இதெல்லாம் பண்டிகை கால ரெசிப்பிக்கள்.மனமிருந்தால் கூடவே கொஞ்சம் பணமும் இருந்தால் எல்லா நாளும் பண்டிகை தான்.
எச்சரிக்கை: இந்த பலகாரங்கள் நிறைய காலோறிச் சத்து அடங்கியவை . எனவே சிறிதாக செய்து, கொஞ்சமாய் சாப்பிட்டு வந்தால் , பிரச்சனையை இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதே நஞ்சு எனும்போது, இது போன்ற இனிப்பு மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த பலகாரங்கள் எம்மாத்திரம். அதிகம் செய்து வைத்து விட்டு, வீணாக்கவும் மனம் வராமல் , சாப்பிடும் இல்லத்தரசிகள் (என்னைப்போல்) குறைவாக செய்து கொள்ளுங்கள்.
விதம் விதமான பலகாரங்கள் !
coconut stuffed கோயா லட்டு
தேவையானவை: சர்க்கரை இல்லாத கோவா – அரை கப், சர்க்கரை – கால் கப், மஞ்சள் பொடி, சுத்தமான குங்குமபூ – தலா கால் டீஸ்பூன்.
தேங்காய் பூரணத்துக்கு: தேங்காய் துருவல் – ஒரு கப், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் கப், பொடித்த முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன் .
செய்முறை: அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை விட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் நீரோ பாலோ விடவும். பின்பு தேங்காய் துருவலை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். இறக்கும் முன்பு முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும். பூரணம் ரெடி!
மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் கோவா, சர்க்கரை, மக்ஞ்சல், குங்கமப் பூ, சேர்த்து, கையில் ஒட்டாமல் வரும்வரை கிளறி ஆற விடவும். இப்போது இந்த கோவாவிலிருந்து சிறிய உருண்டையை எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தட்டி, நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, நன்றாக உருட்டி வைக்கவும். லேசான சூட்டில் லட்டின் மேல் லேசாக கத்தியால் கீறிவிடவும்.
——————————————————————————–
பட்டர் கை முறுக்கு
தேவையானவை: அரிசி மாவு – அரை கப், வறுத்த உளுந்து மாவு – அரை டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு, பெருங்காயம் – தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், மஞ்சள் பொடி , சீரகம், உப்பு , பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசையவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து கைகளினால் முறுக்கு சுற்றவும். முறுக்கு சுற்றத் தெரியாதவர்கள் மாவை அச்சில் போட்டு முறுக்கு சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
Choclate Balls
தேவையானவை: வெண்ணெய், சர்க்கரைத்தூள் – தலா அரை கப், மாரி பிஸ்கட் தூள் அல்லது ஆரோரூட் பிஸ்கட் தூள் – ஒரு கப், முந்திரி, பாதாம் தூள் – கால் கப், கோகோ பவுடர், சாக்லேட் பவுடர் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன், கொப்பரை தேங்காய் துருவல் – தேவையான அளவு.
சாக்லேட் ஐசிங் செய்ய: ஐஸிங் சர்க்கரை (எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும் இல்லாவிட்டால் சர்க்கரையை மிசியில் நைசாக அரைத்துக் கொண்டால் ரெடி ) – ஒரு கப், கோகோ பவுடர் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், சுடுநீர் – 3 முதல் 4 டேபிள்ஸ்பூன்,
செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரைத்தூள் சேர்த்து மிருதுவாகக் குழைக்கவும். இதில் பொடித்த முந்திரி, பாதாம் தூள், பிஸ்கட் தூள், கோகோ பவுடர், சாக்லேட் பவுடர், எசன்ஸ் சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக செய்து வைக்கவும். (உருட்ட வராமல் போனால், இன்னும் சிறிது பிஸ்கட் தூளை சேர்த்துக் கொள்ளலாம்)
கோகோ பவுடர், ஐஸிங் சர்க்கரை இரண்டையும் சுடு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். சாக்லேட் ஐசிங் ரெடி!
