Feeds:
Posts
Comments

Archive for the ‘கலைடாஸ்கோப்’ Category

தன் இனத்தை தானே அழிப்பவற்கு மனிதர் என்று பெயர்.

குண்டு வெடிப்புகளும், மதக் கலவரங்களும் இந்தியத் திரு நாட்டில் அன்றாட நடப்புகளாகவே மாறி விட்டது. மும்பை குண்டு வெடிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்ததற்கும், , பாகிஸ்தான் மீது அவர்கள் தங்களின் கண்டனத்தை செலுத்தியதிற்கும் , முக்கியமான காரணம் பல வெளிநாட்டு பயணிகள் இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டு உயிர் இழந்தது தான். மற்றபடி இதை காட்டிலும் பயங்கரமான பல வன்முறை சம்பவங்கள் நமக்கு தெரிந்தும், தெரிவிக்கப் படாமலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

காசாவில் (Gaza) வில் தொடர் யுத்தம் நடக்கிறது. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் போர் தொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இருக்கும் பாசப் பிணைப்பை பற்றி புதிதாக நான் ஏதேனும் எழுதினால் அது எய்ட்சிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு சமம்.

அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் என்றுமே ஆகாது. அமெரிக்காவிற்கும் அமெரிகர்களுக்குமே ஆகாது அப்பறம் என்ன ரஷியா என்கிறீர்களா! அதுவும் சரிதான். ஹிட்லர் அன்று செய்த காரியத்தினால் ஜெர்மனின் தலை இன்னமும் நிமிரவில்லை.

ஆனால் எனக்கு வழக்கம் போலவே உப்பு பெறாத ஒரு சிந்தனை. வழக்கம் போலவே அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்து விட்டேன். இராணுவம் என்கிற ஒரு அமைப்பு நமக்கு தேவையா ? என்கிற அதி முக்கியமான சிந்தனை தான் அது.

ஆதி காலத்தில் மனிதன் , சிங்கம் , புலி போன்ற கொடிய விலங்குகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு ஆயதங்களை வடிவமைத்துக் கொண்டான். கற்கால ஆயுதங்களை பார்த்தாலே இது தெரியும் . அவை யாரிடம் இருந்து யாரை பாது காத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப் பட்டன என்று !

ஆனால் இப்பொழுது இருக்கும் அணு ஆயுதங்களை பாருங்கள். அவற்றில் இருபது சதவிகிதத்தை(ஒருவேளை இரண்டு ?) உபயோகித்தால் கூட போதுமாம். முழு உலகமும் அழிந்து , புல் பூண்டு கூட இனி எப்போதும் உயிர்பிக்காத அபாயம் இருக்கிறது ( சரி சரி கரப்பான் பூச்சிகள் தவிர்த்து ) என்று எல்லா விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள். இருந்தாலும் “டுபாகூர்” அணு ஆயுத உடன்படிக்கைகளில் எல்லா நாடுகளும் கையெழுத்திட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் அதையும் தாண்டி அணு ஆயுதங்களையும் , ஏவுகணைகளையும் , ஒருவருக்கு தெரியாமல் அடுத்தவர் தயாரித்துக் கொண்டு இருப்பது ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோருக்கும் தெரிந்து தானிருக்கிறது.

இத்தனை ஆயுதங்களும் யாரிடம் இருந்து யாரை பாதுகாக்க.? மனிதனிடம் இருந்து மனிதனை பாதுகாக்க!! ஹாஹா.. 🙂 இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது. வயிற்றெரிச்சலாக தானே இருக்கிறது என்பவர்களுக்கு. கீழே இருப்பதை படியுங்கள். வயிறு இன்னமும் எரியும்.

Stockholm இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் புள்ளிவிவரங்கள்

The 15 countries with the largest defense budgets (2007)Rank Country Spending ($ b.) World Share (%)
— World Total 1339.0 100

1 United States 547.0 45
2 United Kingdom 59.7 5
3 China 58.3 5
4 France 53.6 4
5 Japan 43.6 4
6 Germany 36.9 3
7 Russia 35.4 3
8 Saudi Arabia 33.8 3
9 Italy 33.1 3
10 India 24.2 2
11 South Korea 22.6 2
12 Brazil 15.3 1
13 Canada 15.2 1
14 Australia 15.1 1
15 Spain 14.6 1

இந்த லிஸ்டில் பல துக்கடா நாடுகள் விடு பட்டு உள்ளது. எல்லோருமாய் சேர்ந்து 1400 பில்லியனுக்கும் மேல் டிபென்சிற்காக செலவு செய்கிறார்கள். ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து யாரும் நம மீது போர் தொடுக்க வரவில்லை. நமது பக்கத்து வீட்டு, சாரி நாட்டு மக்கள் தொடுக்கும் போர் பற்றியது தான் இந்த பயம் . இத்தனைக்கும் உலகில் பெரும்பாலான நாடுகள் ஜன நாயகம் பெற்றாகி விட்டது . முக்கால்வாசி நாடுகள் குடியரசு நாடுகள் வேறு. ஜன நாயகத்திற்கும் , குடியரசிற்கும் என்ன வித்தியாசம் என்பதை வேறு ஒரு பதிப்பில் ஆராய்கிறேன்.

எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா என்று தான் வர வர பாட வேண்டும் போல இருக்கிறது. இந்த சனியன் பிடித்த பில்லியன் , கோடியையும் விட பெரியது என்பது நிச்சயம் எனக்கு ஆறுதலாக இல்லை. பூஜ்ஜியத்தை கண்டு பிடித்த இந்தியன் என்று என்னால் பெருமை பட்டுக் கொள்ள முடியவில்லை. ( இது சும்மாக்க சொன்னது 😉 ) சூன்யத்தை கண்டு பிடித்து சூன்யமாவதற்கு தான் வழி வகுத்திருக்கிறோம்.

இதில் பூமியை தவிர வேறு ஏதேனும் கிரகங்கள் இருக்கின்றனவா.. அங்கும் மனிதரை போல ஏதேனும் உயிரினங்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் கிலி எடுக்கும் ஆராய்ச்சிகள் வேறு. இருக்கிற ஒரு லோகத்தை உருப்படியாக வைத்துக் கொள்வதில் துப்பு இல்லை. இன்னொரு லோகத்தையும் நாச மாக்க நாசா’ காரர்கள் புறப்பட்டு விட்டார்கள். இவர்கள் தலையில் எல்லாம் இடி விழ.

என் பயம் எல்லாம் , இவர்கள் ஆராய்ச்சியின் விளைவாக , புதிய ஒரு கிரகம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டால், அதிலிருந்து வரும் ‘வேற்று’ கிரக வாசிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வரும் செலவுகளை யார் சமாளிப்பது எனபது தான் . அதனால் இந்த ஆராய்ச்சி எல்லாம் வெற்றி பெறக் கூடாது என்பது எனது பிரார்த்தனை. எல்லா காசும் நமது வரிப்பணம் தானே . ‘எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா’ என்று வரிப் பணம் கேட்கும் நம நாட்டு மன்னர்களை பார்த்து நாமே கேட்டால் ‘கெட்ட’ பொம்மனாக வல்லவா தெரிவோம்.

அவரவர், கொசுக்களிடம் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ள , கொசு வத்தி சுருள் வாங்கவும் , ட்ரில்லியன் முறை யோசித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் இத்தனை பில்லியன் பணத்தை மனிதனிடம் இருந்து மனிதனை பாதுகாக்க வென்று ஒதுக்குகிறார்கள். இதில் இன்னொரு வயிற்றெரிச்சல், இந்த உலக நாடுகளின் பாதுகாப்புத் துறை பட்ஜெட், கடந்த ஆண்டை விட 10 சதவிகிதத்திற்கும் கூடுதல் என்பது தான்.

இப்படி நாளுக்கு நாள் டிபென்ஸ் பட்ஜெட்டை உயர்த்திக் கொண்டே போனால், பாதுகாப்பதற்கு மக்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஏற்கனவே பஞ்சம், வேலை இல்லாத் திண்டாட்டம் என்று காரணம் சொல்லி எலிக்கறியினை கூட சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். நாளை ஒருவரை ஒருவர் வெட்டி தின்னத் தொடங்கினாலும் ஆச்சரியம் இல்லை.

இப்பொழுது விலங்குகளுக்கு வருவோம். ஆபத்து சமயங்களில் மிருகங்கள் ஒன்றிற்கு மற்றொன்று உதவியாகவே இருக்கின்றன.ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை தாக்கியதாக நான் கேள்விப் பட்டது இல்லை. ஒரு சிறுத்தை இன்னொரு சிறுத்தையை கொன்று தன் வெறியை தீர்த்துக் கொண்டதாகவும் நான் கேள்விப் பட்டது இல்லை. ஆனால் அவற்றிக்கு எல்லாம் மிருகம் என்று பெயர்.

சிறுத்தை கூட கூட்டமாக செல்லும் காட்டு விலங்குகளை தாக்கப் பயப்ப்படுமாம். ஆனால் பல வன்முறை நிகழ்ச்சிகள் , சக மனிதர்களின் கண் முன்னே நடக்கின்றன.இப்படி , தன் இனத்தை தானே அழிப்பவற்கு மனிதர் என்று பெயர். எனக்கு புல்லரிக்கிறது. உங்களுக்கு?

உங்கள் சிநேகிதி,
ஜானு

originally published on Jan 14, 2009 @ 15:29

Advertisements

Read Full Post »

%d bloggers like this: