Feeds:
Posts
Comments

Archive for the ‘சமையல் குறிப்புகள்’ Category


எம்கண் கொள்ளப் பார்ப்பதற்காய் கடல் கொண்ட
கார் வண்ணம் தழுவும் திருமாலின் தோற்றம்
எம்முயிர் வளர் நுகர்ச்சியாய் இளந்துளசி மாலையோடு
பால் வெண்ணை கமழும் அவன் மேனி நாற்றம்
அவன் அருள் பொங்கும் பார்வையோடு சட கோபமும்
எம்வினை தீர்க்க நீண்டெம்முடி தொடும் ஸ்பரிசம்
அமுதெலாம் தோற்கும் அவன் உண்ட பின் காதலுடன்
யாம் சுவைக்க எமக்காய் அவன் வைக்கும் மீதம்
தெய்வக் குழலோடு சங்கு சக்ரம் கதை ஏந்தி
அதனோடு அவன் அருள் பொங்கும் பார்வை ஏந்தி இப்படியாய்
ஐம்புலன்களை இளங்குழந்தை செயலாக இன்பமோடு யாமடக்க
திரு அன்னையவள் துணையயொடு எமக்கெனவே திருமலையில்
திரு வேங்கடத்தை வ்ருந்தாவனமாக்கி விண்ணுயர உறைந்திருக்கும்
அந்தச் ச்யாமளக் கண்ணனை கண்டுவிட்டால் போதுமே
அக்கணம் தொட்டே வைகுண்ட வாசம் நமக்கு !

Read Full Post »

This slideshow requires JavaScript.

பகவானிற்கு சமைக்க மடி அவசியமா?
Hare Krsna,

ஒரு சிலர் தாங்கள் உணவருந்தும் அதே தட்டுகளோடு பகவானின் தட்டு, டம்பளர் , சமைக்கும் பாத்திரங்கள் எல்லாம் போட்டு கழுவுவதை சில நேரங்களில் பார்க்க நேரிடுகிறது.. மேலும் சில நேரங்களில் தாங்கள் உணவருந்தும் அதே தட்டுகளிலும், கோப்பைகளிலும் பகவாநிற்கு நெய் வேத்தியம் செய்வதையும் அவ்வப்பொழுது காண நேரிடுகிறது. .. ! எனக்கெல்லாம் எங்களது தேவைக்காய் நாங்கள் உபயோகப் படுத்தும் , எங்களது எச்சிற் தட்டுகள், குடுவைகள் மற்றும் கோப்பைகளில் எல்லாம் பகவாநிற்கு உணவை படைக்க வேண்டும் என்கிற சிந்தனை சரியாகப் படவில்லை .. !!!

ஒரு பக்தரின் இல்லத்தில் விருந்திற்கு அழைத்தார்கள் .. சாப்பிடும்போது சாதம் வடித்த பாத்திரத்தில் கொஞ்சம் மிகுந்தது ..அவர் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதே கையால் அதை வழித்துத் தன் தட்டில் வைத்துக் கொண்டார் .. எனக்கு பகவானே என்று இருந்தது .. !!!!! அதே பாத்திரத்தில் அவருக்கு நெய் வேத்தியம் சமைத்து அதை நானே பகவானுக்கு அன்று படைக்கவும் செய்தேன் .. பொதுவாக நன் பிரசாதம் மட்டுமே அருந்துவதால், எங்களது நண்பர்களின் இல்லத்திற்கு செல்லும்போது நானே சில நேரங்களில் அவர்கள் முன்பே நெய்வேத்தியம் செய்திராத பட்ச்சத்தில் பகவானுக்கு படைக்கவும் செய்து விடுவேன் .. ! இது பெரிய வரம் இல்லையா !!

சரி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன்.. தான் அவ்வாறு நடந்து கொண்டதும் அவருக்கே ஏதோ தோன்றியது போல, உன் போல நான் ரொம்பவும் சுத்தம் இல்லை என்று அவர் என்னிடம் சொன்னார் .. “சபரி எல்லாம் எச்சில் படுத்தித் தந்ததை ராமர் எடுத்துக் கொண்டார் இல்லியா … நீ தான் ரொம்பவும் அப்படி இப்படி என்று இருக்கிறாய் .. ஏன் கூடுதல் சிரமம் … அப்படித்தான் நீ பண்ண வேண்டும் என்று இருக்கிறதா என்ன .. அதுவும் நாமிருக்கும் இந்த அந்நிய தேசத்தில் இதெல்லாம் அவ்வளவு சாத்தியம் இல்லை “, என்று அவர் ஏதேதோ உதாரணம் வேறு சொல்லிக் கொண்டு போக , அவருக்கு சபரி போன்ற களங்கமில்ல பக்தி என்றும் இப்படியே நிலைத்திட பெருமாளிடம் வேண்டிக் கொண்டு என்னுடைய கருத்தைப் பகிர்ந்து கொண்டேன்..

“நீங்கள் இப்படி இருப்பதை பற்றி நான் எதுவும் சொல்ல இயலாது ..அதற்கெல்லாம் எனக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை.. உங்களுக்கும் கண்ணனுக்கும் இருக்கும் பக்தி உங்களிருவருக்குமே தெரியும்..ஆனாலும் எனக்கு பகவானுகேன்று சிரத்தையாய் , அக்கறையாய் சுத்தமாய் , மரியாதையாய் இருப்பதே பிடித்திருக்கிறது. ஒவ்வொருவரின் பக்தியும் ஒவ்வொரு ரகம். சபரி போல ராமருக்காய் அவர் வரவை மட்டுமே அன்றாடம் எதிர் பார்த்துக் கொண்டு , வேறு எந்த பிடிப்பும் பற்றுதலும் இல்லாமல், அவருக்கு ..அதுவும் என்றோ ஒரு நாள் வரப் போகும் அவருக்காக அத்தனை நாளும் காட்டு வழியை சுத்தப் படுத்தி, வழி எங்கும் நறு மலர் தூவி, புதிய சுவை மிகும் பழங்களை அன்றாடம் அவர் அருத்துவதற்காய் பறித்து , அவரின் வருகைக்காகவே ஒரு மாதவம் இருந்த அவர் போன்ற பக்தி உங்களுக்கும் கை கூடி இருப்பதில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி .. ஆனால் எனக்கு இன்னமும் அத்தனை யோக்கியதை எல்லாம் இல்லை .. ஒரு வேளை வரும்போது நானும் அவ்வாறு இருப்பேனோ என்னமோ என்று “, சொன்னேன்.

எனவே பக்தியில் இது தான் சரி என்று யாரும் யாரையும் பார்த்து சொல்ல முடியாது .. என் வழக்கமாய் நான் முடிந்த வரை நம்முடைய பெரியவர்கள் கூறி வந்த வழக்கத்தை அவர்கள் தங்கள் அனுபவத்தினால் எது நல்லது என்று முறைப்படி அறிந்து சொல்லி இருப்பதால், பெருமாளுடைய கைங்கர்யத்திற்கு அவற்றையே பின் பற்றுதல் என்பதாக வைத்திருக்கிறேன் .. அதிலே என்னையும் மீறி எத்தனையோ குறை பாடுகள்.. காம்ப்ரமைஸ் .. 😦 .. சில நேரங்களில் நான் முயற்சி பண்ணினாலும், கொஞ்சமும் அந்த வழக்கங்களை பின் பற்றுவது இல்லை இல்லை என்ற குற்ற உணர்வே மிகுதியாகத் தோன்றும் ரீதியிலேயே இருக்கிறது என்னுடைய வழிபாடுகள் எல்லாம் …. 😦

எனவே இங்கு நான் சொல்லி இருப்பது , நான் பின் பற்றும் முறை என்று மற்றுமே.. வழக்கம் போல, உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருந்ததது ..

எங்கள் வழக்கம் …

நாங்கள் எது சமைத்தாலும் பகவாநிற்கு நெய்வேத்தியம் அளித்த பின்பு மாத்திரமே சாப்பிடுவது வழக்கம் .. எங்கள் பாட்டி முதலானவர்கள் , பகவாநிற்கு சில வற்றை சமைக்க மாட்டார்கள் .. உதாரணம் வெங்காயம் , பூண்டு .. மேலும் பண்டிகைக் காலங்களில் உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ், கோஸ் போன்ற அந்நிய தேசத்துக் காய்களை தவிர்த்து தேசிக் காய்களிலேயே நெய்வேத்தியம் சமைப்பார்கள் ..