ஒரு தட்டில் கொப்பரை தேங்காயை தூவவும். ஏற்கெனவே தயாரித்துள்ள உருண்டைகளை இந்த சாக்லேட் ஐசிங்-ல் அமிழ்த்தி, தேங்காய் துருவலில் புரட்டி எடுக்கவும்.
——————————————————————————–
Corn Flour தேன்குழல் or முறுக்கு
தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், சோள மாவு – அரை கப், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு – ஒரு சிறிய கப், எண்ணெய், தயிர் – கால் கப் ,சீரகம், பெருங்காயம், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவு, சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய், தயிர், பெருங்காயம், சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து தேன்குழல் அச்சில் போட்டுப் பிழியவும்.இதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
Dates Milk Burfi
தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சம்பழம் – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், பால் – ஒன்றரை கப், சர்க்கரை – 2 கப், நெய் – கால் கப், பொடித்த முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன் .
செய்முறை: பேரீச்சம்பழத் துண்டுகளை பாலில் அரைமணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் விழுதைப் போட்டு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். நெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். கலவை கெட்டியாக, ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி லேசான சூட்டில் துண்டுகள் போட்டு, முந்திரி தூவி அலங்கரிக்கவும்.
——————————————————————————–
மைதா மசாலா பாபட்
தேவையானவை: மைதா மாவு – அரை கப், இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், மிளகுத்தூள் , சீரகம் – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு, மஞ்சள் – தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன் இஞ்சி விழுது,சீரகம், மிளகுத்தூள், மசாலாத்தூள், வெண்ணெய், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் , மஞ்சள், உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்திகளாக இடவும். அதன்மேல் ஒரு சிறிய டப்பாவின் மூடியை வைத்து வட்டமாக வெட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
Instatnt Burfi
தேவையானவை: பால் பவுடர், கன்டென்ஸ்டு மில்க்- ஒரு டின், துருவிய தேங்காய், சர்க்கரைத்தூள் – தலா அரை கப், பொடித்த முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன் .
செய்முறை: பால் பவுடர், தேங்காய், சர்க்கரைத்தூள் , கன்டென்ஸ்டு மில்க் நான்கையும் நன்றாகப் பிசைந்து தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஃபிரிட்ஜில் வைத்து செட் ஆனதும் , துண்டுகள் போட்டு முந்திரியால் அலங்கரிக்கவும்.
——————————————————————————–
Protein Rich variety Mixture
தேவையானவை: கொள்ளு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, அவல், வறுத்த பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கலர் காராபூந்தி (கடலைமாவில் விரும்பிய கலர் பொடியை சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்து பூந்தி கரண்டியில் தேய்த்து பொரித்தெடுக்கவும்), ஓமம், அரிசி மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு, மஞ்சள் – தேவையான அளவு.
செய்முறை: அவல், கறிவேப்பிலையை பொரிக்கவும். கடலைப்பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித் தனியே ஊற வைத்து, உலர்த்தி பொரித்துக் கொள்ளவும். கடலைமாவு, அரிசி மாவு, ஓமம், உப்பு , மஞ்சள் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டுப் பிழிந்து கொள்ளவும். பொரித்த கொள்ளு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, வறுத்த பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கலர் காராபூந்தி, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வறுத்த கறிவேப்பிலை, ஓமப்பொடி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாகக் குலுக்கி காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
பொறித்த கார்ன் பிளகேஸ், சீராக மிட்டாய், பூந்தி , உலர் பழங்கள் போன்றவை கூட சேர்த்தல் வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்.
——————————————————————————–
Andra Sweet Tukda
தேவையானவை: மைதா – 2 கப், வெண்ணெய் – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, வெல்லம் – அரை கிலோ.
செய்முறை: மைதாவுடன் வெண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). இந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்திகளாக இட்டு, கத்தியால் துண்டுகள் போடவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, அதில் இந்தத் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்த சப்பாத்தித் துண்டு ஒரு கப் என்றால் வெல்லம் 2 கப் எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் சிறிது தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தைப் போட்டு, பாகு வைக்கவும் (சிறிது பாகை தண்ணீரில் விட்டு, கையில் எடுத்தால் உருட்ட வர வேண்டும். இதுதான் பதம்). இந்தப் பாகை, பொரித்து வைத்துள்ள துக்கடாவின் மேல் விட்டுக் கலக்கவும். ஆறியதும் எடுத்து டப்பாவில் வைக்கவும்.
——————————————————————————–
Mint Masala Seedai
தேவையானவை: வறுத்து அரைத்த உளுந்து மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – அரை கப், புதினா – ஒரு கைப்பிடி, இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய், உப்பு , மஞ்சள் – தேவையான அளவு.
செய்முறை: புதினாவை அரைத்து அரிசி மாவில் போட்டு, உளுந்து மாவு, இஞ்சி விழுது, மசாலாத்தூள், வெண்ணெய், சீரகம், மிளகுத்தூள், பெருங்காயத்தூள், உப்பு , மஞ்சள் சேர்த்துப் பிசையவும். சின்னச் சீடைகளாக உருட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், மிதமான தீயில் உருட்டிய சீடைகளைப் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
——————————————————————————–
Tirunelveli Manoharam
தேவையானவை: அரிசி – 4 கப், பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை கப், வெண்ணெய் அல்லது நெய் – கால் கப், வெல்லம் – ஒரு கிலோ, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் தண்ணீர் விட்டு நெய் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும். பெரிய துளை உள்ள முறுக்கு அச்சில் மாவைப் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும். இதை சிறிய துண்டுகளாக ஒடித்து வைக்கவும். ஒரு கப் முறுக்கு துண்டுகளுக்கு 2 கப் வெல்லம் என எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு, இளம் பாகு பதம் (உருட்டும் பதம்) வந்ததும் எடுத்து, முறுக்கு துண்டுகளின் மேல் விடவும். ஆறியதும் தனித் தனியாக வந்து விடும்.
——————————————————————————–
Apple Ribbon pakora
தேவையானவை: ஆப்பிள் துண்டுகள் – 6, கடலை மாவு, அரிசி மாவு – ஒரு கப், வெண்ணெய் – கால் டீஸ்பூன், உப்பு , மஞ்சள், பெருங்காயத்தூள் – தேவையான அளவு, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ஆப்பிள் துண்டுகளை தோல் சீவி நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்துப் பிசையவும். மாவை நாடா அச்சில் போட்டு, எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்..
——————————————————————————–
Dates and nuts Vadai
தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சம்பழ துண்டுகள் – ஒரு கப், பால் – அரை கப், முந்திரி, தேங்காய் துருவல் – தலா ஒரு கப், சர்க்கரை – ஒன்றரை கப்.
செய்முறை: முந்திரியை அரை மணிநேரம் பாலில் ஊற வைத்து பாலை வடித்து, தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை கடாயில் போட்டு சிறிது நேரம் வதக்கி, சர்க்கரை சேர்த்து கெட்டியாக கிளறி எடுத்து வைக்கவும். பேரீச்சம்பழத்துடன் சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். முந்திரி விழுதை வடைபோல் தட்டி நடுவில் பேரீச்சை உருண்டையை வைத்து மூடி, விரும்பிய வடிவத்தில் தட்டி வைக்கவும்.
——————————————————————————–
Jeerana (Digesting) Murukku
தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், வெற்றிலை – இரண்டு, ஓமம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், சோம்பு – இரண்டு ஸ்பூன் , துளசி இலை – ஒரு கைப்பிடி, வறுத்து அரைத்த உளுந்து மாவு – 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு – ஒரு கப், எண்ணெய், உப்பு மஞ்சள், பெருங்காயம் – தேவையான அளவு, வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெற்றிலை, துளசி, இஞ்சி, பூண்டு,சோம்பு , மிளகு, ஓமம் ஆகியற்றை மிக்ஸியில் நைஸாக அரைத்து அரிசி மாவு, கடலை மாவு, வறுத்த உளுந்து மாவு, உப்பு, மஞ்சள், பெருங்காயம், வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது எடுத்து முறுக்கு அச்சில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.
