சோயா சைவர்களுக்கான ப்ரோட்டீன் நிறைந்த ஒரு உணவு. இதை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்வதை விட வாரம் ஒரு தரம் சேர்த்துக் கொள்வது நல்லது என்று சமீபத்தில் பேசிக் கொள்கிறார்கள். இதில் எத்தனை நல்லது இருக்கிறதோ, அத்தனை தூரம் இது ஒரு ப்ராசஸ்டு (செயற்கை ) உணவு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இயற்கை முறையில் கிடைக்காத எதையுமே , தினசரி சாப்பிடுவதை விட அவ்வப் பொழுது சேர்த்துக் கொள்வது நல்லது என்று நான் நம்புகிறேன்.
############################################################################
விதம் விதமான சோயா உணவுகள்!
சோயா மஞ்சூரியன்
தேவையானவை: சோயா உருண்டைகள் – ஒரு சிறிய கப், மைதா, சோளமாவு – தலா அரை டேபிள்ஸ்பூன், சோம்புத்தூள்- 2 ஸ்பூன், மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பொடியாக நறுக்கிய குடை மிளகாய்- 3, பச்சை மிளகாய் – 5, இந்துப்பு- ஒரு சிட்டிகை , சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், தக்காளி – 1, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி – சிறிதளவு.
செய்முறை: சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து பிழிந்து வைத்துக் கொள்ளவும். மைதா, சோளமாவில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். அதில் சோயா உருண்டைகளை தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்-தெடுக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு , பச்சைமிளகாய், தக்காளி, குடமிளகாய் போட்டு வதக்கி, சோயா சாஸ், இந்துப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். இதில் பொரித்த சோயா உருண்டைகளை போட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
——————————————————————————–
சோயா உருண்டை குழம்பு
தேவையானவை: சோயா குருணை (கிரானுல்ஸ்) – ஒன்றேகால் கப், வேகவைத்த உருளைக்கிழங்கு – 2, தக்காளி விழுது – 2 டேபிள்ஸ்பூன், குடை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி , சோம்பு , பச்சை மிளகாய், புதினா, தேங்காய் அரைத்த விழுது, மல்லித்தூள், சோம்பு, கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை: வேகவைத்த உருளைக்கிழங்குடன், சோயா குருணை, உப்பு, காரம் சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கலவை தளர்வாக இருந்தால் சிறிது சோளமாவு சேர்த்துக் கொள்ளலாம். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு, இஞ்சி – சோம்பு விழுது, குடை மிளகாய் விழுது, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
இறக்குவதற்குமுன் இந்தக் கலவையில் உருண்டைகளை போடவும். விருப்பப்பட்டால் சிறிது ஃப்ரெஷ் கிரீம், முந்திரி விழுதும் சேர்க்கலாம். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
——————————————————————————–
சோயா அடை
தேவையானவை: சோயா உருண்டைகள் – 30, துவரம்-பருப்பு, கடலைப்பருப்பு, புழுங்கல் அரிசி – தலா அரை கப், பொடியாக நறுக்கிய முருங்கைக் கீரை (அ) வெந்தயக் கீரை, நறுக்கிய குடை மிளகாய் , தேங்காய்ப்பால் – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10, இஞ்சி – ஒரு துண்டு, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊறவிட்டு, இதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி, சோம்பு, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன், வெந்நீரில் போட்டு பிழிந்த சோயா உருண்டைகளை சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் நறுக்கிய குடை மிளகாய் , கீரை, தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல் காய்ந்ததும் அடைகளாக சுட்டு எடுக்கவும்
——————————————————————————–
சோயா பெசரெட்
தேவையானவை: துருவிய சோயா உருண்டைகள் (சோயா உருண்டைகளை வேக வைத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் துருவலாகிவிடும்), நறுக்கிய குடை மிளகாய் – தலா ஒரு கப், பாசிப்பயறு – ஒன்றரை கப், இஞ்சி – ஒரு துண்டு, மிளகு, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: ஊறவைத்த பாசிப்பயறுடன், மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும். இதனுடன் சோயா துருவலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவை விட்டு, வெந்ததும், குடை மிளகாயை தூவி சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு எடுக்கவும்.