கிருஷ்ணருக்கும் எங்களுக்கும் எல்லா நாளும் பண்டிகை தான் .. எனவே நாங்கள் எது சமைத்தாலும் அது நெய்வேத்தியதிற்கு என்று மாத்திரமே சமைப்பது .. ஏதோ மாதத்திற்கு ஒரு நாள் வரும் பண்டிகைக்கு மாத்திரம் நிவேதனம் தந்தால், மற்ற நாட்களில் அவர் பட்டினியாய் கிடைப்பாரா இல்லை என்றால் நாம் வக்கணையாய் விதம் விதமாய் திங்கும்போது, அவர் வெறும் சாதமும் பாலும் பழமுமே எத்தனை நாள் தான் எடுத்துக் கொள்வார் ?

நம் இல்லத்தில் நித்தியமாய் அர்ச்சா மூர்த்தியாய் , நமக்காய் ரொம்ப விசேஷமாய் , நம்மோடு ஒருவராய் நமது விக்ரஹத்தில் நம்மையும் மத்தித்து குடி இருப்பவருக்கு இப்படித்தான் மரியாதை செய்ய வேண்டுமா ? கொழுக் மொழுக் கண்ணனே அழகு ? அவர் ஒன்னும் டயட்டில் இல்லை , நமது இல்லத்தை தேர்ந்தெடுக்க , என்று நான் என்னுடய பாட்டி மற்றும் அம்மாக்களிடம் வாதிட்டு எனது அம்மாவும் இப்போதெல்லாம் கிருஷ்ணருக்கு அன்றாடம் போகம் தருகிறார்கள் 🙂 !

ஆனால் எனக்கு இங்கு கிடைப்பதெல்லாம் பெரும்பாலும் இந்தக் காய்கறிகள் தான் !!!! நான் வெங்காயம் , பூண்டு மற்றும் மஷ்ரூம் இவற்றை மாத்திரம் தவிர்த்து பிற காய் கறிகளை சமையலில் சேர்த்துக் கொள்வது வழக்கம் … ஏகாதசி அன்று மாத்திரம் அரிசி , பருப்பு , பீன்ஸ் போன்ற வற்றை தவிர்த்து விடுவேன் (நோ க்ரைன்ஸ் அண்ட் நோ பல்செஸ் ) ( தமிழில் பருப்பு, பயிறு வகைகள் மற்றும் தானிய வகைகள் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன் … )

நெய்வேத்தியம் சமைக்கும்போது சுத்தமாய் குளித்து, ஏற்கனவே துவைத்த ஆடையை மட்டும் அணிந்து சமைக்க வேண்டும் … நான் சமையலறையை நன்கு சுத்தப் படுத்தி , ஒரு சின்ன பிரார்த்தனையோடு சமைப்பது வழக்கம் … நாம் சமைப்பது பகவாநிற்காக என்றால் சிரத்தையும் ஈடுபாடும் தானாய் வந்து விடும் … ஒரு சிலர் நெய்வேத்தியம் வெறும் சாதத்தை செய்து விட்டு சுவாமிக்கு வைத்து விட்டு, பிறகு தங்களுக்கென்று சமைத்துக் கொள்கிறார்கள் … ..
ஏன் என்றால் இட்லி,தோசை,பீட்சா , பாஸ்டா மற்றும் கேக் வகையறாக்கள் எல்லாம் சுவாமிக்கு நெய்வேத்தியமாய் வைக்கக் கூடாது என்பது இவர்களின் கருத்து . பாரம்பரியமான சமையலை மாத்திரமே பகவாநிற்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் என்பது இவர்களின் அபிப்ராயம் .. அவருக்கு படைக்காமல் நாம் மாத்திரம் எப்படி சாப்பிடலாம் என்று நான் கருதுவதால் , நான் இது போன்றவைகளையும் அவருக்குப் படைப்பது.

அதோடு எனக்கு இன்னுமொரு அசையாத நம்பிக்கை. கிருஷ்ணருக்கு அன்றைக்கு எதை சாப்பிட வேண்டும் என்று விருப்பமாய் இருக்கிறதோ அதையே நான் சமைப்பதாக தோன்றும் .. பல நேரங்களில் காலையில் குளிக்கும்போது புதுப் புது ரெசிப்பிக்கள் மற்றும் ஐடியாக்கள் எனக்குத் தோன்றும் … இத்தனைக்கும் சமைப்பதில் எல்லாம் எனக்கு அனுபவம் ரொம்பவும் கம்மியே ! எனவே சமைக்க வைப்பது கண்ணனின் செயல் என்றே தோன்றும் ….

கிருஷ்ணருக்கு சமைப்பது தான் எங்களுக்கு .. கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்யாமல் நாம் எதை சாப்பிட்டாலும் அது பாவத்தை சாப்பிடுவதற்குச் சமம் என்பதால், ஏற்கனவே தின்ற பாவங்கள் போதும் என்பதாலும் நான் அவருக்கு சமைப்பதை மாத்திரமே எல்லோருக்கும் பரிமாறுவது என்கிற முடிவில் இருக்கிறேன் .. சில நேரங்களில் , கடைகளில் சூழ்நிலையின்(கொழுப்பு மற்றும் சோம்பேறித் தனத்தின் ) பேரால் சில பொருட்களை வாங்க நேரிடுகின்றது … உதாரணம் ப்ரெட் , ஜாம் அண்ட் சிப்ஸ் …

இவற்றையும் நான் கிருஷ்ணருக்குப் படைத்து விட்டு பின்பு தான் எடுத்துக் கொள்வது … இறைவனுக்கு தரும் நெய்வேத்தியம் மூன்று மணி நேரத்திற்குள் தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது தன் சாஸ்த்திரம் … இந்த சிப்ஸ் வகையறாக்கள் எல்லாம் உண்மையில் ப்ரசாதமா என்று கேட்டால், கண்ணனுக்கு தந்து விட்டு , அவரை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு விட்டு பிறகு அருந்துவதால் பிரசாதம் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொள்கிறேன் … இதை எல்லாம் தயவு செய்து நீங்கள் பின் பற்றாதீர்கள் .. நான் முடிந்த வரை கடைகளில் வாங்கு வது குறைவே .. எப்பொழுதோ ஒரு முறை பிரணவ் கடைகளில் கிடைக்கும் சிப்ஸ், சாக்லேட் கேட்டு சில நேரம் அடம் பிடிக்கும்போது மனம் இளகி இப்படி செய்வேன் .. மேலும் ப்ரெட் எங்கள் இல்லத்திற்கு அருகில் சுடச் சுட எந்த ப்ரிசெர்வேடிவும் சேர்க்கப் படாமல் ஒரு பேக்கரியில் தயாரிக்கப் படுவதால், அதை பிரணவிற்கு வாங்குவது … ஸ்கூல் லஞ்சாய் அதை தருவது என் வழக்கம் .. ஏன் என்றால் அவன் பள்ளியில் லஞ்சை சாப்பிட மாட்டான் .. வீட்டிற்கு அப்படியே கொண்டு வருவான் .. இல்லா விட்டால் கடாசி விடுவான் ..இதற்கு இந்த கடை ப்ரெட்டே போதும் என்று இப்படி செய்து விடுகிறேன் .. (சரி ! சரி ! இனப் ஆப் மை எக்ஸ்கியூசஸ் ! )

ஆனால் நான் சொன்னது போல , அவ்வப் பொழுது புதியதாய் சமைத்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் அளிக்க வேண்டும் .. பிறகு பகவானின் பாத்திரங்களை நாம் பகவானாகவே பாவிக்க வேண்டும் … அவற்றியோ நமது தனிப்பட்ட உபயோகத்திற்குக் கையாளக் கூடாது .. சமைக்கும் போது , உப்பு காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்றெல்லாம் சுவை பார்க்கக் கூடாது … நாம் சாப்பிட்டதை பகவாநிற்கு நெய்வேத்தியம் அளிக்க முடியாது .. முதலில் அவர் சாப்பிட்ட பின் , நாம் எடுத்துக் கொள்வதால் தான் , சமைத்த உணவு பகவானின் பிரசாதம் என்று அழைக்கப் படுகிறது .

