******************************************************************************************
“To get into the heart of a man is through his stomach ” அப்படின்னு சொல்வாங்க.. இதை கல்யாணம் ஆகிப் போகும் பெண்களுக்கு மறக்காமல் சொல்லி அனுப்புவது எல்லா நாட்டு மக்களுக்கும் வழக்கமாய் இருக்கிறது .. அடுப்பூதுவது நம்முடைய பாரத நாட்டு பெண்களுக்கு மாத்திரம் இல்லை எல்லா நாட்டு பெண்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள வேலை போலிருக்கிறது என்கிற ரீதியில் கல்யாணத்திற்கு முன்பு எண்ணி ரத்தக் கொதிப்பிற்கு ஆளாவது வழக்கம். .
எனவே என் கல்யாணத்தின் போது பிரேமிடம் எனக்குச் சமைக்கத் தெரியாது என்று சொன்னபோது அவர் , “அதெல்லாம் கஷ்டமே இல்லை ..ரெண்டே வாரத்தில் உன்னை நான் எக்ஸ்பர்ட் ஆக்கி விடுவேன் .. ரொம்ப ஈசி ” என்று அமைதியாய் சொன்னார். அதோடு என்னை தேற்றுவதாய் எண்ணி அவர் தான் சமைக்கக் கத்துக் கொண்ட அனுபவங்களை எல்லாம் சொல்ல சொல்ல, நான் வெளிப்படையாகவே “இதோ பாருங்கள் .. பெண்கள்னா சும்மா சும்மா சமைக்கறது , துணி துவைப்பது , வீடு கூட்டுவது “இப்படியே எத்தனை நாள் இருக்கறது .. எனக்கு இதெல்லாம் கத்துக்கவும் நாட்டம் இல்லை, இதிலெல்லாம் சுத்தமாய் ஈடுபாடும் இல்லை” என்று சொன்னதை என்னை இப்பொழுது எனக்கே சில்லியாய், சின்னத்தனமாய் இருக்கிறது !
இதெல்லாம் நம் வீட்டு வேலை தானே ..அவர் செய்தால் என்ன நான் செய்தால் என்ன ? அதோடு நம் இல்லம் கண்ணன் நம்மோடு உரையும் ஒரு கோவிலே என்கிற உண்மை புரிந்திருக்கும் இந்த தருணத்தில்,
இது போன்ற வேலைகளை செய்வதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது .. நாம் சமைப்பதேல்லாம் கிருஷ்ணருக்கு என்று தோன்றிய கணத்தில் இருந்து சமைப்பது எத்தனை உற்சாகமாய் , இன்பமாய் இருக்கிறது தெரியுமா?
தி ஒன்லி மேன் என்னை பொறுத்தவரையில் கிருஷ்ணர் தான்
எனக்கு ஒழுங்காய் அவருக்கு மட்டுமே என்று வாழ்ந்து பக்தி பண்ணத் துப்பில்லை ..பெரிய மகான்களை போன்று அற்புதமாய் கீர்த்தனங்கள் எல்லாம் பாடவும் வராது .. சாஸ்த்திர ஞானம் சுத்தமாய் இல்லை .. பிறகு நானெல்லாம் எப்படி அவருக்கு சேவை செய்வது ..? ஆனால் எதாவது ஆசையாய் அவருக்குச் செய்ய வேண்டும் என்று மாத்திரம் இருக்கிறதே ?
ராமர் பாலம் கட்டிய போது , அந்த சிறு அணில் தானும் ஒரு சிறு கல்லையாவது சுமந்து அவருக்கு சேவை பண்ண வேண்டும் என்று தோனிற்றே .. !சகல அண்டங்களையும் படைத்த அவருக்கு ஒரு சிறு பாலம் கட்ட எதற்கு மற்றவரின் உதவி எல்லாம் ..? அதுவும் அணில்லான தன்னின் உதவி எல்லாம் என்றெல்லாம் அது எந்த சிந்தனையிலும் ஆழ்ந்து விடவில்லை .. தன்னால் முடிந்ததை அது செய்ததது இல்லையா? அதே போல அந்தச் சிறு அணிலின் சேவையில் அவர் உள்ளம் நெகிழ்ந்தார் தானே ! .. நாம் சமைத்துப் போட்டால் தான் அவருக்கு பசி ஆறுமா ? இருந்தாலும் அந்தக் உட்டி அழகு அணில் தந்த துணிச்சலாலும் தைரியத்தாலும் , பக்தி செய்ய கண்ணனின் பால் அன்பு மாத்திரம் தான் ரொம்ப முக்கியம் ..ரொம்பப் பெரிய ஞானம் இல்லை என்கிற தைரியத்தோடு சமையல் கட்டிலிருந்து அவருக்கு சிறு கைங்கர்யம் பண்ணத் தொடங்கி இருக்கிறேன் ….
பெரிதாய் ஏதும் செய்வதில்லை … கொஞ்சம் அவருக்காய் குறைந்தது அன்னாடம் ஒரு பச்சரிசி சாதம், சுட்ட அப்பளம் , ஒரு மிளகு ரசமாவது வைக்க முடியாதா ஏன்னா? அது கூட முடியாமல் போனால் அப்படி என்ன வாழ்க்கை ? அதோடு இதெல்லாம் என்னுடைய சந்தோஷங்களே அன்றி அவருக்கான சேவை கூட இல்லை என்பதே உண்மையாய் இருக்கிறது ? சேவை என்பது அவருக்கு ஏதேனும் தேவை இருந்து நான் செய்வதாய் இருக்க வேண்டும் இல்லையா? எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாவான, அவருக்கு என்ன தேவை இருக்கிறது ? நாமெல்லாம் ஒழுங்காய் எந்நாளும் நிம்மதியாயிருக்க வேண்டுமென்றே அவர் நமக்காய் லீலைகள் புரிந்து கொண்டிருக்கும்போது, உண்மையில் நானென்ன சேவை அவருக்கு செய்ய முடியும் ? இதெல்லாம் என்னுடைய ஆனந்த்திற்காய் அவருக்கு நான் செய்வது !
************************************************************************************
வானுயர்ந்த வாட்ட சாட்ட வானர மெல்லாம்
மேரு மலையையொத்த கல்லை எல்லாம் லகுவாய் தூக்கி
பூப்பந்தை போலே நொடியில் வீசிக் கட்டு கின்றன , பாலம் கட்டு கின்றன !
என் அன்பு அத்தான், அழகு அணிலே என்ன சொல்கிறாய்
(நீயும்) இந்தச் சின்னஞ் சிறு கூழாங்கல்லை பெரிய மூட்டையை போலே
முதுகில் வைக்கச் சொல்கிறாய் , என்னை வைக்கச் சொல்கிறாய் !
ஆசைக் கண்ணே , காதலியே அண்ணல் ராமரை பாரேன்
அன்பு அன்னை சீதை இன்றி அவர் வாடுகிறாரே !
பார் கடலை மெத்தையாக்கி சயனம் செய்வாரே – இந்தச்
சிறு இலங்கை சூழ் கடலை பொசுக்க நொடியுமாகுமோ ?
கடலில் பாதி தண்ணீரெல்லாம் அன்னையின் கண்ணீர்
அதில் பாதம் பட்டால் நோகுமேன்றே பாலம் கட்டு கிறார் !
வலிமையான வானரம் போல் அடியேன் என்றுமே இல்லை !
சிறு துரும்பை எடுத்து போடக்கூட கையில் வலுவுமே இல்லை !
ஒரு கல்லை நீயும் முதுகில் வைத்து உதவி செய்வாயே – கண்ணே
நாமும் கண்ணனுக்காய் ரொம்பச் சின்னதாயேனும் அலுவல் செய்யலாம் !
என்று சொல்லிப் பாலம்கட்ட உதவியாய் வந்த அந்த அணிலின் வீரம்
நானும் பெற்று துடங்கி விட்டேன் என் சிறு அடுப்பூதும் அலுவல் அதனை !
குழலூதும் கண்ணா, சமையல் கட்டே என்னை உன்னோடு இணைக்கும் பாலம்
அதில் சமைக்க எறியும் அடுப்பே இங்கு உனக்காய் நான் வளர்க்கும் யாகத்தீ !
உன் கனிவாயூரும் அறுசுவையான ஆடம்பர போஜனத்தை பலவிதமாய்
அன்னாடம் உனக்களிக்க வக்கில்லை என்றாலும் – என் கண்ணா
ஆசையோடு அன்போடு காதலோடு சிரத்தையோடு அக்கறை
எல்லாம் சேர்த்து பக்தியெனும் ஒரே ஒரு சுவை கொண்டேனும்
தருவேனே அன்னாடம் ரொம்பச் சின்னதாயேனும் உனக்கொரு போகம் !
திருமலையில் உறைந்திருக்கும் சியாமள வண்ணனே கோவிந்தா
என் பிழை யாவும் பொறுத்து என் சிறு போஜனத்தையும்
என்னாளும் நீயும் ஏற்க ஒரு வரம் தருவாயே – அது போதும்
அதுவே போதும் இங்கிருக்கின்ற நாளும் எல்லாம்
விருந்தா வனத்திலே உன்னுடன் நானும் இருப்பதாய் எண்ணி
இப்பிறப்பும் எப்பிறப்பும் எல்லாம் இன்பமாய் கழித்திடுவேனே நான் !
************************************************************************************
பதிவு நன்றாக இருக்கிறது ஜானு
பாவம் பிரேம் என்று ஆரம்பத்தில் நினைக்க தோன்றியது
)
சரி மிளகு ரசம் மிளகு கொழம்பு எப்படி ஜானு வைப்பது?
சமையல் குறிப்பு ப்ளீஸ்