இஞ்சிச் துகையல் இதற்கு ஏற்ற பக்க உணவாகும்.
——————————————————————————–
சோயா குழிப்பணியாரம்
தேவையானவை: துருவிய சோயா உருண்டைகள் – ஒன்றரை கப், துருவிய கேரட், கோஸ், நறுக்கிய குடை மிளகாய் – தலா ஒரு கப், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, துருவிய இஞ்சி, மிளகாய்த்தூள் , பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், புளித்த இட்லி மாவு, உப்பு, பெருங்காயம், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, பெருங்காயம், தாளித்து, நறுக்கிய குடை மிளகாய் , காய்கறிகள், வேகவைத்த சோயா துருவல், இஞ்சி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதை இட்லி மாவில் கலந்து குழிப் பணியாரமாக சுட்டு எடுக்கவும்.
——————————————————————————–
சோயா பருப்பு வடை
தேவையானவை: துருவிய சோயா, பொடியாக நறுக்கிய முட்டைக் கோசு , புதினா – தலா ஒரு கப், கடலைப் பருப்பு – ஒரு சிறிய கப், இஞ்சி – ஒரு துண்டு, பச்சை மிளகாய் – 6, மிளகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,
செய்முறை: கடலைப்பருப்பை ஊறவைத்து தண்ணீர் விடாமல், உப்பு, மிளகு, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சோயாவை வெந்நீரில் போட்டு பிழிந்து சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் பொடியாக நறுக்கிய முட்டைக் கோசு , புதினா சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
சோயா தால்
தேவையானவை: சோயா உருண்டைகள் – 30, துவரம் பருப்பு – ஒரு சிறிய கப், காய்ந்த மிளகாய் – 4, மஞ்சள்தூள், தக்காளி-2 , பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, தனியாத்தூள், புளிபேஸ்ட், சீரகத்தூள், வறுத்த வேர்க்கடலைப்பொடி, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை: துவரம்பருப்புடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும். சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு எடுத்து, பிழிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, புளி பேஸ்ட்டைத் தண்ணீரில் கரைத்து தனியாத்தூள், உப்பு, வெந்த துவரம் பருப்பு, சோயா உருண்டைகளை சேர்த்து கொதிக்கவிடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது கொத்தமல்லி, வறுத்த வேர்க்கடலைப் பொடி தூவி இறக்கவும்.
——————————————————————————–
சோயா கட்லெட்
தேவையானவை: சோயா ஃபிளேக்ஸ் (கார்ஃன் ஃபிளேக்ஸ் மாதிரி இது சோயா ஃபிளேக்ஸ்) – ஒரு சிறிய கப், வேகவைத்த உருளைக்கிழங்கு – 2, துருவிய கேரட், வேக வைத்த பச்சைப் பட்டாணி – தலா அரை கப், மிளகாய்த்தூள், மல்லித்தூள் , சோம்புத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி- துருவியது சிறிதளவு, மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, தக்காளி சாஸ் , ஸாய் (சோயா) சாஸ் – சிறிதளவு.
செய்முறை: சோயா ஃபிளேக்ஸை வெந்நீரில் போட்டு பிழிந்து எடுத்து, மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், பட்டாணி, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், இஞ்சி , ஸாய் சாஸ், தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறவும். இதை விரும்பிய வடிவில் தட்டிக் கொள்ளவும்.
மைதா மாவை தண்ணீரில் கரைத்து, இந்தக் கரைசலில் கட்லெட்டைத் தோய்த்து பிரெட் தூளில் புரட்டவும். தோசைக்கல் காய்ந்ததும் அதில் கட்லெட்டைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுக்கவும்.
தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
——————————————————————————–
சோயா கார சப்பாத்தி
தேவையானவை: சோயா மாவு (அ) சோயா குருணை (அ) அரைத்த சோயா உருண்டை விழுது – ஒரு கப், கோதுமை மாவு – ஒரு கப், உப்பு , மஞ்சள் , பெருங்காயத்தூள் – தேவையான அளவு, சோம்பு (அ) சீரகம், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை: நெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்திகளாக இட்டு சூடான கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும். நெய் தடவி பரிமாறவும்.