மேலும் கை தவறி கீழே விழுந்து விட்ட உணவுப் பொருட்களை பகவாநிற்கு நிவேதனம் அளிக்கக் கூடாது ..உதாரணமாய், புதியதாய் மொரு மொரு வென்று வடையை பொறித்து வைத்திருக்கிறோம் என்ற வையுங்கள் ..அவற்றை படைக்கும் முன் , கை தவறி கீழே விழுந்து விட்டால், அவற்றை மீண்டும் பகவாநிற்கு நிவேதனம் அளிக்கக் கூடாது .. ! கீழே விழுந்ததை நாம் நமது விரோதிக்கும் பரிமாற மாட்டோம் இல்லையா ? அப்படி இருக்கையில் எப்படி கண்ணனுக்கு அளிப்பது !!!

இதெல்லாம் சுகாதாரத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பதால் இவற்றை நான் தவறாமல் பின் பற்றுகிறேன் ! எங்கள் இல்லத்து கண்ணனுக்கு நான் இந்திய பாரம்பரிய சமையலோடு, பிட்சா , பாஸ்டா , பர்கர் முதலானா அந்நிய தேசத்து உணவு வகைகளையும் சமைத்து நிவேதனம் தருகிறேன் ..

Note:- நான் பார்த்த வரையில் உண்மையான முஸ்லீம்கள் , ஹலால் என்று இல்லாத எதையும் வாயில் வைத்துக் கொள்வதில்லை .. உண்மையான கிறிஸ்த்தவர்களும், யூதர்களும் கோஷர் என்று இல்லாத எதையும் எடுத்துக் கொள்வதில்லை .. இந்த ஹலால், கோஷர் என்பதற்கெல்லாம் பொருள் , தாங்கள் பயன்படுத்துவதை பெருமாளுக்கு நிவேதனம் செய்து விட்டு எடுத்துக் கொள்வது என்று பொருள் …

பெருமாளுக்கு பெயர் மொழிக்கு மொழி, கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் , ஆளுக்கு ஆள் சற்று வேறு பட்டாலும் , அவரை அடையும் வழி மற்றும் அவரை வழிபடும் வழி எல்லாம் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கிறது !

எனவே நீங்கள் எதை அருந்துவதாய் இருந்தாலும், முதலில் கண்ணனுக்கு நிவேதனம் தந்து விட்டு பிறகு அருந்துங்களேன் .. அந்த சுவைக்கு எதுவும் ஈடாகாது என்பது என் நம்பிக்கை .

பிரசாதத்தை எப்படி உண்வது ?

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாய் !!! பிரசாதத்திற்கென்று ஒரு தனி ருசி இருப்பதை அதை சாப்பிட்ட ஒவ்வொருவரும் உணர்வார்கள் .. இது நிச்சயம் பக்குவமாய் சமயத்தவரின் கை மணத்தினாலோ , அல்லது சமைத்த பொருட்களின் ருசியினால் மட்டுமே வந்தது என்று சொன்னால் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் .. ஏன் என்றால் நான் சமைப்பது கூட நன்றாய் இருக்கிறதே 🙂

இதற்கு உண்மையான காரணம் , பகவான் அதை சாப்பிட்டு திருப்திப் பட்டதால் தான் .. அவருக்கு பரிமாறும்போது தாயார் ருக்மிணி பார்த்து பார்த்து பரிமாறுவார் இல்லையா . குறை எல்லாம் அவர் சரி பண்ணி விடுவார் … 🙂 நாமும் நிம்மதியாய் , சந்தோஷமாய் பெருமாளின் பிரசாதத்தை ஒரு பிடி பிடிக்கலாம் .. 🙂

அவர் நமக்காய் , நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் நமக்கு வைத்த மீதம் என்று அதை உணர்ந்தோமேயானால், அதை உண்ணும்போது நம் மேனி சிலிர்க்கும் ..அதன் சுவை நம் சிந்தையை தூய்மைப் படுத்தும் .. பிரசாதத்தை எடுத்துக் கொள்பவர்கள் , மரியாதையோடு , நமக்கு அன்றாடம் படி அளக்கிறாரே பகவான் என்கிற நன்றியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அபிப்ராயம் ..! உங்கள் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆவல் .

***********

This slideshow requires JavaScript.

Read Full Post »

This slideshow requires JavaScript.


************************************************************************************

அயோத்தியில் உன் அன்னையர் கவுசலையும் சுபத்திராவும்
அவரோடு கேகேயியும் அதிகாலை முதற் கொண்டே
அரண்மனையின் அமுத கூடத்தில் ஆவலாய் ஆசையோடு
தங்கத் தட்டில் தக தகக்கும் நெய் பூரியும் , பவுர்ணமிபோல் போளியும்
பட்டு பட்டு ரொட்டி வகையும் கர கர கச்சோரியோடு காகராவும்
பத்து வகை பஜ்ஜி வடையும் பள பளக்கும் தோக்ளாவும்
நெய் ஓடும் வெண்பொங்கலும் நவ இரத்தின சித்திரானங்களும்
கெட்டித் தயிர் பச்சடியும் நறுமணக்கும் நல் பொடி வகையும்
பதினாறு விதமான காய் கறி கூட்டும் கம கமக்கும் பாஜியும் சட்னியும்
மொரு மொரு பதிற் பேணியும் சித்திரமாய் வண்ண வண்ண ஜிலேபியும்
மெத்து மெத்து ரசகுல்லாவும் பாற்கடலாய் முந்திரி பால் பாயசமும்
இப்படியாய் தொடங்கி நூற்றியெட்டு இனிப்பு வகையும் இதனூடே
பேரும் நானறியா எண்ணி(யும்) மாளா அறுசுவை போஜனத்தை
ஒருவரேனும் சளைக்காமல் ரொம்ப ரொம்ப ஆசையோடு அக்கறையாய்
செல்லகட்டி உனக்கெனவே போட்டி போட்டு தாமே சமைத்து
யார் கண்ணும் பட்டு விடாமல் தசரதனுக்கும் தெரியாமல்
வக்கணையாய் தருவாரே அன்றாடம் உனக்கொரு போகம் !

அவர்களுக்கு போட்டியாய் உனக்கெனவே வாழும் ஓர் தாய்
யசோதையோ ஆசையோடு அன்றாடம் புது வெண்ணை எடுத்து,
நீ உடைக்க வேண்டியே (அதை)உயரமாய் உறிப்பானையில் போட்டு
வெள்ளித் தட்டு நிறைய லட்டும் ஜாங்கிரியும் ரசமான ராஜ போகும்
நெய் மணக்கும் அல்வாவும் தேங்காய் பிட்டும் மோதகமும்
பொக்கிஷம் போல் உன்னி அப்பமும் குழிப் பணியாரமும்
அது போதாமல் திரட்டிப்பாலும் அதிரசமும் அழகாய் செய்து
நெய்யோடும் அக்கார அடிசிலோடு ஸ்ரீகண்டும் குலாப் ஜாமூனும்
பாலோடும் ரச மலாயும் காஜாவும் அதனோடு சந்திரஹாரும்
அதுவும் போதாமல் தட்டையும் சீடையும் சேவையும் வைத்து
சுருள் முறுக்கும் தேன்குழலும் சோமாசியும் சொஜ்ஜப்பமும் நிரப்பி
அதனூடே ஆப்பமும் தோசையும் இட்லியும் இடியாப்பமும் அடுக்கி அதன் பக்கம்
மெதுவடையும் மொரு மொரு போண்டாவும் சட்னியும் சாம்பாரும் என்று
என்றுமே உன் பின்னே நிற்காமல் ஓடுவதால் நேரமது போதாமல்
சின்னதே சின்னதாய் போனாலும் அளவில்லாத ஆசையினும் ஆசையோடு
யார் கண்ணும் பட்டு விடாமல் நந்தனுக்கும் தெரியாமல்
வக்கணையாய் தருவாரே அன்றாடம் உனக்கொரு போகம் !


