Me, The Kite) proem -மின் மொழி பெயர்ப்பு .. சிறுகதை வடிவில் கொடுத்திருக்கிறேன்.. I have written “Me, The Kite ” on 15/08/02 just 2 months after I got married ..haha 😆

டிஸ்கி-3:.. இதில் வரும் நான் நான் அல்ல..நான் கோபம் வந்தால் வெறும் காத்தாடியை கிழிக்கும் ரகம் இல்லை . ———–…. ஹிஹி

Read Full Post »