——————————————————————————–
சில்லி சோயா
தேவையானவை: சோயா உருண்டைகள் – ஒன்றரை கப், தக்காளி-2, குடை மிளகாய் – 2, இஞ்சி, சோம்பு, பச்சை மிளகாய் விழுது, தக்காளி சாஸ், சோயா சாஸ், – தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, சோளமாவு – 2 டீஸ்பூன்.
செய்முறை: சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டுப் பிழிந்தெடுத்து, இரண்டிரண்டாக நறுக்கவும். இதனுடன் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து ஊறவிடவும்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து அதில் கலந்த மாவை சிறிது சிறிதாகப் போட்டு பொரித்தெடுத்தெடுக்கவும்.வாணலியில் சிறிது எண்ணை விட்டு , சீரகம் தாளித்து, விதை நீக்கிய தக்காளித் துண்டு, நீள வாக்கில் அறிந்த குடை மிளகாய் இவற்றி போட்டு நன்கு வதக்கி, பொரித்தெடுத்த சோயா உருண்டைகளை போட்டு பிரட்டவும். கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்.
——————————————————————————–
சோயா பெப்பர் ஃப்ரை
தேவையானவை: சோயா உருண்டைகள் – ஒரு சிறிய கப், கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி, சோம்பு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்த விழுது, கடுகு, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி, குடை மிளகாய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மஞ்சள் , எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டுப் பிழிந்தெடுத்து இரண்டிரண்டாக வெட்டி தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி சோம்பு விழுது சேர்த்து வதக்கவும். இதில் சோயா உருண்டைகளை சேர்த்து, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து சுருள வதக்கி கொத்து மல்லி தழை தூவி இறக்கவும்.
இஞ்சி சோம்பு மசாலா அரைக்கும்போது முந்திரி மற்றும் கசகசாவையும் சேர்த்துக் கொள்ளலாம். நன்றாக இருக்கும்.
——————————————————————————–
சோயா சுசியம்
தேவையானவை: வேக வைத்துத் துருவிய சோயா உருண்டைகள் – 30, ஏலக்காய்த்தூள், முந்திரி, பாதாம்,பிஸ்தா, குங்குமப்பூ, நெய் – சிறிதளவு, மைதா கரைசல், வெல்லம், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: சோயா துருவலை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி, வடிகட்டி இதனுடன் சேர்த்து கிளறவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ,ஏலக்காய்த்தூள் சேர்த்து சுருள கிளறவும். ஆறியவுடன் உருண்டைகளாகப் பிடித்து மைதாக் கரைசலில் முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
சோயா லட்டு
தேவையானவை: சோயா மாவு – 2 கப், சர்க்கரை – ஒன்றரை கப், நெய் – ஒரு கப், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், குங்குமபூ – சிறிதளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு சோயா மாவைப் போட்டு வாசனை வரும்வரை வறுக்கவும். சர்க்கரையைப் பொடித்து, மாவு, ஏலக்காய்த்தூள் , குங்குமப்பூ, சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யை சூடாக்கி மாவில் விட்டுக் கிளறவும். முந்திரிப்பருப்பைச் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும்.
——————————————————————————–
சோயா ஃஸ்டப்டு பூரி
தேவையானவை: சோயா துருவல் – அரை கப், நறுக்கிய குடை மிளாய் – ஒரு கப், கோதுமை மாவு – 2 கப், சோம்பு, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் அரைத்த விழுது – தலா ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு, மஞ்சள் , எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து சப்பாத்திக்குப் பிசைவதுபோல் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, நறுக்கிய குடை மிளகாய் , இஞ்சி, சோம்பு விழுது, சோயா, உப்பு, மஞ்சள் சேர்த்து நன்கு கிளறி, சுருள வதக்கவும். பிசைந்த மாவில் சிறிது எடுத்து சப்பாத்திகளாக இட்டு அதன் நடுவில் கலவையை வைத்து மூடி, சிறு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
சோயா ஊத்தப்பம்
தேவையானவை: சோயா துருவல், பொடியாக நறுக்கிய குடை மிளகாய் – தலா ஒரு கப், துருவிய கேரட்- ஒரு கப், தோசை மாவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.