இவர்களுக்கு ஒரு மாத்தும் குறைவின்றி அதற்கும் மேல்
தெய்வத்தாய் தேவகியும் தானிருக்கும் சின்னஞ்சிறு சிறைக்குள்ளே
சிரத்தையாய் ஆயிரமாய் மனக்கண்ணிலேயே மண மணக்க
நிகரில்லா அற்புதமாய் பெரும் விருந்தை பக்தியோடு உனக்கெனவே
தன் மனப் பள்ளியை உன் மடப்பள்ளியாக்கி தன் கைப்படவே
அறுசுவை போதாமல் ஏழாய் அவள் அன்பின் சுவையும் சேர்த்து
அதிமதுர அருஞ்சுவையில் ஈரேழு லோகமெல்லாம் அதிசயிக்க
தன்கையை கிண்ணமாக்கி தன்கையாலே ஒவ்வொரு வாயாய்
வேறு எந்த நினைப்புமின்றி பொங்கியோடும் ப்ரேமையோடு
யார் கண்ணும் பட்டுவிடாமல் வசுதேவனுக்கும் தெரியாமல்
வக்கணையாய் தருவாரே அன்றாடம் உனக்கொரு போகம் !

இருப்பதோ நான்கே பிடி தட்டை பழம் அரிசி !!
நெய்யோ தீஞ்சுவை பாலோ தேனோ உலர் பழமோ
நொறு நொறுக்கும் நல் பருப்போ நல்லதாய் பல சரக்கோ
அதை சமைக்க பாத்திரமோ வைத்துத் தர மண் வட்டிலோ (வட்டிலதுமோ )
வேறொன்றும் இல்லாமல் போனதினால் பழம் துணியில்
தனதன்பால் வருத்ததை முடித்தாளே (அந்தக்) குசேலரின் பத்தினியும் ..!
தருவதா .. வேண்டாமா ? உனதருமை நண்பனுக்கு தடுமாற்றம் ..!
நீ கேட்டும் ஒன்றுமில்லை என்று சொல்லி மறைத்து விட்ட
அந்த அன்பினாலே வறுக்கப் பட்ட அவல்பொறியை நீயாக
ஆசையோடு எடுத்துண்ண அன்னை ருக்மிணியும் அதிசயிக்க
உன் வயிறு நிறைந்ததென்ன ! உன் இதயம் குளிர்ந்ததென்ன !!!
அன்னையவள் செல்வமெல்லாம் (அந்த) அவல் பொறி முடிப்பிற்கு முடிப்பிற்கு நிகரில்லை
என்று நீ பட்ட திருப்தியிலே பாதி செல்வம் தேய்ந்து விட
பதை பதைத்து லட்சுமியும் உன்னை தடுத்த பின்னாலும் ஆசையோடு
உனை முடித்த நான்கு பிடி அவலயும் ஒரு பிடி பிடித்து விட
யார் கண்ணும் பட்டுவிடாமல் லட்சுமிக்கும் தெரியாமல்
வக்கணையாய் தின்றாயே அது போலும் ஓர் போகம் !

தந்து விட துப்பில்லை ஆசை மட்டும் விடவில்லை !
உந்தனுக்கே உந்தனுக்காய் முப்பெரும் தேவிமாரின் ஆசையோடு
தாய் யசோதை அவள் போன்று அளவில்லா(த) காதலோடு
அன்பு அன்னை தேவகியின் சிரத்தையான பக்தியோடு
குசேலரின் பத்தினியின் பெருந் துணிச்சல் நானும் பெற்று
அன்னை லட்சுமியின் ஆசியோடு நீ சுவைக்க தருகின்றேன்
என் சிறு போஜனத்தை என் குறை யாவும் பொறுத்து
ஏற்றுக் கொள்வாய் ! ஏற்றுக் கொள்வாய் !
திருமலை வாழ் கோவிந்தனே ஏற்றுக் கொள்வாய் !
ஏற்றுக் கொள்வாய் ! ஏற்றுக் கொள்வாய் !
வ்ருந்தாவனம் உறை ஸ்யாமளனே ஏற்றுக் கொள்வாய் ..!

************************************************************************************

This slideshow requires JavaScript.

Read Full Post »

எங்கள் இல்லத்து பிரசாதம் !

பிரசாதம் என்றால் ஏதோ கோவில்களில் கிடைப்பது மட்டுமே என்று சின்ன வயதில் நான் நினைத்துக் கொள்வது வழக்கம் .. பண்டிகை காலங்களில் பட்ச்சணங்கள் , இனிப்பு வகைகள் , விருந்து வகைகள் எல்லாம் செய்து சுவாமிக்கு நெய்வேத்யம் தந்து பின்பு எல்லோரும் அருந்தினாலும் கூட, பிரசாதம் என்றாலே கோவிலில் கிடைக்கும் சிற்றுண்டிக்கான பெயர் என்றே தோன்றும் 🙂

கொஞ்சம் வளர வளர பிரசாதம் என்றால் , பகவான் அருந்தியதன் மீதி என்கிற விவரம் புரிந்தது … பகவான் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா ..சக்ரவர்த்திகளுக்கெல்லாம் சக்ரவர்த்தி .. எனவே அவருக்கு சமைப்பது என்பது எவ்வளவு விசேஷம் .. நமது இல்லத்திலும் சுத்தமாய், பக்தியோடு அவரையே மனதில் நினைத்துக் கொண்டு சமைத்து , பின்பு முதலில் அவருக்குப் பரி மாறி பின் நாம் எடுத்துக் கொள்ளும் எல்லாம் பிரசாதமாகி விடும் .. ஏன் எனில் இல்லம் என்பது அவர் நம்மோடு உறையும் ஒரு சிறு கோவில் தானே 🙂

எனவே அவருக்காய் நெய் வேத்தியம் சமைப்பதில் தனி ஈடுபாடும் ..காதலும் பெருக ஆரம்பித்தது. இது எத்தனை பெரும் பாக்கியம் என்று உணர்ந்தபோது இன்னமும் சிறப்பாய் செய்ய வேண்டும் என்று உந்துதல் ஏற்படுகிறது ..எனவே அன்றாடம் அவருக்கு குறைந்தது ஒரு போகமேனும் செய்து படைப்பது வழக்கமாய் வைத்துள்ளேன் ..

எங்கள் இல்லத்தில் அவருக்கென்று தினுசு தினுசாய் அழகழகாய் தட்டுகள், டம்பளர்கள், விதம் விதமாய் கப் கள், குடுவைகள் , ஸ்பூன்கள் என்று வைத்திருக்கிறேன் .. 🙂 நாங்கள் உபயோகப் படுத்தும் எதிலும் அவருக்கு படைப்பதில்லை .. கிருஷ்ணர் அவருக்கென்று தனி பாத்திரத்தில் ஆடம்பரமாய் தந்தால் தான் ஏற்றுக் கொள்வாரா ..இல்லை என்றால் அவருக்கு இவ்வளவு ஆடம்பரமாய் வகை வகையாய் பாத்திரங்கள் வாங்கி படைத்தால் தான் ஏற்றுக் கொள்வாரா என்று கேட்டால் ..இல்லை ..!! அதாவது அதை பற்றி சொல்வதற்கு எனக்கெல்லாம் எந்த ஒரு அருகதையும் இல்லை ! அவரே சொல்வது போல் அன்போடும் பக்தியோடும் வெறும் தண்ணீரை மண் குடுவையில் கொடுத்தாலும் அவர் ஆசையோடு அதை ஏற்றுக் கொள்வார் .. குசேலரின் மனைவி கிழிந்த பழம் ஆடையில் முடித்து தந்த அந்த நான்கு பிடி வறுத்த அவல்பொறிதான் இன்றளவும் அவருக்கு ரொம்பப் பிரியமான போகமாய் இருந்திருக்கிறது !!!

ஏதோ என்னுடைய சொற்ப புத்திக்கு இப்படி அவருக்கு செய்து அழகு பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை .. விதம் விதமாய் இங்கு பொருட்கள் கிடைக்கும் போது, அவருக்கு அவற்றில் நிவேதனம் செய்து பார்க்க வேண்டும் என்று .. மனதிற்கு தோன்றியது .. அவ்வளவே !