——————————————————————————–
Multi flour thattai
தேவையானவை: அரிசி மாவு, வறுத்து அரைத்த கம்பு மாவு, வறுத்த தினை மாவு, கேழ்வரகு மாவு – தலா ஒரு கப், வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன், எள் – 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு , மஞ்சள், பெருங்காயம் – தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன் கம்பு மாவு, திணை மாவு, கேழ்வரகு மாவு, வெண்ணெய், எள், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள், பெருங்காயம் ,கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது எடுத்து உருட்டி ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டவும். இதை எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
Rava Sweet Somasi
தேவையானவை: கசகசா – 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், முந்திரித்தூள், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன், ரவை – ஒரு கப் (மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்), குங்குமப்பூ-சிறிது, நெய் – 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரைத்தூள் – 6 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மாவாக அரைத்த ரவையுடன் கால் டீஸ்பூன் நெய் விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். திரும்பவும் பிசைந்து, 10 முதல் 15 நிமிடம் ஊற விடவும். கசகசா, பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் இவற்றை லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரைத்தூள், , குங்குமப்பூ,முந்திரித்தூள் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாகக் கலக்கவும். ஊறிய ரவை மாவிலிருந்து சிறிது எடுத்து அப்பளமாக இடவும். நடுவில் பொட்டுக்கடலை பூரணத்தை ஒரு டேபிள்ஸ்பூன் வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு நன்றாக அழுத்தி மூடி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
——————————————————————————–
Javvarisi Kola
தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், எள், வெண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன், ஊற வைத்த ஜவ்வரிசி – ஒரு கப், எண்ணெய், உப்பு, மஞ்சள் – தேவையான அளவு, பெருங்காயத்தூள், கொத்தமல்லி , பச்சை மிளகாய் – சிறிதளவு.
செய்முறை: அரிசி மாவுடன் எள், ஜவ்வரிசி, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் , பொடியாக நறுக்கிய கொத்தமல்லி , பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது மாவை எடுத்து நீளமாக உருட்டி வளைத்து இரு முனைகளையும் ஒட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
Wheat milk Burfi(Halva)
தேவையானவை: கோதுமைப் பால் – ஒரு கப் (2 கப் கோதுமையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் இதில் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து கெட்டியான பால் எடுக்கவும்), சர்க்கரை – 2 கப், நெய் – அரை கப், வறுத்த முந்திரித் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ- சிறிது .
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தண்ணீர் விடாமல் கிளறவும். சர்க்கரை கரைந்து இளம் பழுப்பு நிறத்தில் மாறும்போது. குங்குமப்பூ, கோதுமைப் பாலை சேர்த்துக் கிளறவும். இப்படிச் செய்யும்போது பாகு கரண்டியில் மொத்தமாகப் பிடித்துக் கொள்ளும். இருந்தாலும் விடாமல் கிளறவும். பாலுடன் சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும்போது கரைந்து விடும். பாகு கெட்டியாக வரும்போது நெய் சேர்த்து நன்றாகக் கிளறி, முந்திரித் துண்டுகளைச் சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.
——————————————————————————–
Potato omap podi
தேவையானவை: உருளைக்கிழங்கு – 1, கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், ஓமம் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு, மஞ்சள், பெருங்காயம் – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் உரிக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், ஓமம், வேக வைத்த உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து உப்பு , மஞ்சள் , பெருங்காயம் போட்டுப் பிசையவும். பிசைந்த மாவில் சிறிது எடுத்து ஓமப்பொடி அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும்.
நரகாசுரனைக் கொன்ற பிறகு கண்ணபிரான் எண்ணெய் தேய்த்துக் குளித்ததாக நம்புவதால் அந்த சம்பிரதாயமே இன்றும் பின்பற்றப்படுகிறது.
——————————————————————————–
Coco coconut Beda
தேவையானவை: மைதா மாவு – 2 கப், கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன் (இரண்டையும் சேர்த்து சலித்துக் கொள்ளவும்), தேங்காய் துருவல் – ஒரு கப், முந்திரி, கசகசா – ஒரு டீஸ்பூன், பாலேடு – ஒரு டேபிள்ஸ்பூன் (இந்த மூன்றையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்), சர்க்கரைத்தூள் – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: மைதா கலவையுடன் தேங்காய் கலவையை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்). இந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்தி கல்லில் வட்டமாக இட்டு, சிறிய துண்டுகளாக ‘கட்’ பண்ணவும். இதை சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து, எண்ணெயை வடித்து ஆற விடவும். லேசான சூடு இருக்கும்போதே, சர்க்கரைத்தூளில் புரட்டி வைக்கவும்.
——————————————————————————–
தேங்காய்ப் பால் முறுக்கு
தேவையானவை: அரிசிமாவு – ஒரு கப், தேங்காய்ப் பால் – கால் கப், கடலை மாவு – முக்கால் கப், சீரகம் – 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு , பெருந்காயத்தீல் – தேவையான அளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு, தேங்காய்ப் பால், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்துப் பிசையவும். இந்த மாவில் சிறிது எடுத்து தேன்குழல் அச்சில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
——————————————————————————–
Dates Sugiyan
தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சை துண்டுகள் – ஒரு கப், கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப், சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா ஒரு டேபிள் ஸ்பூன் .
மேல்மாவுக்கு: மைதா மாவு அல்லது கோதுமை மாவு – 2 கப், உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் தேங்காய் துருவல், கோகோ பவுடர், சர்க்கரை, முந்திரி, பாதாம், பிஸ்தா , பேரீச்சை துண்டுகளைப் போட்டு வதக்கி எடுத்து ஆற விடவும். மைதா மாவில் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இந்த மாவில் சிறிது எடுத்து எண்ணெய் தொட்டு, கிண்ணம்போல் செய்து கொள்ளவும். இதன் நடுவில் பேரீச்சை பூரணத்தை வைத்து மூடி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
Kaara Somasi
தேவையானவை: மைதா மாவு, தேங்காய் துருவல் – தலா அரை கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, வெண்ணெய் – கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு , மஞ்சள், பெருங்காயத்தூள் – தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவை வெண்ணெய், உப்பு , மஞ்சள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். தேங்காய் துருவலையும் மிளகாய் வற்றலையும் லேசாக வறுக்கவும். பொட்டுக்கடலையுடன், மிளகுத்தூள் சேர்த்துப் பொடிக்கவும். பிசைந்த மைதாமாவை சிறிய வட்டமாக இட்டு, வறுத்துப் பொடித்தவற்றை சிறிதளவு உள்ளே வைத்து, ஓரங்களை சோமாசி வடிவத்தில் மூடி ஒட்டவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, சோமாசியை போட்டு, மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
Dates Walnut Roll
தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சை துண்டுகள் – ஒரு கப், பால் – அரை கப், வால்நட் – கால் கப் (பொடித்துக் கொள்ளவும்), நெய், சர்க்கரை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கொப்பரை தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ- சிறிது .
செய்முறை: பேரீச்சம்பழத்தை பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் குங்குமப்பூ சேர்த்து, சர்க்கரையைப் போட்டு மிதமான தீயில் கெட்டியாகக் கிளறவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, பொடித்த வால்நட்டைப் போட்டு, நெய் சேர்த்து நன்றாக ஆற விடவும். சிறிய நீள் வடிவ உருண்டைகளாகச் செய்து, அதை தேங்காய் துருவலில் புரட்டி எடுக்கவும். 3 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து துண்டுகள் போடவும்.
——————————————————————————–
Butter cheedai
தேவையானவை: அரிசி மாவு – அரை கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு – கால் டேபிள்ஸ்பூன், ஓமம் – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு, பெருங்காயம் – தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன், உளுந்து மாவு, ஓமம், வெண்ணெய், உப்பு , பெருங்காயம் சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயை காய வைத்து, அதில் உருட்டிய சீடைகளைப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
——————————————————————————–
Sprouted Gram murukku
தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு – தலா ஒரு கப், அரிசி மாவு – அரை கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு, பெருங்காயம் – தேவையான அளவு, ஓமம் – கால் டீஸ்பூன்.
செய்முறை: கொண்டைக்கடலை, கொள்ளு இரண்டையும் மிக்ஸியில் நன்றாக மசியும்படி அரைத்துக் கொள்ளவும். இதனுடன் அரிசி மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயம், ஓமம் சேர்த்துப் பிசையவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காயும் எண்ணெய் பிழிந்து, மிதமான தீயில் வைத்து வெந்ததும் எடுக்கவும்.
——————————————————————————–
Raj Bhog
தேவையானவை: பனீர் – ஒரு கப் (ஒரு லிட்டர் பசும்பாலை நன்றாக திரித்து எடுக்கவும்), மைதா, ரவை – தலா ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ , மஞ்சள் – கால் டீஸ்பூன், சர்க்கரை – 3 கப், தண்ணீர் – ஆறரை கப், கோவா – கால் கப், ஏலக்காய்த்தூள்.
செய்முறை: பனீருடன் மைதா, ரவை, மஞ்சள் , குங்குமப்பூ சேர்த்து உள்ளங்கையில் அழுத்திப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கோவாவில் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து இதை பனீர் உருண்டைக்குள் வைத்து மூடி லேசாக உருட்டி வைக்கவும். கடாயை சூடாக்கி அதில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பாகு வைக்கவும். தள தளவென்று கொதிக்கும்போது பனீர் உருண்டைகளைப் போட்டு, மூடி போடாமல் 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு மூடியை முக்கால் பாகம் மூடி, 10 நிமிடம் கொதிக்க விடவும். மூடியை எடுத்து விட்டு, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கொதிக்கும்போது அடிக்கடி லேசாக தண்ணீர் தெளிக்கவும்.
——————————————————————————–
Maida spicy Biscut
தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், சீரகம், உப்பு, பெருங்காயம் – தேவையான அளவு,
செய்முறை: மைதா மாவுடன் மிளகுத்தூள், வெண்ணெய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்தி போல இட்டு டைமன் வடிவில் வெட்டி எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
Rice milk kheer gulab jaamoon
தேவையானவை: கோவா – அரை கப், மைதா – ஒரு டீஸ்பூன், பால் – ஒரு லிட்டர், அரிசி – ஒரு கப் (ரொம்பவும் நீளமாக இல்லாமல் சிறிய அரிசியாக இருக்க வேண்டும்), சர்க்கரை – கால் கப், பனை வெல்லம் – 2 கப், நெய் – தேவையான அளவு, குங்குமப்பூ – சிறிதளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற விடவும். பாலை நன்றாகக் கொதிக்க வைக்கவும். ஊறிய அரிசியை வடிகட்டி அதில் சேர்க்கவும். நன்றாகக் குழைய வெந்ததும் குங்குமப்பூ, பனை வெல்லத்தை சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும். பாயசம் ரெடி!கோவாவுடன் மைதா மாவை சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். கடாயில் சர்க்கரையை கொட்டி, ஒட்டும் பதத்தில் பாகு வைத்து அதில் பொரித்த உருண்டைகளை ஊற விடவும். குலோப் ஜாமூன் ரெடி!கப்பில் பாயசத்தை ஊற்றி, அதன் மேல் 2 குலோப் ஜாமூன் போட்டு பரிமாறவும்.
——————————————————————————–
Mango soji steamed cake
தேவையானவை: மாம்பழத் துண்டுகள், ரவை, வெல்லம் – தலா ஒரு கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், முந்திரி – இரண்டு டீஸ்பூன்.
செய்முறை: மாம்பழத் துண்டுகளை வெல்லத்துடன் சேர்த்து மசிக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும். அடுப்பில் ஒரு வாணலியில் பழக் கலவையைச் சேர்த்து சூடாக்கி, பாகு இளகும்போது, வறுத்த ரவை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், முந்திரி சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் ஆற விடவும். ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் தடவி அதில் பழக்கலவையைப் பரப்பி ஆவியில் 15 நிமிடம் வேக விடவும். பிறகு நன்றாக ஆறவிட்டு துண்டுகள் போடவும்.
மாம்பழத்தை அரைத்தும் கேசரி போல் செய்து துண்டு போடலாம்.
###################################################################################
Thanks for the Diwali special patsanams janu!
It would be nice if u published before Diwali!LOL
Intersting to know some of the new receipe like
Date walnut roll ,Raj bhog etc..
Thanks for sharing.
Thanks for the Diwali sweets.