செய்முறை: சோயா துருவலை சிறிது நெய்யில் வறுக்கவும். கடாயில் எண்ணெய் காயவைத்து, குடை மிளகாயை போட்டு வதக்கவும். இதில், வறுத்த சோயா துறுவல், கேரட் துருவல், உப்பு சேர்த்து கிளறி, தோசை மாவில் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து மாவை தடிமனாக விட்டு கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்றாக வெந்ததும்.. எடுக்கவும்.
——————————————————————————–
சோயா பர்ஃபி
தேவையானவை: சோயா மாவு – அரை கிலோ, சர்க்கரை – நாலரை கப் (சின்ன சைஸ்), நெய் – கால் கிலோ, முந்திரி, பிஸ்தா, பாதாம், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு, சோயா மாவைப் போட்டு நன்றாக வறுக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த்தூள், பாதாம், முந்திரி , குங்குமப்பூ சேர்த்துக் கிளறி ஒட்டாமல் வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி பிஸ்தாவை தூவி.. ஆறியதும் துண்டுகள் போடவும்.
——————————————————————————–
சோயா பாலக்கீரை மசியல்
தேவையானவை: சோயா உருண்டைகள் – ஒரு சிறிய கப், பாலக் கீரை – ஒரு கட்டு, பனீர்- அரை கப், வெண்ணெய் மற்றும் எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், தக்காளி, நறுக்கிய குடை மிளகாய் – ஒரு கப் , தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன், சோம்புப் பொடி – 2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாலக் கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் விட்டு குடை மிளகாய் , தக்காளி, இஞ்சி, சோம்பு தேங்காய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்நீரில் போட்டுப் பிழிந்தெடுத்த சோயா உருண்டைகளை சேர்க்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும். இதனுடன், மசித்த கீரையை சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் ப்ரெஷ் பனீர் சேர்த்து இறக்கவும்.
சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சைட் டிஷ். சூடான சாதத்திலும் பிசைந்தும் சாப்பிடலாம்.
——————————————————————————–
சோயா கிச்சடி
தேவையானவை: சோயா குருணை – 2 கப், பொடியாக நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ், உருளை, குடமிளகாய், பச்சை பட்டாணி கலவை – ஒன்றரை கப், நீளவாக்கில் நறுக்கிய சோம்புக் காய் , பொடியாக நறுக்கிய தக்காளி – தலா அரை கப், நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய்-4, இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை, சோம்பு, கிராம்பு, புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, நெய் – சிறிதளவு.
செய்முறை: சோயா குருணையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு தாளிக்கவும். இதில், நறுக்கிய சோம்புக் காய் , தக்காளி, இஞ்சி விழுது, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்கறி கலவை, வறுத்த சோயா குருணை, உப்பு சேர்த்து, தேவையான அளவு சூடான தண்ணீர் விட்டுக் கிளறவும். எல்லாம் சேர்ந்து உப்புமா பதத்துக்கு வெந்ததும் இதில் நெய் விட்டு புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
——————————————————————————–
சோயா முளைக்கீரை மசாலா
தேவையானவை: சோயா துருவல் – ஒரு கப், முளைக் கீரை – ஒரு கட்டு, பொடியாக நறுக்கிய விதை நீக்கப் பட்ட தக்காளி – ஒரு கப்,காய்ந்த மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு, – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்.
செய்முறை: முளைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு, பிழிந்து துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தக்காளி போட்டு வதக்கி, சோயா துருவல், கீரை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீரைத் தெளிக்கவும். கீரை, சோயா வெந்தவுடன், உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் சமைத்து தேங்காய் துருவலை தூவி இறக்கவும்.
——————————————————————————–
சோயா சாக்லேட்
தேவையானவை: சோயா குருணை – ஒரு கப், சர்க்கரை, மில்க்மெய்ட் – தலா அரை கப், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கோகோ பவுடர் அல்லது கேரப் seed பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய், முந்திரி -சிறிதளவு.
செய்முறை: சோயா குருணை சிறிது நெய் விட்டுப் பிசறி, வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் சர்க்கரை, மில்க்மெய்டு சேர்த்துக் கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் கோகோ அல்லது கேரப் seed பவுடர், வெண்ணெய் சேர்த்துக் கிளறவும். கையில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும் இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும். கையில் நெய் தடவிக் கொண்டு நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக ஓவல் வடிவத்தில் உருட்டி வைக்கவும்.இதன்மேல் முந்திரியை ஒட்டி அலங்கரிக்கவும்.
——————————————————————————–
சோயா பனீர் டிக்கா
தேவையானவை: உதிர்த்த சோயா பனீர் (tofu )– அரை கப், பிரெட் தூள் – கால் கப், மசித்த உருளைக்கிழங்கு – ஒன்றரை கப், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கேரட், நறுக்கிய குடை மிளகாய், விதை நீக்கப் பட்ட தக்காளி – தலா அரை கப், தக்காளி சாஸ், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா 2 டீஸ்பூன், மல்லித்தழை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: சோயா பனீர், கேரட், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், நறுக்கிய மல்லித்தழை இவற்றைக் கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, தக்காளி, குடை மிளகாயை போட்டு வதக்கி, உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தக்காளி சாஸ் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
ஆறியதும் சிறிது எடுத்து கிண்ணங்கள் போல் செய்து உள்ளே கலவையை சிறிது வைத்து, மூடி லேசாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, பிரெட் தூளில் பிரட்டி பரிமாறவும்.
——————————————————————————–
சோயா-நட்ஸ் மிக்ஸர்
தேவையானவை: சோயா குருணை – ஒரு கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – கால் கப், முந்திரி, பிஸ்தா, பாதாம் , கலர் இனிப்பு மிட்டாய் வகைகள் – தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
செய்முறை: சோயா குருணையில் சிறிது நெய் பிசறி சூடான கடாயில் சிறிது சிறிதாகப் போட்டு மொறுமொறுப்பாக வறுக்கவும். இதனுடன் மற்ற எல்லாவற்றையும் கலந்து வைக்கவும்.
——————————————————————————–
சோயா வடகம்
தேவையானவை: காய்ந்த சோயா – 2 கப், புதினா, நறுக்கிய தக்காளி, குடை மிளகாய் – தலா ஒரு கப், ரவை – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, பச்சை மிளகாய் – 3, சீரகம் – கால் கப், உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தேவையான அளவு.
செய்முறை: சோயாவை 12 மணி நேரம் ஊற வைத்து, உப்பு, பச்சை மிளகாய்களுடன் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். கடைசியில், நறுக்கிய தக்காளி, குடை மிளகாய் மற்றும் புதினாவைச் சேர்த்து ஓரிரண்டு முறை சுற்றி கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, ரவை, சீரகம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை கிள்ளிப் போட்டு வெயிலில் இரண்டு மூன்று நாட்கள் நன்றாகக் காய விடவும்.
தேவைப்படும்போது பொரித்து சாப்பிடலாம்.
——————————————————————————–
சோயா பொரி உருண்டை
தேவையானவை: சோயா குருணை மாவு – ஒரு கப், கறுப்பு எள், வறுத்த வேர்க்கடலை, கொப்பரை துண்டுகள் – தலா 2 டேபிள்ஸ்பூன், தூள் வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள், நெய் – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வறுத்த சோயா குருணை மாவை நெய்யில் பிசறி, வெறும் கடாயில் ஒவ்வொரு பிடியாகப் போட்டு மொறு மொறுப்பாக வறுக்கவும். எள்ளை சுத்தம் செய்து வறுத்து, வேர்க்கடலையை உடைத்துச் சேர்க்கவும். இதனுடன் கொப்பரையை லேசாக வறுத்துப் போடவும்.
வெல்லத்தை கம்பிப் பாகு காய்ச்சி, ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து வைத்துள்ளவற்றில் கொட்டி கலக்கவும். லேசாக ஆறியதும் மிதமான சூட்டில் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
புரதச் சத்து நிறைந்த சத்தான உருண்டை இது.
——————————————————————————–
பேடா
தேவையானவை: சோயா குருணை, பால், சர்க்கரை – தலா ஒரு கப், நெய் – கால் கப், இனிப்பில்லாத கோவா – அரை கப், வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன், முந்திரி , பாதாம் மற்றும் பிஸ்தா துருவல் – தலா 1 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ- சிறிதளவு .
செய்முறை: சோயா குருணையை வெந்நீரில் பத்து நிமிடம் ஊறவிடவும். இதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பால் சேர்த்து வேக விடவும். சர்க்கரையில் கால் கப் தண்ணீர் விட்டு குங்குமப்பூ போட்டு, பிசுக்கான பாகு பதத்தில் காய்ச்சவும். நெய்யில் பாதியை கடாயில் விட்டு, சர்க்கரைப்பாகு, சோயா கிரானுல்ஸ், எசென்ஸ் சேர்த்துக் கிளறவும். ஐந்து நிமிடம் கிளறியதும் கோவாவை உதிர்த்து சேர்த்துக் கிளறவும். மீதி நெய்யையும் இதில் விட்டுக் கிளறி எல்லாம் சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் பரத்தி, நெய்யில் வறுத்த உலர் பருப்புத் துருவலை தூவவும். சிறிது ஆறியதும் துண்டுகள் போடவும்.
——————————————————————————–
துக்கடா
தேவையானவை: சோயா மாவு, கோதுமை மாவு, முந்திரி விழுது – தலா கால் கப், பால், பொடித்த சர்க்கரை – தலா அரை கப், பிரெட் – 10 ஸ்லைஸ், நெய் (அ) ரீஃபைண்ட் எண்ணெய் – தேவையான அளவு, ஃப்ரெஷ் கிரீம் – 2 கப், குங்குமப்பூ – ஒரு டீஸ்பூன், டூட்டிஃப்ரூட்டி, முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை 2 அங்குல சதுர துண்டுகளாக நறுக்கவும். மாவுகளைப் பால் விட்டுக் கரைத்து பிரெட் துண்டுகளை அதில் புரட்டி எடுத்து, கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். பிறகு சர்க்கரைத் தூளில் புரட்டவும். துக்கடா ரெடி!
பாலில் குங்குமப்பூவை ஊறவிடவும். கிரீமை நன்றாக அடித்து, முந்திரி விழுது, குங்குமப்பூ ஊறிய பாலை சேர்த்து, செய்து வைத்துள்ள துக்கடாக்களை அதில் போடவும். நன்றாக ஊறியதும் டூட்டிஃப்ரூட்டி, நெய்யில் வறுத்த உலர் பருப்பு வகைகளை தூவி கிண்ணத்தில் போட்டுப் பரிமாறவும்.
ஃபிரிட்ஜில் வைத்தும் ரசமலாய் போலச் சாப்பிடலாம்.
——————————————————————————–
சோயா பனீர் பஜ்ஜி
தேவையானவை: சோயா பனீர் துண்டுகள், கடலைமாவு – தலா ஒரு கப், பச்சரிசிமாவு – ஒரு கைப்பிடி, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன், சோடா உப்பு – ஒரு சிட்டிகை, மஞ்சள் பொடி , பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: சோயா பனீரை இரண்டங்குல சதுரத் துண்டுகளாக நறுக்கவும். எண்ணெய், சோயா பனீர் துண்டுகளை தவிர மற்ற சாமான்களைத் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். சோயா பனீர் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
——————————————————————————–
சோயா வடைகறி
வடைக்குத் தேவையானவை: முளை கட்டிய சோயா, கடலைப்பருப்பு – தலா அரை கப், நறுக்கிய பச்சைமிளகாய் – 4, இஞ்சி – சிறு துண்டு, கரம் மசாலாத்தூள், சோம்பு – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய குடை மிளகாய் மற்றும் சோம்புக் காய் – தலா அரை கப், உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் – தேவையான அளவு, பச்சரிசி மாவு – கைப்பிடி அளவு.
கறி செய்யத் தேவையானவை: நறுக்கிய குடை மிளகாய் – அரை கப், சோம்பு, தேங்காய், போட்டுக் கடலை , கச கசா, முந்திரி, இஞ்சி சேர்த்து அரைத்த விழுது மூன்று டேபிள் ஸ்பூன் , மிளகாய்த்தூள் – தலா ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு, மல்லித்தழை, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: சோயாவை 4 மணி நேரமும் கடலைப்பருப்பை 2 மணி நேரமும் குளிர்ந்த நீரில் தனித்தனியே ஊறவிடவும். இரண்டிலும் உப்பு, சோம்பு சேர்த்துத் தனித்தனியே கரகரப்பாக அரைக்கவும். இந்த இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, மற்ற சாமான்களை சேர்த்துப் பிசைந்து மசால்வடையாகப் பொரித்தெடுக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, குடை மிளகாய், சோம்புக் காய் போட்டு வதக்கி, சோம்பு, தேங்காய், இஞ்சி மசாலா விழுது, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
வடைகளைச் சிறு துண்டுகளாக்கி அதில் போட்டுக் மிதமான தீயில் கிளறவும். எல்லாம் சேர்ந்தாற்ப்போல் வந்ததும் மல்லித்தழை தூவி பரிமாறவும்.
——————————————————————————–
மசாலா வறுவல்
தேவையானவை: பச்சை பட்டாணி, சோயா உருண்டைகள் – தலா ஒரு கப், நறுக்கிய குடை மிளகாய் – அரை கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை – தேவையான அளவு.
அரைக்க: தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2.
செய்முறை: சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் மூடிவைக்கவும். பிறகு எடுத்துப் பிழிந்து, இரண்டிரண்டாக நறுக்கவும். பச்சைப் பட்டாணியை வேகவைத்து, பொடி வகைகளை சேர்த்துப் பிசறவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து இதனுடன் சோயா உருண்டைகள், பிசறிய பச்சைப்பட்டாணி, உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். கலந்து வைத்தவற்றைச் சேர்த்து மசாலா வாசம் போக நன்றாகக் கிளறவும். இடையிடையே சிறிது எண்ணெய் விட்டுக் கிளறவும். நல்ல மணம் வந்ததும் இறக்கிவிடவும்.
எல்லா வகை சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ் இது.
——————————————————————————–
சோயா பனீர் கோஃப்தா
கோஃப்தா செய்ய தேவையானவை: துருவிய சோயா பனீர் – ஒரு கப், வெந்த உருளைக்கிழங்கு – 4, நறுக்கிய மல்லித்தழை, சோளமாவு – தலா 2 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன், மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
கிரேவி செய்ய தேவையானவை: சோம்புக் காய் விழுது – அரை கப், தக்காளி விழுது – ஒரு கப், சோளமாவு, இஞ்சி ,தேங்காய், கசகசா, சோம்பு சேர்த்து அரைத்த விழுது விழுது – மூன்று டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி, ஃப்ரெஷ் கிரீம் – தலா 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், உப்பு, மல்லித்தழை – தேவையான அளவு.
செய்முறை: வெந்த உருளைக்கிழங்கை மசித்து, கோஃப்தாவுக்கான மற்ற சாமான்களை அதிகம் அழுத்தாமல் கலந்து, சிறு உருண்டைகளாக்கி, ஆவியில் வேகவிடவும். விருப்பப்பட்டால் எண்ணெயிலும் பொரிக்கலாம்.
கிரேவி: வெண்ணெயில் சோம்புக் காய் விழுது, இஞ்சி – சோம்பு மசாலா விழுது , தக்காளி விழுது சேர்த்து வாசனை வரும்வரை வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். சோள மாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, வறுத்த முந்திரி, கோஃப்தாக்களை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு , பிரெஷ் க்ரீம் கலந்து இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்
###################################################################################
############################################################################
இதென்ன தீபாவளி சர வெடி மாதிரி பதிவுகள் தொடர்ந்து வந்து எங்களை
போன்ற திரைகடல் வாசகிகளை வியப்பில் ஆழ்த்துகின்றன !
சோயாவில் இத்தனை வகைகளா!
சேமிக்க வேண்டிய குறிப்புகள்.
அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்!
ஜானு ,உங்களுடைய 125 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
விரைவில் 1000 பதிவுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் அருளட்டும் !
very nice and thank you for your health tips