சில நேரத்தில் எங்கள் இல்லத்திற்கு வரும் நண்பர்கள் ஆக்சிடேண்டல்லி பகவானின் பொருட்களை தங்கள் உபயோகத்திற்கோ அல்லது கிருஷ்ணரின் சமயலறையில் உள்ள க்ரிஷ்ணருக்கான பொருட்களை அறியாமல் தங்கள் உபயோகத்திற்காய் எடுத்து கையாளும் சம்பவம் நடக்கும் .. அப்போதெல்லாம் முடிந்த அளவிற்கு பொறுமையாய் விளக்குவேன் .. கண்ணனிடமும் பெரிதாய் என்னுடைய கவனக் குறைவிற்காய் மன்னிப்பை கேட்டுக் கொள்வேன் ..

எங்கள் இல்லத்தில் சமையலறை முற்றிலும் கண்ணனுக்கே சொந்தம் … கிருஷ்ணாஸ் கிட்ச்சன் என்றே எல்லோரும் சொல்லுவோம் .. எங்கள் இல்லத்து மடப் பள்ளி .. ( நாங்கள் கையலம்பிக் கொள்ள, எங்கள் தட்டு , தம்பளர்களை எல்லாம் கழுவிக் கொள்ள ஸ்டாரே ரூமில் தனியாய் சிங்க இருக்கிறது ) .

நாம் சிரத்தையாய் அவருக்காய் சமைத்ததை எல்லாம் அவரருகில் அக்கறையுடன் வைத்து, அவற்றில் சற்றை தனியாய் அவருக்கான தட்டிலும் , கிண்ணிகளிலும் அழகாய் வைத்து, அவர் கை, கால் அலம்பிக் கொள்ள, உணவு அருந்தும் போது இடையில் நீர் அருந்த, உணவு அருந்தியதும் வாய் கொப்புளித்துக் கொள்ள, கை அலம்பிக் கொள்ள என்று நான்கு டம்ப்ளர்களில் அவருக்கு நீரையும் வைத்து என்னுடைய சேவகம் தொடங்கும்..

மேலும் ஒரு சின்ன டப்பாவில் (குட்டியூண்டு டப்பி என்பதே சரி .. 🙂 ) .. துளசி இலைகள் சிறிது, கொஞ்சம் குங்குமப்பூ, கொஞ்சம் ஏலக்காய் , கொஞ்சம் காய்ந்த திராட்ச்சை , கொஞ்சம் கிராம்பு .. இவற்றை போட்டு வைத்து அதையும் அவருக்கு சமர்ப்பிப்பேன் … இந்த சின்னக் குப்பியை நான் லவ் ஜார் ..காதல் குடுவை என்று செல்லமாய் சொல்லுவது .. இதில் என்னுடைய காதல், பக்தி எல்லாம் அடங்கி இருக்கிறது .. என் பக்தியும் இந்தக் குடுவையில் இருக்கும் பொருட்கள் போல ரொம்பக் கம்மி .. மற்றும் காய்ந்து உலர்ந்து போன சரக்கு தான் .. ஆனால் சிரத்தை ரொம்ப உண்மை .. கண்ணனுக்கு பண்ணவேண்டும் என்கிற ஈடுபாடு மற்றும் வைராக்கியம் நிரம்ப உண்மை என்பதால் அப்பெயர் .. 🙂

சமைத்த உணவுகள் எல்லாவற்றிலும் துளியேனும் துளசி இருக்குமாறு செய்ய வேண்டும் .. துளசி இல்லாமல் தந்தால் கண்ணன் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது ஐதீகம் .. இங்கு ஆஸ்திரேலியாவில் துளசிக்கு டிமேண்ட் அதிகம் என்பதால் , நான் இப்படி சின்னக் குப்பியில் நிழலில் உலர்ந்த துளசியை போட்டு வைத்துக் கொள்வது .. 😦

இது சரியான முறை இல்லை என்றாலும் , “பத்ரம் புஷ்பம் பலம் டயம் யோமே பக்த்தா ப்ரயச்சதி .. தத் அஹம் பக்தி உபஹ்ருதம் அச்ணமி பிரயதாத்மனஹா “என்று அவர் சொல்லுவதால் .. என்னுடைய எளிய உபசரணயையும் அவர் ஏற்றுக் கொள்வார் என்றே நம்புகிறேன் .

நான் “ஹரே கிருஷ்ணா” மகா மந்திரத்தை நான்கு தரம் சொல்லி , பிறகு க்ரிஷ்ணாஷ்டகத்தை பாடுவேன் ..பிறகு பச்சை மாமலை போல் மேனி ..சொல்லுவேன் .. பிறகு “பத்ரம் ..புஷ்பம் ..பலம் டயம் “எனும் பகவான் சொன்ன கீதையின் ஸ்லோகத்தை சொல்லி , நானும் அன்னையர் யசோதை , தேவகி மற்றும் கவுசலையின் அன்புடனும் அன்னை துளசி யின் பக்தியுடனும் இந்த பலகாரங்களை கண்ணனுக்குத் தருவதாய் கண்ணன் தயவு செய்து நினைத்துக் கொண்டு அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வேன். மேலும் அவருக்கான பலகாரங்கள் தயாரிக்கும் போதும், அதை அவருக்கு பறிமாரும்போதும் செய்யும், செய்த பிழைகள் எல்லாவற்றிற்கும் என்னை பொறுத்து மன்னித்துக் கொள்ள வேண்டும் என்றும் சிரத்தையோடு வேண்டிக் கொள்வேன் ..பிறகு மதுராஷ்டகம், ஸ்ரீமன் நாராயண
ன் கீதங்கள் என்று சூழலுக்குத் தக்கபடி சில கீதங்கள் … பிறகு சில நிமிடங்கள் அவர் உணவருந்தியபின், அவரது பிரசாதத்தை நாங்கள் எல்லோரும் எடுத்துக் கொள்வோம் ..

அவருக்காய் அவ்வப்பொழுது செய்த சில பிரசாதங்களின் புகைப் படங்கள் கீழே தந்துள்ளேன் ..

This slideshow requires JavaScript.

Read Full Post »

Dear All,
Hare Krsna ,

Here are some of the prasadam pictures taken on Andal Ranganathar Kalyanam day on Panguni utram , 2011.
Laddu , Thattai or chakkalu (by Sowhanya Ram) , Coconut burfi (Sandya Mahalingam), Akkara vasdisal (dark brown looking sarkkarai pongal ) (Radha Suresh), Diamond cake (Seetha Vijayaragavan) were all devotedly made by friends who attended the function on that day. So a big heart felt and humble thanks to them.

This slideshow requires JavaScript.

My loving mom and I made :

Thirattip paal or paalgova
Baadhusha
paal sarkkarai pongal
wedding cake
muffins
hearty fruit cake
nuts and bits cake loaf
fruit salad

vadai paruppu
kari veppilai saadam or curry leaves rice
Lemon rice
puliyodarai
thayir sadam
Plain rice
Tomato paruppu rasam
Keerakkaai kaara pachchadi
Appalam

Rice, papad,Rasam and pachchadi are not photo graphed ..so missing in the slide show.

Mullu murukku ( ubayam , my mother )
Raja murukku (king sized kaara murukku , ubayam my mother )
Thenguzhal,
appachchilu ( special murukku maavu snack preparation for babies )

I should not say that I have made theprasadams as My mother only made most of the murukku vagaigal .. I only made the dough for some preparation ..

But sweets are totally prepared by me from the scratch 🙂

She also made Curry leaves rice and had been a great help in taking care of little Dhruv while I was getting things ready.

will share the recipes with you all later ..

Hope you all enjoy this. I will write in more detail about how we celebrated the divine wedding later in this blog. So keep visiting this section of the blog for an update.

Read Full Post »

மேனி பொன்னிறமாக … காஞ்சிபுரம் கோவில் இட்லி .. !!

ஹரே கிருஷ்ணா,

இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழு வதும் கிராக்கி அதிகம் உள்ள ஒரு விஷயம் என்னை அதிகம் வியப்பில் ஆழ்த்து கிறது. அதனுடைய விற்பனையும் கொடி கட்டிப் பறக்கிறது. பலரும் தாங்கள் இது வரை பார்த்துக் கொண்டிருக்கும் வெற்றி கரமான வேலையையே விட்டு விட்டும், இதன் உற்பத்தி மற்றும் விளம்பரப் பிரிவில் இணைந்து பெரும் பொருள் சம்பாதிக்கும் அனுபவங்களை கேட்கும் போதெல்லாம் இது போன்ற பொருட்களை எண்ணி மோசம் போகும் அப்பாவி மக்களின் நிலையை எண்ணி எனக்கு வேதனையாகவே இருக்கிறது ..

ஆரோக்கியம் மற்றும் அழகு தொடர்பான மூலிகை மருந்து தயாரிக்கும் கம்பனிகளே இப்படி லாபத்தில் சக்கை போடு போடுகின்றன. ஒவ்வொரு மூலிகை மருந்து மற்றும் இயற்கை மருந்துகள் தயாரிக்கும் கம்பனிகளின் வருடாந்திர லாபக் குறிப்புகளை பார்த்தால் எனக்கு ஆச்சரியத்தில் வாய் பிளக்கிறது .. சரி சரி நான் அப்படி எந்த கம்பனிகளின் வருடாந்திர லாப நஷ்ட கணக்குக் குறிப்புகளை எல்லாம் பார்த்தது இல்லை எனும் உண்மை ஒரு புறம் இருக்கட்டும் .. ஆனால் இவற்றை பற்றி நான் இங்கு குறிப்பிடுவது மட்டும் நிச்சயம் உண்மை ..!

மேனி சிவப்பழகு பெற இந்தக் கிரீமை உபயோகியுங்கள் .. ஆறே வாரத்தில் இவ்வளவு சிகப்பாகி விடலாம் .. !

இதற்கான விளம்பரங்களை பார்த்தால் , ஏற்கனவே நன்கு சிவப்பான ஒரு பெண்ணை அல்லது பிரபல நடிகையை முதலில் கருப்பான மேக் கப்பில் காட்டுவார்கள் .. வாரம் ஒண்ணு … வாரம் ரெண்டு என்று அவர் படிப் படியாக கண்ணை பறிக்கும் சிவப்பாக அல்லது பொன்னிறமாக மாறி விடுவார் ..

அடுத்து .. அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டு குண்டான ஒருவர் கடுகு சைஸை விட கொஞ்சம் பெரிதான ஏதோ ஒரு மூலிகை மருந்தை சாப்பிட்டதும் ரொம்ப ஒல்லியாய் ஆகிவிடுவார் ..

அடுத்தது சில நாட்டு வைத்தியர்கள் கேன்சர் முதல் மருந்தே கண்டு பிடிக்கப் படாத எயிட்ஸ் வரை எல்லாவற்றையும் தங்களுடைய பச்சிலை மூலிகை வைத்தியத்தால் குணப்படுத்தி விடுவதாய் மார் தட்டிக் கொள்வார்கள்.. !

இந்தக் காய கல்பத்தை சாப்பிட்டால் என்றுமே இளமையாய் வாழலாம் என்கிறார்கள் .. தங்க பஸ்பம் .. குங்குமபூ லேகியம் .. சகல நோக நிவாரணி என்று இவர்கள் ஏதேதோ சொல்லி அடைத்து கொடுக்கும் குப்பிகளையும், குடுவைகளையும் ஆயிரக் கணக்கில் செலவழித்து வாங்கித் தின்ன மக்கள் மந்தை மந்தையாய் போகிறார்கள்..!

ஆடும் மாடும் கூட தனக்குத் தெரியாத , தான் அதிகம் பழகாத எந்த உணவையும் தன் வாய்க்குள் நிரப்பிக் கொள்ளு வதில்லை .. நாமோ நாய் பட்ட பாடாய் , எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதாகி, எல்லா அரை குறை வைத்தியர்கள் பின்னால் ஓடிக் கொண்டே நம் காலத்தை கழித்து விடுகிறோம் .. 😦

இது தொடர்பாக ஒரு சிறு கதையை உங்களுடன் பரி மாறிக் கொள்கிறேன் .. அதற்குப் பின் நீங்கள் பெருமாளுக்கு பரி மாற ஒரு அசத்தல் சமையல் குறிப்பினையும் தருகிறேன் .. 🙂

**************************

கோவிந்த தாசர் என்று ஒரு மனிதர் . அவர் வரத ராஜப் பெருமாளிடம் சென்று ஒரே அழுகை மற்றும் பெரிய முறையீடு !

” சுவாமி வரத ராஜப் பெருமாள் என்றாலே , வாய் விட்டு கூட இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க வேண்டாம்னு சொன்னாங்களே .. மனசுல ஆசை பட்டாலே போதுமாம். உங்க முன்னால வந்து கூட கேட்கணும்னு இல்லை .. நீரே ஓடோடி வந்து அதை நிறை வேத்தி வைத்து விடுவீர்னு சொன்னாங்களே .. .. அப்படி இப்படி சொன்னதெல்லாம் பொய்யா .. நானும் தினசரி உங்க கிட்ட வந்து வேண்டிகிட்டே இருக்கேனே .. நான் ஒன்னும் பெரிய மகானோ அதுவோ இதுவோ இல்லை .. ஆனாலும் இப்படி ஒரு மாசமா வந்து உங்க முன்னாடி இப்படி அழுது வடியறேனே .. அதுக்காகவாவது எனக்கு கொஞ்சமாவது அனுக்ரகம் பண்ணக் கூடாதா .. இனிமே உங்களை வரத ராஜப் பெருமாள்னு கூப்பிடறதுக்கு பதில் , என்ன கூப்பிட்டும் வராத ராஜப் பெருமாள்னு சொல்றேன் நான் ” என்று விடாமால் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டார் ..

கோவிந்த தாசர் இப்படி அழ தொடங்கியதும் பெருமாளின் நெஞ்சோடு இருக்கும் தாயாருக்கு மனசே தாங்கலியாம் .. என்ன அந்தக் குழந்தை இப்படித் தத்துக்கா பித்துக்கானு உங்களை பார்த்து ஏதேதோ சொல்லிட்டே போறது .. உங்களை அப்படி எல்லாம் பேருக்கு சொன்னால் கூட எனக்கு மனம் தாங்காது .. என் மனசு ரொம்ப கஷ்டப்படும் என்று சொல்ல, பொண்டாட்டி மனசு கஷ்டப் படுவதை பார்த்து பெருமாள் தாங்குவாரா ! சரி உனக்காகவாவது அந்த கோவிந்த தாசருக்கு எதாவது செய்யறேன்னு சொல்லி , அந்தக் கோவிந்த தாசரை பார்த்து அசீரீரியாய் பேசத் தொடங்கினாராம் ..

“குழந்தாய் ..போதும் நீ ரொம்ப இப்படி அழுது படுத்தாதே .. எதுக்காக இப்படி அழறே “என்று அனுசரணையோடு கேட்டாராம் பெருமாள். ..

“நிஜமாகவே நீங்க தான் பேசறதா சுவாமி .. என்னால் நம்பவே முடியலியே .. ” என்று இவர் கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்க , பெருமாள் அர்ச்சா மூர்த்தியாய் சாந்தமாய் எப்பொழுதும் போலவே இருக்க இவருக்கு ஒன்றுமே புரியாமல் , இதெல்லாம் ஒரு வேளை பிரமையோ என்று தோன்ற மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாராம் ..

“ஏதோ உங்க அம்மா பெருந்தேவித் தாயார் உனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணியதால் , நான் பேசறேன் .. அதுக்காக உனக்கு காட்சி எல்லாம் கொடுக்க முடியாது .. நேரத்தை வீணாக்காமல் என்ன வேண்டும்னு கேளுப்பா “என்று சொன்னாராம் .

அதுக்கு நம்ம கோவிந்த தாசர் பெருமாளை நோக்கி ” அப்பா .. எனக்கு வயசாகிட்டே போகுது .. ஒன்றும் பண்ண முடிய வில்லை .. வாய்க்கு ருசியாய் பொண்டாட்டி உருளைக் கிழங்கு வறுவல், சேப்பங்கிழங்கு கறி , வாழக்காய் பஜ்ஜி என்று செய்து போட்டால், அதை சாப்பிட்டால் பக்க வாதம் வந்து ஒரேயடியாய் படுத்தாலும் படுப்பேன் என்று ஏற்கனவே மூட்டு வலியால் கஷ்டப்படும் என் அம்மா சொல்கிறாள் .. சரி அவள் சமைத்த கத்திரிக்காய் பொடி தூவலாவது சாப்பிடலாம்னு பார்த்தால் , சருமம் கெட்டுப் போய் சொறி நோயால் என்னை போல் நீயும் கஷ்டப்படுவேன்னு எங்க அப்பா சொல்றார் ..

சரி கொத்தவரைக்காய் பருப்புசிலி , வெண் பூசணிக்காய் அவியல், புடலாங்காய் கூட்டு , சுரக்காய் பொரியல்னு வேறு மாதிரி வாய்க்கு ருசியாய் அவள் சமைக்க அதாவது சாப்பிடலாம்னா, அதைத் திண்ணு சீதளம் அதிகமாகி எங்களை மாதிரி மார் சளியால் கஷ்டப்படணுமான்னு என்னோட தாத்தா பாட்டியும் புலம்ப ஆரம்பிச்சிடறாங்க ..

வெளியில போனா நண்பர்களும் இப்பவே உனக்கு தலை மயிர் இவ்வளவு நரைச்சு போயிடுச்சே .. இவாளவு கருத்து போயிட்டியே..தொப்பை போட்டுட்டியே .. உடம்புல இவ்வளவு வெயிட் போட்டுட்டியே …. எண்ணை பலகாரம் மற்றும் இனிப்பெல்லாம் அதிகம் சேர்த்துக்காத.. இருதயத்துக்கு நல்லது இல்லைன்னு அது இதுன்னு ஏகமா என்னை ஒரேயடியாய் சதாய்த்து எடுக்கறாங்க .. நான் என்ன தான் சாப்பிடுவேன் .. நீங்களே சொல்லுங்க .. வேளைக்கு சாப்பிடலைனா எப்படி உயிர் வாழ்வேன் .. சாப்பிட்டாலும் பிரச்சனையை சாப்பிடமாமல் போனாலும் பிரச்சனை .. என்ன செய்வேன் .. நீர் தான் எனக்கு ஏதாவது உதவி பண்ணனும் ..என்று கேட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டாராம் .. ”

தாயாருக்கு இவர் பெருமாளிடம் இப்படி கேட்க , கொஞ்சம் மனசு வருத்தப் பட்டதாம் ..

எனவே தாயார் அவரை பார்த்து .. “குழந்தே .. கோவிந்த தாசன்னு பெயர் வச்சிக்கிட்டு , அவருக்கு நீ எந்த சேவகமும் பண்ணாமல், அவர் உனக்கு ஏதாவது பண்ணனும்னு சொல்றியே .. அதுவும் இது போன்ற அல்ப விஷயங்களுக்கெல்லாம் அவரை தொந்தரவு பண்றியே , இது உனக்கே நியாயமாய் படுகிறதா ” என்று கேட்டாராம்.

இவர் .. “இந்த பெயரை எங்க அம்மா அப்பா இல்லை எனக்கு வச்சாங்க .. பெருமாளுக்கு நான் என்ன பண்ணுவேன் .. அவர் தானே இந்த லோகத்தையே பண்ணினார் .. என்னால் என்ன முடியும்.. இதுவரை எங்க குடும்பத்தாரும் சரி ..என்னுடைய நண்பர்களும் சரி கோரிக்கை வச்சு கிட்டு , அது நிறை வேருச்சுன்னா பெருமாளுக்குக் உண்டியலில் காணிக்கை போடறது தான் வழக்கமாய் வச்சி கிட்டு இருக்காங்க .. என்னை மாத்திரம் இப்படி எல்லாம் கேள்வி கேட்கரீங்களேன்னு .. ” இவர் மீண்டும் அழத் தொடங்க , பெருமாள் அதற்கு மேல் இவர் அழுகையை சகிக்க மாட்டாமல், “உனக்கு என்ன வேணும்னு கேளுப்பா .. அந்த வரத்தை தரேன் .. ஆனால் இந்த ஒரு தரம் தான் தருவேன் .. அப்பறம் நீ கூப்பிட்டு இப்படி அழுதால் எல்லாம் சும்மா சும்மா வந்து பேசிட்டு இருக்க மாட்டேன் .. ” என்று சொன்னாராம் ..

அவரும் , இந்த ஒரு வரமே போதும் வேறு ஏதும் கேட்கமாட்டேன் என்று சொல்லி, என்ன சாப்பிட்டாலும் தனக்கு ஒன்றும் ஆகக் கூடாது மேலும் தான் என்றும் இளமையாய் இருக்க வேண்டும்னு கேட்டுக் கிட்டாராம்.. பெருமாளும் சரின்னு சொல்லிட்டு அப்படியே வரம் கொடுத்தாராம் …

******************************************
நம்ம கோவிந்த தாசர் இப்ப வகை வகையாய் வக்கணையாய் சாப்பிடராராம் .. ரொம்ப இளமையாய் வேற தோற்றம் .. அவர் பொண்டாட்டி கூட வயதுக்கு ஏற்றது போல நரைத்த முடி, சுருக்கம் நிறைந்த முகம்னு பாந்தமாய், மங்கள கரமாய் , மரியாதைக்கு உரிய தோற்றத்தோடு இருக்க, இவர் வெளியில் போனால் , எல்லோரும் , இந்த வயசில் கூட எப்படி இந்த ஆளு சோக்காய் தலைக்கு டையெல்லாம் போட்டு கிட்டு திரியறான் பாரேன் .. ஒரு வயசுக்கு மேலாச்சும் திங்கறதுல நாட்டம் போயி பகவானோட பாதத்துல சரணாகதி எடுத்துக்க வேணாம் ! .. இந்த ஆளு சோக்காய் இப்படி பேரன் பேத்திகளுக்கு கல்யாணத்தை முடிச்சும் , சின்ன பைய்யன் மாதிரி வேஷம் போட்டுட்டு இள வட்டம் மாதிரி ஆட்டம் போடறதை பாரேன் .. கொஞ்சம் கூட சகிக்கலைன்னு இவர் காது படவே எந்நேரமும் பேசிக் கொள்கிறார்களாம் ..

***********************

எதையும் அளவோடு பகவானின் பிரசாதமாய் எடுத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை .. அதோடு நாற்பது வயதில் கொஞ்சம் தலை நரைக்கத் தொடங்கினால் அதை கண்டு ஏன் வருந்தணும் .. இந்தியாவின் சீதோஷ்ண நிலையில் இருப்பவர்கள் கொஞ்சம் மாநிறமாய் தான் இருப்பார்கள் ..அதில் வெட்கப் படுவதற்கு என்ன இருக்கிறது .. கருப்பு நிறக் கண்ணனை போல் தங்களுக்கும் அழகாய் அவரது நிறத்தின் சாயல் கொஞ்சம் வந்திருப்பதை எண்ணி சந்தோஷப் பட வேண்டும் இல்லையா ! அதைப் போய் மாற்ற முயற்சிப்பானேன் !!! !!!!

ஆரோக்கியமாய் இருப்பவர்கள் கொஞ்சம் பூசின மாதிரி இருப்பார்களே ஒழிய, வத்தலும் தொத்தலுமாய் இருக்க மாட்டார்கள் .. பகவானுடைய கைங்கர்யம் என்று ஓடி ஆடி வேலை செய்தால் எப்பவும் ஆரோக்கியமாய் இருக்கலாம் .. மல்டி நேஷனல் ஜிம் எல்லாம் சென்று உறுப்பினராய் சேர்ந்து ஆயிரக் கணக்கில் செலவழிப்பதை விட, ஊர்க் கோவில்களுக்கு சென்று வாரம் ஒரு தரமேனும் அவற்றை கூட்டிப் பெருக்கலாம்.. கோவில் துப்புரவு வேலைகளில் ஈடுபடாலாம்.. பெருமாளுக்கு மாலை கட்டிக் கொடுக்கலாம் .. கோவில் பணிகளில் உற்சாகமாய் ஈடுபடலாம் .. நான்கைந்து கிலோ மீட்டருக்குள் கோவில் இருக்கும் பட்சம், நடந்தே சென்று பெருமாளை சேவிக்கலாம் ..

வரம்னு தான் அப்ப நினைத்தது , இப்ப தனக்கு எத்தனை பெரிய தலை வலியாய் போய்டுச்சே என்று கோவிந்த தாசரும் ரொம்ப வருத்தப் பட்டுக் கொண்டு தொண்ணூறு வயதில் , மருந்து கடைகளுக்குச் சென்று வெள்ளை தலைச் சாயம் கிடைக்குமா என்று விநோதமாய் விசாரிக்க, எல்லோரும் அவரை ஒரு மாதிரி நோட்டம் விடுகிறார்களாம் 🙂

**********************

நாம எதுக்கு சுவாமியிடம் போய் கோரிக்கை , வேண்டுதல் இப்படி அப்படி என்று ஏகத்துக்கு demand செய்ய வேண்டும் .. நமக்கு நல்லது எதுன்னு அவருக்குத் தெரியும் ..அவர் அதை நமக்கு நிச்சயம் பண்ணுவார்னு அவர் மேல முழு நம்பிக்கை வைக்கணும் .. அதோட அவரை எப்படி முழுமையாய் இப்படிச் சரணடயணும்னு நம்மை சூழ்ந்துள்ள பக்தர்களை கவனித்து நாமும் கத்துக்கணும் .. நம் தமிழ் நாட்டில் தோன்றிய ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு விதமாய் சரணாகதி அடைய நமக்குக் கத்துத் தருகிறார்கள் ..

இந்த தொடரில் அவர்களை பற்றி என்னால் முடிந்ததை எழுதணும்னு , பெருந்தேவி தாயாரிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் ..

முக்கியம் 1 : கோவிந்த தாசர் ஒரு கற்பனைப் பாத்திரம் …

ரொம்ப முக்கியம் 2 :

காஞ்சிபுரம் வரத ராஜர் கோவில் இட்லி :- (நான் செய்யும் ரகம் ) தேவயான பொருட்கள் :

பச்சரிசி : மூன்று கப்
முழு தோல் நீக்கிய உளுந்தம் பருப்பு – இரண்டு கப்
நெய் – அரை கப் முதல் ஒரு கப் வரை
கறி வேப்பிலை – ஒரு பெரிய கைப்பிடி
முந்திரி பொடித்தது – ஒரு கப்
சுக்கு போடி – ஒரு ஸ்பூன்
பொடியாய் நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
நல்ல மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கட்டிப் பெருங்காயம் -பொடித்தது ஒரு மூன்று ஸ்பூன்
தயிர் – இரண்டு கப் அல்லது மூன்று கப்
உப்பு – 2 ஸ்பூன்

பச்சரிசி மற்றும் பருப்பை நன்றாய் ஊற (குறைந்தது ஒரு நான்கைந்து மணி நேரம் ) வைத்துக் கொள்ளவும். பிறகு அதை நற நற என்று ரவைப் பதத்தில் ஒன்றாகவே சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவு கெட்டியாய் இருக்க வேண்டும். நிறைய நீர் சேர்க்கக் கூடாது .. பிறகு இந்த மாவில் தயிர், நெய், மேற் குறிப்பிட்டுள்ள பொருட்கள் எல்லாம் சேர்த்துக் கொள்ளவும்.

இட்லி கிண்ணங்களில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும் ..

இதை மிளகாய் பொடி மற்றும் கார சட்னி யுடன் , காதலோடு பெருமாளுக்குப் பரிமாறவும்.

பிறகு அதை சாப்பிட்டு அந்த அனுபவத்தை என்னோடும் பகிர்ந்து கொள்ளுங்களேன் ..

****************************

கொசுறாய் ஒரு சும்மாக் கவிதை

உம் எச்சிலே நான் வேண்டும் அரு மருந்து
உம் மிச்சமே என்னிளமை காக்கும் காய கற்பம்
நிதம் மாறும் என்பு தோல் போர்த்திய
விலை யற்ற இவ்வுடலை நீங்கி நான்
நிகரற்ற நின் தாமரை பாதம் பற்ற நீர்
எமக்குத் தந்த அமிர்தமே உம் திவ்ய பிரசாதம் ..
இதை மட்டுமே சுவைத்து உமக்கே கதியாய்
சிறு அணில் போலச் சிறு துரும்பேனும் உமக்காய்
அசைத்திந்த இழி பிறப்பை நான் கழிக்க
நீர் எமக்குத் தந்ததே புவனியில் பெரும் வரம் ..
ஸ்யாமளக் கண்ணனே அவனியில் ராஜனே !
வேண்டாமல் வரமளிக்கும் வரத ராஜப் பெருமானே !
பெருந்தேவி தாயாரோடு எம் கலி தீர்க்க
எமக்காய் காஞ்சி மாநகரத்தில் அருள்தரவே உறைந்திருக்கும்
நின் செங்கமலப் பாதமே போற்றி! போற்றி! போற்றி !

****************************

Read Full Post »

இப்பிறப்பில் மட்டுமே
இவர் எந்தாய்
இவர்களுக்கு நான் தாய் ..
என்றாலும் விட்டேனோ
பாசமும் பற்றுதலும்
இவர் பால் மிக மிக
மிகுதியாய் போகிறதே
ஸ்யாமளக் கண்ணனே !
நான் விட்டும் நீர் விடாமல்
வெறும் நிழல் போல் மறையாமல்
நிஜமாகி எல்லா பிறப்பிலும்
என் தாயுமாய் தந்தையுமாய்
மற்றெல்லாமும் நீராகிப்
போன பின்னே
என்ன குறை எந்தனுக்கு
எம்பெருமானே நாராயணனே !

இந்தச் சும்மாக் கவிதைக்கு பெரியதாய் விளக்கம் ஏதும் தேவை இருக்காது என்று நினைக்கிறேன் 🙂 குழந்தைகளுக்கும் , நம்மை வளர்த்து ஆளாக்குகிற பெற்றோர்களுக்கும் மற்றும் நமக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஏதேனும் என்றால் நமது மனம் பதை பதைத்து போகிறது இல்லையா ! இத்தனைக்கும் இவர்களுக்கும் நமக்குமான தொடர்பு இந்த ஒரு பிறப்பில் மட்டுமே ! அடுத்த பிறப்பில் நம் சுற்றமே நம் பகை என்று ஆகும் சூழ்நிலையும் இருக்கலாம் .. ஆனாலும் இவர்கள் மேல் நமக்கு எத்தனை பற்றுதல் … பரிவு …!!!!!

ஆனால் எப்பிறப்பிலும் பகவானே நம் எல்லோருக்கும் தாய் தந்தை ..அப்படி இருந்தால் அவருக்கு நம் மீது எத்தனை பரிவு இருக்கும் .. அதுதான் என்னை போன்ற ரொம்ப சாதரணமான ரொம்பவும் சம்சார சாகரத்திலேயே மூழ்கிக் கிடக்கும் நபர்களுக்கும் அவரது கருணை கிடைக்கிறது .. நாம் எவ்வளவு தான் அவரை விட்டு விட்டு வந்தாலும் அவர் நம்மை விடாது பார்த்துக் கொண்டே இருக்கிறார் ..

வெண் பொங்கல் குறிப்பு

பச்சரிசி ஒரு கப்
பாசிப் பருப்பு அரை கப்
முந்திரி – கால் கப்
இஞ்சி பொடியாய் நறுக்கியது – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு – இரண்டு ஸ்பூன்
சீரகம் – மூன்று ஸ்பூன்
பெருங்காயம் – அரை ஸ்பூன்
கறி வேப்பிலை – ஒரு கைப்பிடி
நெய் – தாளிக்கத் தேவையான அளவு
மஞ்சள் போடி – ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு

குக்கரில் அரிசி , பருப்பு , மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து நான்கு கப் தண்ணீரை சேர்த்துக் கொண்டு நன்றாக மூன்று விசில் வரும் வரை குழைய வேக விடவும் . அதே நேரத்தில் ஒரு வாணலியில் நெய்யில் மிளகு , சீரகம், முந்திரி, இஞ்சி , பெருங்காயம் , க. வேப்பிலை இவற்றை தாளித்துக் கொள்ளவும்.

வெந்த சாதத்தில் இவற்றை போட்டுக் கிளறவும். வேண்டுமானால் நெய் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். காய்ச்சிய பாலையும் சற்று சேர்த்துக் கொள்ளாலாம்.

இதை பாசிப் பருப்பு கூட்டு மற்றும் தேங்காய் சட்னியுடன் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்து அவர் பிரசாதத்தை சாப்பிட்டு பின் அந்த அனுபவத்தை என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன் .. !!!

Read Full Post »

Older Posts »

%d bloggers like this: